பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு ப. மு. செகராசசிங்கம் என்பவர் தனது சொந்தக் காணியில் 1929 ஆம் ஆண்டில் சண்டிலிப்பாய் இந்து ஆங்கிலப் பாடசாலை என்னும் பெயருடன் இந்தப் பாடசாலையை நிறுவினார். அவரே இப்பாடசாலையின் அதிபராக 1940 வரையில் பணியாற்றினார். ஆங்கிலக் கல்விப் போதனைகளை மட்டும் வழங்கி வந்த இந்து ஆங்கிலப் பாடசாலை சண்டிலிப்பாய் பிரதேசத்தில் தமிழ் மொழிக் கல்வியையும் வழங்க வேண்டும் என்ற நோக்கோடு இப்பகுதியில் தமிழ் மொழிக் கல்வியை வழங்கி வந்த சண்டிலிப்பாய் அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, சண்டிலிப்பாய் வாணி நிகேதன வித்தியாசாலை என்பன சண்டிலிப்பாய் இந்து ஆங்கிலப் பாடசாலையுடன் 1970 இல் இணைக்கப்பட்டு சண்டிலிப்பாய் இந்து மகா வித்தியாலயம் எனும் பெயர் மாற்றம் பெற்றது. 1995 ஆம் ஆண்டில் ஆரம்பத்தில் க.பொ.த. உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு இப்பாடசாலை தரம் 1 – பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. 1999 ஆம் ஆண்டில் பாடசாலை சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி எனப் பெயர் மாற்றப்பட்டது. ராஜா ஸ்கூல் என்ற பெயரில் ஆரம்ப காலத்தில் அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.