1889-03-01 ஆம் நாள் சோழவளநாட்டுத் திருக்கண்ணபுரம் என்னும் இடத்தில் பிறந்தவர். இவரை யாழ்ப்பாணம் மாவையம்பதி சுவீகர புத்திரனாக்கிக்கொண்டது. குருகுல மரபில் தமிழை முறையாகக் கற்றவர். சுன்னாகம் இராமநாதன் கல்லூரி, திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரி, இராமநாதன் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை ஆகியவற்றில் தலைமைத் தமிழாசிரியராகப் புகழ் பெற்றவர். 1922 ஆம் ஆண்டு இவரால் வெளியிடப்பட்ட உலகியல் விளக்கம் என்னும் செய்யுள்நூல் பாவலர், நாவலர் என்போரின் நன்மதிப்பினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. திருவாசக விரிவுரை அவரது புலமைமிக்க சங்கநூல் ஆட்சியை விளங்குந்தன்மையதாக மிளிர்கின்றது. மேலும் பறம்பு மலைப் பாரி, செழுங்கதிர்ச்செல்வம், திருவடிக்கதம்பம், இலங்கைத் தலைவர்களைப் பற்றிய பாடல்கள், மாணவர்களுக்கான இலக்கண நூலை பாரதீயம் பகுதி – 1,11 என வெளியிட்டமையும் இவரது புலமையின் பெறுபேறுகள். இவருக்கு ஆரிய திராவிட பா~hபிவிருத்திச் சங்கம் புலவர்மணி என்னும் பட்டமளித்துக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது. 1954 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.