Saturday, March 15

விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி

0

சைவமும் தமிழும் தமதிரு கண்களெனக் கொண்டு வாழ்ந்து வந்த நாவலர்பெருமானின் மரபினை அடியொற்றி சமயப் பிரசங்கராகவும், சைவ நன்மணிகளாகவும், சிவவேடச் செல்வியாகவும் எம் மத்தியிலே ஆன்மீகம், அமைதி, தியானம், பஜனை, திருமுறை விளக்கப்பணிகள் எனத் தனது பொழுதை சிவப்பொழுதாகவும், தவப்பொழுதாகவும் ஆக்கி மனமகிழ்வுடன் குப்பிழான் சோதிவிநாயகர் ஆலய ஆச்சிரம ஞானியாக வாழ்ந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்ற மாதாஜி அவர்கள் தமது அளப்பரிய முயற்சியின் பயனாக பதினாறிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். நாவலப்பிட்டி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் தமிழ், சைவசமயப் பாடங்களின் சிறப்பாசிரியராகக் கடமையாற்றியுள்ளார். 1965. 1984, 1992 ஆகிய ஆண்டுகளில் இலங்கை வானொலியில் சைவ நற்சிந்தனைகள் நிகழ்த்தியுள்ளார். மாதாஜி அவர்கள் இலங்கையின் பல பாகங்களிலும் சைவப் பிரசங்கங்கள் செய்தார். காரைநகர் வர்த்தகக் கல்வி நிலையக் குருகுலம், கிளிநொச்சி மகாதேவ ஆச்சிரம சைவச்சிறுவர் இல்லம் ஆகியவற்றில் பாதுகாவலராகக் கடமையாற்றினார். திருச்சி மாவட்டத்திலுள்ள திரு ஈங்கோய்மலை ஸ்ரீலலிதா சமாஜத்தில் சந்நியாசம், ஸ்ரீ வித்யா மந்திரம் ஆகியன பெற்று ஸ்ரீ விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி என்ற சந்நியாச நாமம் பெற்றார். சிவமயச்செல்வி, சைவநன்மணி என்னும் கௌரவப் பட்டங்களைப் பெற்றுள்ள மாதாஜி அவர்கள் மாணவர் மாதிரிக்கட்டுரைகள், கிளிநொச்சி மீனாட்சி அம்மன் திருவூஞ்சல், உடற்பிணி பகைமை தீர்க்கும் மருந்து, கர்மயோகி அமரர் வே.கதிரவேலு, நல்லூர்க் கந்தன் நான்மணிக்கோவை, சிந்தனைத் தேன்துளிகள். சைவ நாற்பாதங்கள் காட்டும் ஆலய வழிபாடு, யாழ்.தெல்லிநகர் ஸ்ரீதுர்க்காம்பாள் நான்மணிமாலை, சிவவிரத மான்மியக் கதைகள், சிறுவர் ஞானத்தமிழ், ஸ்ரீ நவராத்திரி நாயகியும் தோத்திரமாலையும், சிவனுக்குரிய பஞ்ச தோத்திரமாலை, திருவாதவூரடிகள் புராணம், கொழும்பு பேலியகொடை ஸ்ரீ பூபாலவிநாயகர் மும்மணிக்கோவை, செக்கடித்தெரு ஸ்ரீகதிரேசன் ஆலய குடமுழுக்குப் பதிகம், அவுஸ்ரேலியா சுபநகர் பத்திரகாளி அம்மன் திருவூஞ்சல் ஆகிய பதினாறு நூல்களை வெளியிட்டுள்ளார். சிவயோக சுவாமிகளை தனது ஆத்மீக குருவாகவும் நாவலர் பெருமானை தனது மானசீகக் குருவாகவும் ஏற்று சைவத்தையும் தமிழையும் போற்றி வாழ்வதற்காக இல்லற வாழ்வில் இணையாமல் பிரமச்சரியை யாக தன் பணியைத் தொடர்ந்த இவர் 2016 ஆம் ஆண்டு மகா சமாதியடைந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!