1928.07.22 ஆம் நாள் நவாலியில் பிறந்து மில் ஒழுங்கை, மல்லாகம் என்னும் இடத்தில் வாழ்ந்தவர். தமிழ் நாட்டில் உள்ள அரசினர் சிற்ப, ஓவியக்கலாசாலையில் பயின்று ஓவியக்கலையில் முதல் தர டிப்ளோமா சான்றிதழ் பெற்றவர். இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெற்ற ஓவியக் கண்காட்சிகளில் பல படைப்புகளை காட்சிப்படுத்திப் பாராட்டுப் பெற்றவர். மேலும் வீரகேசரி பத்திரிகையில் பலகாலம் ஓவியராகப் பணியாற்றியவர். அத்துடன் ஈழநாடு வாரமலர் பத்திரிகையில் வெளிவந்த சிறுகதைகள், தொடர்கதைகளுக்கும் ஓவியங்கள் வரைந்ததோடு, தினகரன் வாரமலர் பத்திரிகைக்கும் பலகாலம் பகுதிநேர ஓவியராக ஓவியங்கள் வரைந்துள்ளார். கவிதைகள், சமயக் கட்டுரைகள் ஆகியவற்றிற்கும் கருத்தான ஓவியங்களை வரைந்தவர். அதுமட்டுமல்லாது விளம்பரங் களுக்கான ஓவியங்களையும் வரைந்தவர். மேலும் நாவல்கள், புத்தகங்கள், சஞ்சிகைகளுக்கான அட்டைப்பட ஓவியம் வரைவதிலும் திறமை வாய்ந்தவர். 2008 ஆம் ஆண்டு ஓவிய தரிசனம் என்ற இறுவட்டையும் வெளியிட்டவர். இவரது இத்தகைய சேவைகளை பாராட்டும் நோக்கில் வலிகாமம் வடக்கு கலாசாரப் பேரவை கலைச்சுடர் விருதினையும், 1997 ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷணம் விருதும் வழங்கப்பெற்றவர். யாழ். பல்கலைக் கழகத்தின் கலைப்பீடாதிபதியும் மெய்யியல்துறைப் பேராசிரியருமான அமரர் சோ.கிருஸ்ணராஜா அவர்கள் இவரது ஓவியங்களைப் பாராட்டி மல்லிகை சஞ்சிகையில் எழுதியுள்ளமையும், 2008 ஆம் ஆண்டு உதயன் பத்திரிகையில் இவருடைய ஓவியக்கலை தொடர்பிலான செவ்வியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.