Tuesday, May 21

சுப்பிரமணிய சாஸ்திரிகள் (பிரம்மஸ்ரீ )

0

யாழ்ப்பாணம் வடமராட்சி தும்பளை என்னும் கிராமத்திலுள்ள பிராமண ஒழுங்கையில் சபாபதி ஐயர் மங்களம்மா தம்பதிகளுக்கு மகனாக 1875-02-17 ஆம் நாள் பிறந்தவர். தாய்தந்தையர் இவருக்கு சுப்பிரமணியன் என்னும் திருநாமத்தைச் சூட்டினர். தனது தாய்வழிப் பாட்டனாராகிய மகாதேவக் குருக்கள் அவர்களால் ஏடு தொடக்கப்பட்டு அவரிடம் தமிழ், சமஸ்கிருதம், ஆகியவற்றினைக் கற்றுத்தேர்ந்தார். பின்னர் தனது தாய் மாமனும் ஆரிய திராவிட மகா பண்டிதருமாகிய பிரம்மஸ்ரீ முத்துக்குமார சுவாமிக்குருக் களிடம் தமிழ் இலக்கணம், வடமொழித்தருக்கம், வியாகரணம், சோதிடம் ஆகியவற்றை முறைப்படி கற்றுத் தேர்ந்தார். பின்னர் ஆசிரியப் பணியினை மேலைப் புலோலியிலுள்ள சைவ வித்தியாசாலையில் மேற்கொண்ட காலத்தில் தனது சிறுவயதில் முளைகொண்டிருந்த சோதிடநூலாய்வு ஆர்வம் காரணமாக வடமொழியிலுள்ள சித்தாந்த சிரோமணி, சூரிய சித்தாந்தம் போன்ற சோதிட நூல்களையும் தமிழ்மொழிச் சோதிட நூல், கணித நூல் போன்ற வற்றினையும் திறனாய்வு செய்து தனது சோதிட ஆளுமையைப் பெருக்கி பெரியோர் கள் மத்தியில் சாஸ்திரிகள் என்ற கணிப்பைப் பெற்றதனால் சுப்பிரமணிய சாஸ்திரிகள் என அவர் பெயர் விரிவு பெற்றது. சாஸ்திரிகள் உரைநடை, சொல்லாராய்ச்சி, மொழிபெயர்ப்பு, பஞ்சாங்கம் வெளியிடுதல், நூலகம், திண்ணைப்பள்ளி, பண்டித பரீட்சைகள், புலவர் மன்றங்கள், சொற்பொழிவு, அச்சிடல், சோதிட ஆராய்ச்சி என்பன போன்ற பன்முகப் பணிகளை தமிழ் இலக்கியத்தடத்தில் ஆற்றியவர். 1926 இல் கந்தபுராணத்தின் முதல் மூன்று காண்டங்களுக்கும், யுத்த காண்டத்தின் ஒரு பகுதிக்கும் உரை எழுதினார். தமிழ் அகராதிப் பணியில் இவருடைய பணியானது மிகவும்முக்கியமான தொன்றாகும். சூடாமணி, பிங்கலம் ஆகிய நிகண்டுகளை அடியொற்றி உருவாக்கப்பட்ட சொற் பொருள் விளக்கம் என்னும் தமிழ் அகராதியானது 1925 ஆம் ஆண்டு வெளியானது. இவ்வகராதி யானது வீரமாமுனவரால் எழுதப்பட்ட சதுராகராதிக்கு நிகரானது எனக் குறிப்பிட்பபட்டுள்ளது. 288 பக்கங்களைக் கொண்டதாக இவ்வகராதி காணப்படுகின்றது. வித்தியாவிருத்தித் தருமாலயம் என்ற பெயரில் தனது இல்லத்தில் நூல் நிலையமொன்றினை ஆரம்பித்து அனைவரும் பயன்பெறும் வகையில் சதுர் வேதங்கள், ஆகமங்கள் தொடர்பான பல்வேறு நூல்களை வாங்க பாதுகாத்து பயன்பெறுவதற்கு துணைநின்றுள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தும்பளையில் பிறந்து இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வாழ்ந்து தமிழ்க் கல்விப் பாரம்பரியத்திலே ஆட்சி; மிக்க பிராமண ஆளுமையாளராக வாழந்து தனக்கென்று  தனித்துவமான இடத்தினை ஏற்படுத்தி 1950-01-04 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!