1931.05.25 ஆம் நாள் யாழ்ப்பாணம் வடமராட்சி கட்டைவேலி கரவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர்.பயிற்றப்பட்ட கணித பாட ஆசிரியராகப் பல பாடசாலைகளிலும் பணியாற்றிய போதிலும் கூட்டுறவுத்துறையிலேயே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர். 1971 ஆம் ஆண்டு கட்டைவேலி நெல்லியடி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகப் பொறுப் பேற்றதிலிருந்து இறக்கும் வரை தொடர்ச்சியாக நாற்பது வருடங்கள் கூட்டுறவுச் சேவையாற்றிய பெருந்தகையாளர். சங்கங்களின் வழக்கமான உணவுப்பங்கீடு,எரிபொருள் விநியோகம் என்பவற்றுடன் நின்றுவிடாது பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தி, மாணவர்க்கான கல்வி நிதியுதவி, கலை கலாசாரச் செயற் பாடுகள், நூல் வெளியீட்டு விழாக்கள், நூலாசிரியர் கௌரவிப்பு, நூல்நிலையச் செயற்பாடுகள் என்பவற்றுடன் படைப்பாளிகளினது நூல்களைக் கொள்வனவு செய்து அவர்களது பொருளாதார நிலமையினை உயர்த்திடவும் வழிவகை செய்து ஒரு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினாலும் மக்கள் பணியினை திறம்பட முன்னெடுக்கமுடியும் என்பதனை எடுத்துக்காட்டிய கூட்டுறவாள னாவார்.யாழ். மாவட்ட கூட்டுறவுச் சபையின் பணிப்பாளராகவும், தேசிய கூட்டுறவுச் சபையின் யாழ். மாவட்ட பிரதிநிதியாகவும், வடமாகாண ஆசிரியர் சங்க சகாய நிதிச்சங்கத் தலைவராகவும் பணியாற்றியவர். 2009.06.23 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.