இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவராகவும் 23 ஆண்டுகள் தொடர்ச்சியாக உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். மிகவும் செல்வமான குடும்பத்தில் 1918 பெப்ரவரி 5 ஆம் நாள் பிறந்தவர் தர்மலிங்கம். குடும்பத்தின் ஒரே பிள்ளையான இவரை உறவினர் ‘இலங்கையர்’ என்றும் ‘தர்மர்’ என்றும் அழைப்பர். இவரின் தந்தையார் விசுவநாதர் அமெரிக்கா சென்று முதுமாணிப் பட்டம் பெற்ற கல்விமான் ஆவார். தருமலிங்கம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) என்ற அரசியல் கட்சியின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தனின் தந்தையார் ஆவார். தர்மலிங்கம் சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்துப் பின்பு 1944 ஆம் ஆண்டில் உடுவில் உள்;ராட்சி மன்ற உறுப்பினராகவும், பின்பு அதன் தலைவராகவும் பணியாற்றினார். 1952 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக்கட்சி முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்ட போது அதன் தலைவர் தந்தை செல்வா காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட்ட போது, அவரை ஆதரித்து மாபெரும் கூட்டம் ஒன்றை நடத்தினார். 1960 மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றியீட்டினார். உடுவில் தொகுதியில் மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றார். அப்பொழுது இவருடன் போட்டியிட்ட கல்விமான் ஹன்டி பேரின்பநாயகம், கூட்டுறவாளர் வீ. வீரசிங்கம், கம்யூனிஸ்ட் வி. பொன்னம்பலம் போன்றவர்கள் தோல்வியடைந்தனர். 1972 ஆம் ஆண்டில் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் ஆகியன இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தோற்றுவித்தனர். தர்மலிங்கம் மானிப்பாய் (உடுவில்) தொகுதியில் விடுதலைக் கூட்டணி சார்பில் 1977 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆறாவது அரசியல் திட்டத் திலிருந்த சட்ட மூலத்திற்கு அமைய சத்தியப்பிரமாணம் எடுக்க மறுத்ததனால் இவரின் பதவி 1983 அக்டோபர் 8 இல் பறிக்கப்பட்டது. இளம் வயதிலேயே இடதுசாரிக் கொள்கைகளால் கவரப்பட்டார்.
ஆபிரிக்க ஆசிய விடுதலை இயக்கத்தின் உப தலைவராகவும் இலங்கை சோவியத் நட்புறவுச் சங்கத்தின் உப தலைவராகவும் மற்றும் பல இடதுசாரி இயக்கங்களிலும் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். அரசியலில் மட்டுமன்றி ஆன்மீக வழியிலும் அதிக ஈடுபாடுகொண்டவர். தெல்லிப்பளை துர்க்கா தேவஸ்தானத்தின் அறங்காவலராக விளங்கினார். கோப்பாயில் உள்ள ஆசிரியர் பயிற்சி மையமான யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி அமைந்திருக்கும் காணி தர்மலிங்கத்தின் குடும்பத்தால் அன்பளிப்புச் செய்யப்பட்டு அங்குள்ள மண்டபத்துக்கு தருமலிங்கம் மண்டபம் எனப் பெயர் சூட்டப்பட்டது. தர்மலிங்கம் அவர்கள் சுதுமலையிலும் தமிழரசுக் கட்சியின் பிரமுகர் மு. ஆலாலசுந்தரம் அவர்கள் மானிப்பாயிலும் 1985, செப்டம்பர் 2 ஆம் நாள் ஆயுததாரிகளினால்; படுகொலை செய்யப்பட்டனர்.