1891-10-03 ஆம் நாள் வேலணை, வங்களாவடி என்னும் இடத்தில் பிறந்தவர். தந்தை வேலுப்பிள்ளை அம்பலவாணர், தாயார் இராசம்மா. ஆரம்பக் கல்வியை வேலணை அமெரிக்க மி~ன் பாடசாலையில் பெற்றார். பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொழும்பு புனித யோசேப்பு கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம் பெற்றார். பின்னர் சிறிதுகாலம் கொழும்பு புனித யோசேப்பு கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞராகக் கொழும்பில் பணியாற்றினார். 1947 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மத்திய தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அதன்பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து 1956 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றார்.மார்ச்சு 1960, ஜூலை 1960 தேர்தல்களிலும் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1954 ஏப்ரலில் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் புங்குடுதீவு மகாசன சபையின் ஆதரவுடன் தமிழகத்தில் இருந்து பொ.சிவஞானம், பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் உட்பட தமிழறிஞர்கள் பலரை சிறப்புப் பேச்சாளர்களாக அழைத்து சிலப்பதிகார விழா ஒன்றை புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத் தில் மூன்று நாட்கள் நடத்தினார். 1953-54 காலப்பகுதியில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவ ராக இருந்து பணியாற்றினார். 1963-06-04 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.