யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலுள்ள புலோலி என்னுமிடத்தில் நமசிவாயம் தங்கரத்தினம் தம்பதிகளின் புதல்வியாக ஆரோக்கியமான கல்விப்பாரம் பரியத்தை உடைய குடும்பப் பின்னணியில் 1903-06-06 ஆம் நாள் பிறந்த இவர் பெண்கள் கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படாத, பெண்கள் கல்வி கற்பதற்கு பாடசாலைகள் இல்லாத காலச்சூழலில் கல்வியறிவு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். தனது வீட்டுச் சூழலில் கிடைத்த திண்ணைக் கல்வி மூலமாக அறிவாற்றலை வளர்த்துக் கொண்டார். இலக்கணக் கொட்டர் என்று போற்றப்பட்ட வ.குமாரசாமிப்புலவர், திருவனந்தபுரம் மகாராஜக் கல்லூரியின் சமஸ்கிருதப் பேராசிரியரும் இரகுவம்சம், பில்கணீயம் முதலான வடமொழிகளை தமிழிற்கு மொழிபெயர்த்தவருமான வ.கணபதிப்பிள்ளை என்போர்களின் பேரப்பிள்ளையே பத்மாசனியம்மாள் ஆவார். பண்டிதை பத்மாசனி அம்மாள் ஈழத்து முதற் பெண் கவிஞராகவும், ஈழத்தின் முதற்பெண் மொழிபெயர்ப் பாளராகவும், வெளியீட்டாளராகவும். கட்டுரை யாசிரியராகவும் பன்முகங்கொண்டவராக தமிழ்மொழிக்குப் பங்காற்றியுள்ளார். 1925 இல் வெளிவந்த இவரது புலோலி பசுபதீஸ்வரர் பதிற்றுப்பத்தந்தாதி என்னும் அந்தாதியை வெளியிட்டதோடு , தோமஸ்கிரே என்பவர் எழுதிய Elegy written in a country Churchyard என்ற கவிதையை ஒரு நாட்டுப்பற்றுத் தேவாலயத்தில் எடுக்கப்பட்ட இரங்கற்பா என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இம் மொழி பெயர்ப்புக் கவிதையானது மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடான செந்தமிழ் சஞ்சிகையில் 1926 – 1927 காலப்பகுதியில் வெளிவந்தமை இவரது மொழிபெயர்ப்பாற்றலுக்கு கிடைத்த அங்கீகாரமென லாம். மேலும் பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் மும்முரமாக நடைபெற்ற பதிப்பு முயற்சிகளில் பத்மாசனி அம்மாள் ஓலைச்சுவடியாகவிருந்த செய்யுளுக்குரிய மங்கலம், சொல்,எழுத்து,தானம், பால், உரை,வருணம்,நாள்,கதி,கணம் என்கின்ற பத்துவகையான இலக்கணங்களைக்கூறுகின்ற செய்யுட்பொருத்த இலக்கணம் என்ற நூலை பதிப்பித்து வெளியிட்டவர். புலோலியில் பிறந்து வளர்ந்து தமிழிற்குத் தொண்டாற்றி காலத்தால் அழியாப் புகழைப் பெற்றுக் கொண்ட அம்மையாரவர்கள் 1978-10-11ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.