1926.04.06 ஆம் நாள் காரைநகர் என்னுமிடத்தில் இராமு சண்முகம் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர். காரைநகரில் தனது ஆரம்பக்கல்வியைப் பெற்றுக்கொண்ட இவர் தனது பதினைந்தாவது வயதில் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் சம்பளத்திற் காக வேலைக்குச் சேர்ந்து கொண்டார். இதுதான் அவரது வர்த்தகத்துறையின் முதலாவது காலடியாக அமைந்தது. பின்னர் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் 1950ஆம் ஆண்டில் சிறியளவிலான மளிகைக்கடையொன்றினை சில்லறை வியாபாரம் நடத்தும் வகையில் ஆரம்பித்தார். தனது சில்லறைக்கடை வியாபாரத்தினை 1953 ஆம் ஆண்டில் வர்த்தகப் பதிவினை செய்துள்ளார். காரைநகர் வாரிவளவு விநாயகர் மீது அளவற்ற பக்தி கொண்ட இவர் காரைநகர் வாரிவளவினைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை என்பவரது மகளான மாணிக்கம் அவர்களைத் திருமணம் செய்ததன் பயனாக ஏழு பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டார். அவர்களில் நாகரத்தினம் இவரது இளைய சகோதரனான கணேசலிங்கம் ஆகிய இருவரும் தந்தையாரின் வர்த்தகத்திற்கு உறுதுணையாக அவருடன் இணைந்து கொண்டனர். இதன் பயனாக சில்லறை மளிகைக் கடையாகவிருந்த பேரம்பலம் ஸ்ரோர்ஸ்சை யாழ்ப்பாணத்தின் பிரபல சயிக்கிள் விநியோகஸ்தராக மாற்றுமளவிற்கு வர்த்தகத்துறையில் உயர்ந்தார். 1975 இல் மளிகைக்கடை சயிக்கிள் விற்பனை நிலையமாக மாறியது. நிறுவனம் படிப்படியாக தலைசிறந்த நிறுவனமாக மாற்றமடைந்தது. 1983 இல் உலகில் உற்பத்தி செய்யப்பட்ட சயிக்கிள்களான ஏசியா, கீறோ, லுமாலா, றோமா போன்ற சயிக்கிள்களின் இறக்குமதியாளரா கவும் யாழ்ப்பாணத்தின் ஏக விநியோகஸ்தர்களாகவும் வர்த்தகத்தில் உயர்ந்தனர். இவருடைய வர்த்தக முயற்சியினால் பல குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியது மட்டுமல்லாது சமூக நடவடிக்கைகளுக்கும் தனது வருமானத்தின் ஒரு பகுதியினை செலவிட்டு வந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேர்மையாகவும், படிப்படியாகவும் வர்த்தகத்தில் முன்னேறியது மட்டுமல்லாமல் தானும் வாழ்ந்து தனது சமூகத்தினையும் வாழவைத்துள்ளார் என்பது வெள்ளிடைமலை. கூலியாளாக வர்த்தகத்தில் நுழைந்து படிப்படியாக முன்னேறி வியாபாரத்தில் சாதனையாளனாக உயர்ந்த இவர் 1993.01.19 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.