Sunday, October 6

வர்ணவாரிதி கனகராஜா. இரத்தினம் (ராஜி ஆட்ஸ்)

0

யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஸ்ரீ பத்திரகாளி கோவிலடியில் திரு திருமதி இரத்தினம் மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வனாக 1950-02-15 ஆம் ஆண்டு பிறந்தார். நல்லூரைச்சேர்ந்த மூத்த ஓவியர் கலாபூஷணம் அமரர் சிவப்பிரகாசம் அவர்களிடம் முறைப்படி ஓவியம் கற்றுக்கொண்டார்.

இந்து ஆலயங்களுக்கு வர்ணம் தீட்டுதல், மற்றும் சித்திரத்தேர்கள், திருமஞ்சம். சப்பறம், வாகனங்களுக்கு வர்ணம் தீட்டுதல், திரைச்சீலைகள் வரைதல் என ஓவியத்தின் பல்துறைப் பரிமாணங்களையும் கற்றுத்தேர்ந்த இவர், ஈழத்தின் மூத்த சிற்பாச்சாரியார்கள் வடிவமைத்த சித்திரத்தேர்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் வர்ணம் தீட்டும் பாக்கியம் பெற்றவர்.

“ராஜீ ஆட்ஸ்” என்ற கலைப்பெயரை தனதாக்கிய இவர், ; நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம் , நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம். தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயம், கண்டி கட்டுக்கலை செல்வ விநாயகர் ஆலயம், பேராதனை ஸ்ரீ குறிஞ்சிக்குமரன் ஆலயம் , திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம், கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ கதிரேசன் ஆலயம், உள்ளிட்ட இலங்கைத் தீவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான ஆலயங்கள் மற்றும் கலாசார மண்டபம், திருமண மண்டபங்கள் அனைத்திலும் தனது ஓவியப்பணியை இடம்பெறச்செய்தவர்.

இவரது கைவண்ணத்தில் அமைந்த திரைச்சீலைகளை “ராஜீ ஆட்ஸ்” என்ற அடிநாமத்துடன் இன்றும் இலங்கையின் பல பகுதிகளிலும் காணலாம். இவரால் கலைப்பணியின் நிமித்தம் திருநெல்வேலியில் நிறுவப்பட்ட “கலைவாணி கலையகம்” இன்று பல்பரிமாணம் பெற்ற முன்னணி கலை நிறுவனமாக விளங்குகின்றது.

இவர் ஆற்றிய கலைப்பணியைப் பாராட்டி “ ஓவியர் திலகம்” , “வர்ணக்கலைவேந்தன்” , “வண்ணக்கலாநிதி” என பல்வேறு கௌரவப்பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டன. தனக்குப்பின்னர் ஓவியக்கலையை வளர்ப்பதற்காக பல மாணவர்களை உருவாக்கியிருந்தார்.

இறுதியாக திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் இராஜகோபுரத்திற்கு வர்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வேளை தனது 50 ஆவது வயதில் 2000-12-25 ஆம் நாள் இறைபதம் அடைந்தார்.

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!