சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவ்வைத்தியசாலையில் முறிவு நெரிவு வைத்தியத்தில் தன்னிகரற்றுப் பணிபுரிந்தவர் வைத்தியர் சமத்தர் ஆவார். சமத்தர் என்பது இவ்வைத்திய பரம்பரையினரின் பட்டப்பெயராகும். (அவரது உண்மைப்பெயர் தெரியவில்லை). சமத்தர் என்றால் சாமர்த்தியசாலி, சமயோசிதமாகச் செயற்படுபவர்;, கெட்டிக்காரர் என்றெல்லாம் கருத்துக்களுண்டு. வைத்திய நூல்களை அல்லது ஏட்டுச்சுவடிகளை எவ்வளவு கற்றிருந்தாலும் நோயாளியின் நோய்நிலையை அனுசரித்து, சமயோசிதமாகக் கையாள்வதிலேயே ஒரு வைத்தியனின் திறமை தங்கியுள்ளது.
ஒட்டகப்புலம் வைத்தியசாலையானது யாழ்ப்பாணத்திலுள்ள சுதேச வைத்தியசாலைகளில் ஓரளவு பெரியதாகக் காணப்படுகிறது. நோயாளிகள் தங்கிச்சிகிச்சை பெறுவதற்காக ஏழு பெரிய அறைகளும் ஒரு வராந்தாவும் உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகும் வேளைகளில் அவர்களை வராந்தாவிலும் தங்க வைப்பதுண்டு. நோயாளிகள் வெகுதூர இடங்களிலிருந்தெல்லாம் இங்கு வருவதால் அவர்கள் குடும்பத்தவரும் உடன்தங்கியிருந்து சமையல் செய்து சாப்பிடுவர். அதற்கான வசதிகளையும் வைத்தியர் செய்து கொடுத்துள்ளார். மேலும் மருந்து அரைத்தல், இடித்தல், எண்ணெய் காய்ச்சுதல் என்பவற்றுக்குத் தனியான மருந்து தயாரிப்புக் கூடமுமுள்ளது. இவர்;களால் தயாரிக்கப்படும் நோவெண்ணெய்க்கு வெளிநாடுகளிலும் வரவேற்பிருந்தது. அக்காலத்தில் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் சிறந்த அறுவைச்சிகிச்சை வைத்தியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையிலும் பெரும்பாலான மக்கள் முறிவு நெரிவு வைத்தியத்துக்கு ஒட்டகப்புலத்தையே நாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முறிந்த எலும்புகளைச் சரிவரப் பொருந்தச் செய்து மட்டை கட்டுதல், புக்கை கட்டுதல், நோவெண்ணெய் பூசுதல், மசாஜ் செய்து தடவுதல் என்று இவர்களின் சிகிச்சை முறைகள் பலவகைப்பட்டதாகும். நோயாளியின் நோய்நிலையை அனுசரித்து அவருக்கு எவ்வித சிகிச்சை முறையை மேற்கொள்ளவேண்டும் என்பதிலேயே சிகிச்சையின் வெற்றி தங்கியுள்ளது. அதை இவ்வைத்தியர்கள் தமது பரம்பரை அறிவால் நன்கு கைவரப்பெற்றிருந்தனர்.
பல நூற்றாண்டுகளாகப் பரம்பரை வைத்தியமாக வெற்றிகரமாகக் கையாளப்பட்டுவந்த இம்மருத்துவ முறையை அழியவிடாமல் பாதுகாத்து மக்கள் பயன்பெறுவதற்கேற்ற ஏது நிலைகள் உருவாக வேண்டும்.
நன்றி :
Drசே.சிவசண்முகராஜா MD(s) சிரேஸ்டவிரிவுரையாளர், சித்தமருத்துவப்பிரிவு, யாழ். பல்கலைக்கழகம்
திருமதி சி.பத்மராணி,கலாசார உத்தியோகத்தர்.
மாருதப்புரவீகம், வலிகாமம் வடக்கு கலாசாரப் பேரவை பண்பாட்டு மலர் 2021.