Tuesday, May 21

மகாதேவன் , அண்ணாமலை (கலைமாமணி)

0

கரவெட்டிப் பிரதேசத்தில் உள்ள வதிரி எனும் கிராமத்தில் அண்ணாமலை சின்னப்பிள்ளை தம்பதிகளுக்கு 1930.12.07 இல் பிறந்தார். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமைபெற்ற இவர் ஒரு ஆங்கில விசேட பயிற்றப்பட்ட ஆசிரியராகக் கடமையாற்றியதுடன் கதாசிரியர், நாடக இயக்குநர், நாடகத் தயாரிப்பாளர், கவிஞர், இசையமைப்பாளர், பரத நாட்டியக் கலைஞர், ஓவியர், விளையாட்டுவீரர் போன்ற பல்துறைகளிலும் சிறந்து விளங்கினார்.

தனது கலைப் பயணத்தை வதிரி சைவ வித்தியாசாலையில் 3ஆம் வகுப்பில் கல்வி கற்கும்போது ஆரம்பித்தார். நாடகத்துறையின் குருவான க.முருகேசு ஆசிரியர், கலாவிநோதன் பெ.அண்ணாசாமி ஆசிரியர் ஆகியோரைக் குறிப்பிடும் இவர் முறையே அவர்கள் தயாரித்த நாடகங்களில் “கிரிசாம்பாள்” எனும் பெண்பாத்திரம் ஏற்று நடித்ததுடன், “சம்பூரண இராமாயணம்” நாடகத்தில் இராமனாக நடித்துப் பலருடைய பாராட்டுதலையும் ஆசியையும் பெற்றார். சங்கீதம், நடனம் ஆகிய துறைகளின் குருவாக மாத்தளை முத்தமிழ் வித்தகன் பூபதி நடராஜா, இணுவில் பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர் ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளார். தை 1958 – புரட்டாதி 1985 வரை மதீஸ் புரொடக்சன்ஸ் எனும் பெயரிலும் ஐப்பசி 1985 – 14.12.2008 வரை ஸ்ரீ லக்மீஸ் புரொடக்சன்ஸ் எனும் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனங்களினூடாக இயலிசை நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றினார். இவரது இரு தயாரிப்பு நிறுவனங்களுக்கூடாக யார் துரோகி, மலர்ந்த றோஜா, மந்திரியின் சூழ்ச்சி(பூதத்தம்பி), அன்றொருநாள், தங்கையா தாரமா, கண்ணானவன், சரிந்த கோட்டை, நான் திருடனா?, இலட்சிய வீரன், விதுரன் தூது, சூழ்ச்சி வென்றது, பாஞ்சாலியின் சபதம், பாரதம், வீரசிவாஜி, தனிமரம், பகற்கனவு, வெற்றித்திலகம், மீண்ட சொர்க்கம், Prodigal Son (ஊதாரிப்பிள்ளை), கௌரவம் அழிந்தது, சமாதானம் போன்ற 28 நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதியதுடன் அவைகளை அவரே இயக்கி மேடையேற்றியுள்ளார். அத்துடன் இவர் கும்மி, கோலாட்டம், கிராமிய நடனம், சிவம் சக்தி (நாட்டிய நாடகம்), நவரசநாட்டியம், தீப வணக்கம் போன்ற 6 நடனங்களுக்கு பாடல் எழுதி, அவைகளுக்கு மெலோடி வழங்கி, இயக்கி மேடையேற்றியுள்ளார்.

இவருடைய நாடகங்களுக்கு “இங்கிலிஸ் மெண்டலின்”, “மெலோடிக்கா” ஆகிய பக்க வாத்தியக் கருவிகளைத் தானே இசைத்துப் பின்னணி இசை வழங்குவார். இலங்கையின் வடபகுதியில் முதன் முதலில் “இங்கிலிஸ் மெண்டலின்” ஆங்கிலவாத்தியக் கருவியை இசைத்த பெருமை இவருக்குரியதாகும். அத்துடன் 1954 – 1956ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் “தோட்டக்காரி” என்ற நம் நாட்டுத் திரைப்படத்திற்கு இசை வழங்கிய சவாகீர் மாஸ்ரரின் இசைக்குழுவில் “இங்கிலிஷ் மெண்டலின்” , “மெலோடிக்கா” ஆகிய வாத்தியக் கருவிகளை வாசித்தவர். இவர் நாடகத்துறைக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டிக் கௌரவிக்கும் முகமாக வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச கலாசாரப் பேரவையினால் 2005இல் சான்றிதழ் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இவரால் எழுதப்பட்ட 25 ஆங்கிலக் கவிதைகள் அடங்கிய “Poetical World” எனும் நூல் 20.09.2008 அன்று வெளியிடப்பட்டது. “கலைமாமணி” அண்ணாமலை மகாதேவன் அவர்கள் கலைக்காகவே பிறந்து தனது இறுதி மூச்சு இருக்கும் வரை கலைக்காகவே வாழ்ந்து 14.12.2008 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!