சுப்பிரமணியர் அம்பலவாணர் என்ற இயற்பெயர் கொண்ட அலன் ஆபிரகாம் 1865 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டம், காரைநகரில் பிறந்தவர். பெற்றோர் இருவரும் 1876 இல் யாழ்ப்பாணத்தில் பரவிய வாந்திபேதி நோயழிவில் இறந்து போனதை அடுத்து அம்பலவாணர் அவரது தந்தை வழி சகோதரர் கந்தப்பு சரவணமுத்துவின் ஆதரவில் வளர்ந்தார். கிராமப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் 1881 டிசம்பரில் தெல்லிப்பளையில் நிதியுதவிப் பயிற்சிப் பாடசாலையிற் சேர்ந்து படித்தார். அங்கு அவர் கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றப்பட்டு அலன் ஆபிரகாம் என்ற பெயரைப் பெற்றார். 1883 டிசம்பரில் அங்கு கல்வியை முடித்துக் கொண்ட பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரியில் சேர்ந்து பட்டப் படிப்பை மேற்கொண்டார். 1888 இல் முதல் தரத்தில் பட்டம் பெற்றார். 1889 இல் மெட்ராசு மெட்ரிக்குலேசன் சோதனையில் சித்தி அடைந்தார். யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்கும்போது அங்கு அவர் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றினார். பட்டப் படிப்பின் பின்னர் தெல்லிப்பளை பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1891 இல் மீண்டும் யாழ்ப்பாணக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1893 ஆம் ஆண்டில் ஆபிரகாம் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் முதலுதவிப் பரீட்சையில் சித்தியடைந்தார். அதே பல்கலைக் கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து ஆங்கிலம், மெய்யியல், கணிதம் ஆகிய பாடங் களைக் கற்று இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன் பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.அங்கு அவர் கொல்கத்தா பல்கலைக் கழகத்தின் எஃப.; ஏ, பி.ஏ பரீட்சைகளுக்கான மாணவர்களுக்கு கணிதமும், வானியலும் கற்பித்தார். 1914 இல் கல்லூரி அதிபர் வண. பிரவுண் பதவியில் இருந்து இளைப்பாறியதை அடுத்து ஆபிரகாமும் தனது பதவியைத் துறந்தார். ஆபிரகாம் தனது வாழ்நாள் முழுவதும் வானியலில் ஆர்வம் காட்டி வந்தார். மோர்னிங் ஸ்டார், யாழ்ப்பாணக் கல்லூரி ரோயல் வானியல் கழக இதழ்களில் வானியல் குறித்துக் கட்டுரைகள் எழுதி வந்தார். ஏலியின் வால்வெள்ளி 1910 மே 19 காலை 9 மணிக்கும் 10 மணிக்கும் இடையில் பூமிக்குக் கிட்டவாக வரும் என்பதை அவர் முன்கூட்டியே துல்லியமாகக் கணித்தார். அத்துடன் அது பூமியைத் தாக்காது என்றும், வெள்ளிக்கோளின் சுற்றுப் பாதைக்குள் சென்றுவிடும் என்றும் கணித்தார். அவரது ஆய்வுகளுக்காக ஏ. வி.ஜக்காரோவ் என்பவரின் பரிந்துரையின் பேரில் 1912 சனவரி 12 இல் ரோயல் வானியல் கழகத்தின் ஆய்வாளராகத் (குநடடழற) தேர்ந்தெடுக்கப்பட்டார். வானியல் கழகத்திற்கு இலங்கையில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட முதலாவது ஆய்வாளர் இவரே ஆகும். வானியலைத் தவிர்த்து இசை, தமிழ் இலக்கியம், வேளாண்மை, சமூகப் பணிகளிலும் ஆர்வம் காட்டினார். இவர் இயற்றிய எட்டுப் பாடல்கள் தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாணக் கோவில்களில் இன்றும் இசைக்கப்படுகின்றன. 1915 முதல் 1922 இல் இறக்கும் வரை தென்னிந்திய திருச் சபைகளது ஒன்றியத்தின் யாழ்ப்பாணப் பேரவையில் செயலாளராகப் பணியாற்றினார். 1897 முதல் 1909 வரை உதயதாரகை பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். 1922-07-22 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.