Sunday, May 5

ஜோன்கபாஸ் பிலிப்

0

1950.04.26 ஆம் நாள் சில்லாலை,பண்டத்தரிப்பு என்ற இடத்தில் பிறந்து அச்சுவேலி, வளலாயில் வாழ்ந்தவர். ஆர்மோனிய இசைவேந்தனாகிய இவர் இசைநாடக மரபுவழிக் கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.தந்தையார் புகழ்பூத்த ஆர்மோனியச் சக்கர வர்த்தி எனப் பலராலும் அறியப்பட்ட அந்தோனிப்பிள்ளை பிலிப்பு ஆவார். இப் பின்னணியிலிருந்து தான் ஜோன்கபாஸ் அவர்களது கலைப்பயணமும் ஆரம்பிக்கின்றது  எனலாம். வைரமுத்துவின் மாணவனான வேலாயுதம் என்பவரால் தயாரிக்கப்பட்ட நந்தனார் நாடகத்திற்கு முதன் முதலில் ஆர்மோனியம் வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

அதிலிருந்து தொடர்ச்சியாக இறக்கும் வரை அவர் பங்கேற்காத இசை நாடகங்களே இல்லை எனலாம். இவ்வாறு ஈழத்தில் இசை நாடகங்களை அரங்கேற்றிப் புகழ் பெற்றவர்களான வீ.வீ.வைரமுத்து, வீ.என்.செல்வராஜா, சி.பி.செல்வராஜா, இயமன் மார்க்கண்டு, அரியாலை செல்வம், இணுவில் கனகரட்ணம், கலைவேந்தன் ம.தைரிய நாதன் தொடக்கம் இன்றைய இளம் தலைமுறை யினர்களும் அண்ணாவிமார் களுமான திரு.கலாமணி, விஜயபாஸ்கர், பொ.தயாநிதி போன்றவர்களுடனும் இணைந்து பல இசை நாடகங்களுக்கு ஆர்மோனியம் வாசித்துப் பெருமை சேர்த்தவர். சம்பூர்ண அரிச்சந்திரா, சத்தியவான் சாவித்திரி, நந்தனார், பூதத்தம்பி, அல்லி அர்ச்சுனா, வள்ளி திருமணம், ஞானசௌந்தரி, சத்தியபாமா ஆகிய இசை நாடகங்களுக்கும் காத்தவராஜன் சிந்து நடைக்கூத்து, பண்டாரவன்னியன், சங்கிலியன் போன்ற வரலாற்று நாடகங்களுக்கும் ஆர்மோனிய இசையினால் மெருகேற்றியவர். இசை நாடகத்துறையில் இவர் பற்றிய ஆய்வு மிகவும் நீண்டதும் பயனுடையதுமாக இருக்கும். இவரின் சுருதி சுத்தமான வாசிப்புமுறை, எந்தச் சுருதியிலும் உடனே வாசிக்கும்திறன், ஆர்மோனியத்தைப் பார்க்காமல் விரல்கள் ஆர்மோனியக் கட்டைகளில் தவழும் விதம், எல்லா இசைநாடகப் பாடல்களையும் நினைவில் வைத்து சுத்தமாக வாசிக்கும்திறன் என ஆற்றல் பெற்ற இக்கலைஞன் ஆர்மோனிய வாசிப்பினை தனது ஜீவனோபாயத் தொழிலாகவும் உயிரிலும் மேலானதாகவும் இறுதிவரை கடைப்பிடித்தவர். 2013.01.23ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!