யாழ்ப்பாணம் -காரைநகர் என்ற இடத்தில் பிறந்த இவருடைய இயற்பெயர் கந்தையா ஸ்ரீஸ்கந்தராஜா என்பதாகும். மதுரக்குரலோன், மயக்கும் மொழியோன், அடுக்குமொழி வசனங்களை துடுக்காக உச்சரிக்கும் அறிவிப்பாளன்,மின்னல் வேகத்தில் பிசிறில்லாது அறிவிப்புச் செய்து தமிழ்மொழியில் தனக்கெனவொரு தனியிடம் பிடித்தவர். இலங்கை வானொலியில் இடம்பெற்ற இசையணித்தேர்வு, நட்சத்திரப்பேட்டி, திரைவிருந்து போன்ற நிகழ்ச்சிகள் இவரது இயக்கத் தினாலும், வித்தியாசமான அறிவிப்பினாலும் புகழ்பெற்று விளங்கின எனலாம். நேயர்களின் பெயர்களைக் கூறுவதிலும், ஊர்களின் பெயர்களை உச்சரிப்பதிலும் வித்தியாசமான நுணுக்கங்களைக் கையாண்டு அறிவிப்புச் செய்தவர். இதனால் இலங்கை வானொலியை இவர் உலகளவிற்கு உயர்த்திச் சென்றார்.இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகளாக பாட்டுக்குப்பாட்டு, கேள்வி நேரம், இசைக்கோவை, இசைச்செண்டு, நிக்சாவுடன் சில நிமிடம் போன்றனவற்றைக் குறிப்பிடலாம்.