Tuesday, April 15

பத்தினியம்மா திலகநாயகம்போல்

0

வடமராட்சி – கரவெட்டியில் சிதம்பரப்பிள்ளை (தம்பிரான்) பார்வதிப்பிள்ளை தம்பதியரின் இளைய புதல்வியாக 1944.05.09 இல் பிறந்த திருமதி பத்தினியம்மா திலகநாயகம்போல் கரவெட்டி ஞானாசாரியார்,யாழ். இந்து மகளிர் கல்லூரி;, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகிய வற்றில் கல்வி பயின்ற சிறப்புப் பட்டதாரியாவார். மேலும் பால பண்டிதர், சைவப்புலவர் பரீட்சைகளில் தேர்ச்சி பெற்றவர். 1970 ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாக இணைந்தார். முதலில் புத்தளத்திலும் பின் வவுனியாக் கச்சேரியிலும் தலைமைப்பீட உதவி அரசாங்க அதிபராக விளங்கினார். 1992 இல் வடக்குகிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளராகப் பணியாற்றியவர். 1992 ஒக்டோபர் மாதத்தில் யாழ். மாவட்டத்தின் மேலதிக அரச அதிபராகப் பதவியேற்றார். 1994 ஒக்டோபர் 31 இல் அரசஅதிபராக இருந்த திரு.மாணிக்கவாசகர் அவர்கள் ஓய்வுபெற்ற பொழுது பொது நிர்வாக அமைச்சினால் மேலதிக அரச அதிபர் பதவியுடன் 1994 நவம்பர் 1 ஆம் திகதியிலிருந்து யாழ். அரச அதிபராக நியமிக்கப்பட்டார். 18 நாள்கள் மட்டும் யாழ். அரச அதிபராக இவரால் கடமையாற்ற முடிந்தது குறிப்பிடத்தக்கது. வலிகாமம் வடக்கின் பிரதேச செயலர் பதவியை ஏற்றார். வலிகாமம் வடக்கு மீண்டும் புத்துயிர்பெற வேண்டும் என்ற நோக்குடன் வலிகாமம் வடக்கு பிரதேச மலரையும் வெளியிட்டார். இளமையிலிருந்தே கதை, கவிதை, கட்டுரை, நாடகம், பேச்சு ஆகிய துறைகளில் மிகுந்த ஈடுபாடுடையவர். கவிதைகள், குழந்தைக் கவிதைகள், இசைக் கவிதைகள், பக்திக் கவிதைகள், சமத்துவக் கவிதைகள் எனப் பலவற்றை எழுதியுள்ளார். இவரின் குழந்தைக் கவிதைகள் உட்பட பல கவிதைகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இசைக் கவிதைகள் இலங்கை வானொலியில் ஈழத்துப் பாடல்களில் இசைக்கப்பட்டன. இலங்கை வானொலியில் ‘கங்கையாளே” இசைத் தட்டில் இவரின் கவிதையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. சிதம்பரபத்தினி, சித்தி, பிரக்ஞா என இவரின் புனைபெயர்களும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமக்களுறவும், பேச்சுவன்மையும், துணிவும், தமிழிலக்கிய அறிவும், நவீன இலக்கியத்திறனும், வடமொழிப்புலமையும், தீர்க்க சிந்தனையும் உடையவர். நிஜத்தின் நிழல் என்ற சிறுகதைத் தொகுப்பினையும், தேன்வதை, மழலை அமுதம் ஆகிய இரு கவிதைத் தொகுப்பு நூல்களையும் இசையின் இமயம் திலகநாயம் என்ற இசை இலக்கியத்தையும் வெளியிட்டவர். நேர்மைத்திறணும், நேர்கொண்ட சிந்தனையுமுடைய இவரது வழிகாட்டலால் வலிகாமம் வடக்கு அடைந்த அபிவிருத்திகள் யாவரும் அறிந்த உண்மை ஆகும். 2003 இல் மீண்டும் யாழ்ப்பாண மேலதிக அரச அதிபராகிய இவர் கலை பண்பாட்டு வளர்ச்சியில் மூச்சாகச் செயற்பட்டார். இதற்காக யாழ். மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கலையகம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கி மாவட்ட கலைவிழாவை நடத்தியவர். சிறந்த நிர்வாகத்திறனும் பொது மக்கள் உறவும் பேச்சுவன்மையும் பழந்தமிழ் இலக்கியத்திறனும் வடமொழிப் புலமையும் தீர்க்க சிந்தனையும் உடைய இவர் 2013-11-02 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!