Thursday, February 13

“யாழ் மண்ணே வணக்கம்”
உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகளே ஒரு கணம் சிந்திப்போம்.
‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே
அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே’


யாழ்ப்பாணம்! இது தமிழ்ர்களின் அடையாள இருப்பினை வெளிக்காட்டும் ஒரு பாரம்பரியமான பிரதேசம். இலங்கைத்தீவில் தமிழர்களுடைய அடையாளங்களும் பண்பாட்டு விழுமியங்களும் பெருமளவில் பேணிப்பாதுகாக்கும் பிரதேசங்களில் யாழ்ப்பாணத்திற்கு முக்கிய பங்குண்டு. தொல்லியலிலும் அடையாள இருப்பினை உறுதி செய்வதிலும் பாரம்பரியம்மிக்க பிரதேசமாக விளங்கும் யாழ்ப்பாணத்தின் பெருமைகளை அடுத்து வருகின்ற தலைமுறையினருக்கு கையளிப்பதன் ஊடாகவே ஒரு மரபுரிமைச்சொத்து பாதுகாக்கப்படும். ‘சாகில் தமிழ் படித்துச்சாக வேண்டும். என் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்’ என்று தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த பண்டிதர் சச்சிதானந்தம் போன்ற பல்வேறு புலவர்கள் தம் கால்பட நடந்த மண் இது. வரலாற்றுக்காலம் தொட்டு யாழ்ப்பாணத்திற்கென்றெரு தனித்துவம் இருந்திருக்கின்றது. தமிழ்ர்களுடைய தொன்மையான ஆதிக்குடிகளின் மபுவழிப்பட்ட வழித்தோன்றல்களால் இன்றும் யாழ்ப்பாணம் தனது பெருமைகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது.

இத்தகைய பெருமைகளையும் பாரம்பரியங்களையும் வருகின்ற தலைமுறை அறிந்து கொள்வதற்கும், நேரிடையாக பார்த்துக்கொள்வதற்குமான ஒரு ஏற்பாடே யாழ்ப்பாண வாழ்வும் வளமும் சார்ந்த நூற்றாண்டுப் புலமைகளின் தேடல்களை ஆவணப்படுத்தி அடுத்த சந்ததியினருக்கு கையளிப்பதற்கான பெரும்முயற்சியே யாழ்ப்பாணப்பெட்டகம்-நிழலுருக்கலைக் கூடம் ஆகும்.

யாழ்ப்பாணத்து மரபுரிமைகள், பண்பாட்டமிசங்களை எடுத்தியம்பும் வகையிலான தேடல்களில் யாழ்ப்பாணம் குரும்பசிட்டியைச் சேர்ந்த கலைஞானி அ.செல்வரத்தினம், மற்றும் ஆவணஞானி இரா.கனகரத்தினம், வியாபாரிமூலையைச் சேர்ந்த நா.சொக்கநாதபிள்ளை, யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் நூலகருமாகிய ஸ்ரீகாந்தலட்சுமி அருளாநந்தம் ஆகிய நால்வரும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துச் செயற்பட்ட மூலவர்களாவர். ஆனால் நாம் அவர்களது அர்ப்பணிப்புமிகு பணிகளை உணரத்தவறியமையால் அவர்களால் சேகரிக்கப்பட்ட வரலாற்றுச் சான்றுப் பொருள்களை இழந்து நிற்கின்றோம்.

யாழ்ப்பாணத்துத் தொன்மையான மரபுரிமைச் சொத்துக்கள் இல்லாமற்போய்விட்ட நிலையில் எஞ்சி இருக்கும் சிலவற்றையேனும் பாதுகாக்கும் நோக்கில் எம்மால் ஆரம்பிக்கப்பட்டதே யாழ்ப்பாணப்பெட்டகம்-நிழலுருக்கலைக்கூடம் என்னும் மரபுரிமை பாதுகாப்பு அமைப்பாகும். தமிழால் வாழ்பவர்களுக்கு மத்தியில் தமிழுக்காக வாழ்ந்தவர்கள்-வாழ்பவர்கள் பற்றிச்சிந்திக்கும் தருணமிது.

உலக வரலாறு என்பது மனிதனின் ஒவ்வொரு முதன்மையான அசைவுகளையும் பேணிப்பாதுகாத்து அவற்றை ஆவணப்படுத்தி இருக்கின்றது. தமிழர்கள் போற்றிய காமம் சார்ந்த பாலியலைக்கூட உலகத்தவர்கள் ஒரு நூதனசாலையாக வடிவமைத்து அடுத்த சந்ததியினருக்காக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இதேபோல உலக நாகரிகங்களது தொன்மையை அறிந்து கொள்வதற்கு இன்று உலகில் பல்வேறு வகையான நூதனசாலைகள் மற்றும் ஆவணக்காப்பகங்கள் உள்ளன. மனிதனின் தோற்றம் முதல் அவனது பரிமாண வளர்ச்சி நிலையில் உலகில் இருந்த அரசுகள் அதனது செயற்பாடுகள் வரை இன்று உலகம் ஆவணப்படுத்தி இருக்கின்றது. ஆனால் தமிழர்களில் குறிப்பாக இலங்கைத்தீவில் வாழ்கின்ற தமிழர்கள் தமக்கான வேர்களை தொலைத்து விட்டவர்களாகவே இன்று உள்ளனர். எமது வேர்களையும் அடையாளங்களையும் அடுத்து வருகின்ற தலைமுறை உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய சூழல் காலத்தாற் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உலகத்தவர்கள் தமது நாகரிகங்களைப் பேணிப்பாதுகாத்து வருகின்ற வேளையில் யாழ்ப்பாணத்திற்கென்றொரு நாகரிகம் இருந்திருக்கின்றது. அந்த நாகரிகப்பரம்பலை நாம் பாதுகாக்க வேண்டும். 

தனித்துவமான வாழ்வியல் அடையாளங்களைப்பேணி உலகத்திற்கு முன்னுதாரணமாக வாழ்ந்த எமது சமூகத்தின் வாழ்வியல் அடையாளங்களை ஆவணப்படுத்துவதற்காக பல தேடல்களை நாம் மேற்கொண்டு வருகின்றோம். மரபுரிமை பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டியது இன்றைய காலத்தில் எழுந்த கட்டாய தேவையாகும். நாம் யாழ்ப்பாண வாழ்வியல் தொடர்பான 3000 புகைப்படங்களை ஆவணப்படுத்தியுள்ளோம். யாழ்ப்பாணப்பெட்டகத்துள் அமைந்துள்ள விடயங்கள் யாவும் ஒவ்வோர் அடிப்படையில் யாழ்ப்பாணப் பண்பாட்டுருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் பங்களித்துள்ளமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

தற்போதைய சூழலில் பாரம்பரியக்கலை மரபுகளின் மறைவும் புதிய கலைமரபுகளின் தோற்றமும் யாழ்ப்பாணப் பண்பாட்டிருப்பிற்கு மாற்றுருவம் கொடுக்க முனையும் இச் சந்தர்ப்பத்தில் எமது மரபுரிமைகளைப் பேணுவதற்கும் அதனூடாக ஆரோக்கியமான பண்பாட்டுச் சூழலை பேணுவதற்கும் எந்தவொரு முயற்சிகளும் மேற்கொள்ளப் படவில்லை. எமது எதிர்காலத் தலைமுறைகள் தம்முடைய வேர்களைத் தேடுகின்ற சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணப்பெட்டகம் அவர்களுக்குப் பக்கபலமாக அமையும் என்ற விசாலமானதொரு நோக்கில் இவ்வாறானதொரு முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். 

எமது எதிர்காலச் சந்ததி தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு ஒரு மொழி பேசும் சந்ததியாக இருக்கும் என்பதில் எமக்கு நம்பிக்கையில்லை. அவர்கள் நிச்சயமாக ஆங்கிலம். ஜேர்மன், லத்தீன், பிரெஞ், டொச் போன்ற மொழிகளையே தமது தாய் மொழியாகக் கருதும் சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணப்பெட்டகம் அவர்களது வழித்தோன்றல் களது உள்ளுடலைப் பிரித்துக்காட்டும் என்ற விசாலமான நோக்கின் அடிப்படையிலேயே நாம் யாழ்ப்பாணப்பெட்டகம் என்ற அமைப்பினை நிறுவுவதற்கு முயன்றுள்ளோம். அத்துடன் அது எல்லோருக்கும் பயன்படக்கூடிய வகையில் மரபுரிமைக் கலைக்கூடமொன்றினை அமைத்து இவற்றினைப் பாதுகாக்க வேண்டிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றோம்.அதற்காக ‘யாழ்ப்பாணப்பெட்டகம்-நிழலுருக்கலைக்கூடம்’ அர்ப்பணிப்புடன் பணியாற்ற முன்வந்துள்ளது.

இத்தகையதொரு வரலாற்றுக் கடமையில் அடையாளங்களைப் பேணுவதற்காக உங்களைப்போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களின் உதவிகளை எதிர்பார்த்து நிற்கின்றோம். இது ஒவ்வொரு தமிழனின் வரலாற்றுக் கடமையும் கூட.

மார்க்கண்டு அருள்சந்திரன்,எம்,ஏ.
இயக்குநர்,
யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக்கலைக்கூடம்.

யாழ்ப்பாணப் பெட்டகம் இணையவழி அருங்காட்சியகம் பிரகாசிக்க வாழ்த்துக்கள்!

எம்முன்னோர்கள் எமக்கழித்த வாழ்வுரிமைச் சொத்துக்களும் எச்சங்களும் எம்கதைபேசி நிற்பனவாகும். இத்கைய அருஞ்சொத்துக்கள் ஆங்காங்கே காலஓட்டத்தினால் பழையனவாகி மறைபொருளாய் மாறி புதிய வரவுகளின் தாக்கத்தனால் மாற்றுருவம் பெறுகின்றன. இவற்றின் வேர்கள் அறுபடாத் தொர்ச்சியாக இருப்பதற்கான செயற்பாடாகவே யாழ்ப்பாணப் பெட்டகம்-நிழலுருக்கலைக்கூடத்தினர் அவற்றையெல்லாம் புகைப்படமாக சேகரித்து பாதுகாத்து வருவது மட்டுமல்லாமல் நூல்களாகவும் இலத்திரனியல் ஊடகமாகவும் அடுத்த சந்ததியினருக்கு கையளிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் முன்முயற்சியாகவே வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள நிதி அனுசரனையில் வசநயளரசநாழரளநழகதயககயெ.உழஅ என்னும்; இணையத்தள உருவாக்கம் வரவேற்கத்தக்கதொன்றாகும். யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் பணிமட்டுமன்றி பல்வேறு வகையிலும் யாழ்ப்பாணத்தின் இருப்பினை வெளிப்படுத்திய பல்வேறு ஆளுமையாளர்கள், எம்முன்னோர் விட்டுச்சென்ற மரபுரிமைச் சொத்துக்கள எனப்பலவாறான ஆழமான விடயங்களை தாங்கியதாக இவ் இணையம் வடிவமைக் கப்பட்டிருப்பது எமக்கு ஆத்ம திருப்தியை வழங்குவதுடன் இவற்றினை எமது சமூகம் நிறைவாகப் பயன்படுத்துவதிலேயே இவ் இணையத்தளத்தின் வெற்றியும் நோக்கமும் நிறைவேறுவதுடன் அதன் தொடர்ச்சியும் இங்கு பதிவாகும் என்ற செய்தியோடு இணையத்தினூடாக யாழ்ப்பாணத்து மரபுரிமைச் சொத்துக்கள் பாதுகாக்கப்படுவதற்கான ஓர் வழியை ஏற்படுத்தியுள்ள யாழ்ப்பாணப் பெட்டகம் நிழலுருக்கலைக் கூடத்தினருக்கு எனது பாராட்டையும் நன்றியையும் தெரிவிப்பதுடன் வசநயளரசநாழரளநழகதயககயெ.உழஅ என்னும் இணையத்தளமானது யாழ்ப்பாணத்து மரபுரிமைச்சொத்துக்களின் காவலனாய்த் திகழ்வதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

இ.இளங்கோவன்,
செயலாளர்,
கல்வி,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு,
வடக்கு மாகாணம்.
செம்மணி வீதி, நல்லூர்,
யாழ்ப்பாணம்

எம் மரபுரிமை சொத்துக்களின் முகாமைத்துவம் இணையத்தினூடாகப் பிரகாசிக்க வாழ்த்துக்கள்!

யாழ்ப்பாணம் தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டுக்கூறுகளையும் மரபுரிமை விடயங்களையும் கொண்டமைந்த மரபார்ந்த பூமியாகும். இப்புண்ணிய பூமியில் பலர் தம்வாழ்வை அர்ப்பணித்து அரும்பெரும்சேவையாற்றியுள்ளனர். அவர்கள் அனைவரையும் நினைவுகூரவேண்டிய கடமை காலத்தின் கட்டாய தேவையாகும். எம்முன்னோர்கள் எமக்காக வளமான எதிர்காலத்தினையும் விட்டுச் சென்றுள்ளார்கள். அத்தகைய வளமும் எம்மண்ணின் ஆளுமைகளும் என்றும் எம்மை வளப்படுத்தி வருவதுடன் இம் மண்ணையும் புனிதமாக்கியுள்ளன என்றால் அது மிகையாகாது. இத்தகைய ஒருபின்புலத்தலிருந்து எழுந்த நம்வாழ்க்கை தற்பொழுது எமது வேர்களை மறந்தனவாக பயணித்துக் கொண்டிருப்பதனை நாம் உணர்கின்றோம். இத்தகைய வலுவிழப்பினை பாதுகாத்து அடுத்த சந்ததியனருக்கு எம் வளமான எதிர்காலத்தினை கையளிக்கும் நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதான யாழ்ப்பாணப் பெட்டகம்-நிழலுருக்கலைக்கூடம் என்ற மரபுரிமை சார் கலைக்கூடமானது எமது திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு செயற்படுகின்றமை குறிப்பிடத் தக்கது. இணையத்தளம் ஒன்றினை உருவாக்குவதற்கு இக்கலைக்கூடத்தின் சார்பில் நிதிஒதுக்கீடு கோரியிருந்தார்கள். அக்கோரிக்கையானது உண்மையில் நியாயமானதாக இருந்தமையினால் எமதமைச்சின் செயலாளரது அனுமதியோடு பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முழுமையான ஏற்பாட்டிலும் ஒழுங்கமைப்பிலும் இத்தளம் உருவாக்கப்பட்டிருப்பது மனநிறைவைத் தருகின்றது. வளம் நிறைந்த எமது பாரம்பரியம் இணையத்தளத்தினூடாக பாதுகாக்கப்படுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் யாழ்ப்பாணப் பெட்டகம் நிழலுருக் கலைக்கூட நிர்வாகத்தினருக்கு பாராட்டுதலை தெரிவிப்பதுடன் இதன் தொர்ச்சியான பேணுதலினூடாகவே பலரும் பயன்பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் இணையத்தளம் தொடர்ந்து பயணிக்க எனது மனமார்ந்த வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்

திருவாட்டி சுஜீவா சிவாதஸ்,
பிரதிப் பணிப்பாளர்,
பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,
வடக்கு மாகாணம்.
செம்மணி வீதி, நல்லூர்,
யாழ்ப்பாணம்

நோக்கு

யாழ்ப்பாண வாழ்வும் வளமும் சார்ந்த நூற்றாண்டுப் புலமைகளின் தேடல்களை ஆவணப்படுத்தி எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்கும் தன்னார்வ அமைப்பு

தூரநோக்கு

ஊட்டம் விருத்தி உறுதுணை ஒண்கலைகள் நாட்டுவதனூடாக யாழ்ப்பாண வாழ்வும்   வளமும் சார்ந்த நூற்றாண்டுப் புலமைகளை நவீன யுகத்திற்கேற்ற வகையில் ஆவணப் படுத்தி எதிர்கால சந்ததியினருக்கு கையளிப்பதே கொள்கை நமக்கு.

நன்றியும் வாழ்த்தும்

யாழ்ப்பாணப் பெட்டகம் நிழலுருக் கலைக்கூடத்திற்கான இணையத் தளத்தினை உருவாக்குவதற்கு நிதி மற்றும் ஆலோசனை வழங்கி இத்தளத்தினை உருவாக்கித் தந்துதவிய வடக்குமாகாணகல்வி, பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திருவாளர் இ.இளங்கோவன் அவர்களுக்கும் , பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருவாட்டி சுஜீவா சிவதாஸ் அவர்களுக்கும். இத்தளத்திற்கான நிர்வாக வேலைகளை செயற்படுத்தியுதவிய திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் திருவாளர் பிரதீப்அவர்களுக்கும் கல்வி அமைச்சின் பிரதம கணக்காளர் அவர்களுக்கும் யாழ்ப்பாணப் பெட்டகம் நிழலுருக் கலைக் கூடத்தின் இதயபூர்வமான நன்றியினையும் வாழ்த்தினையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

error: Content is protected !!
error: Content is protected !!