Sunday, June 16

அருட்கலாநிதி நீக்கிலாப்பிள்ளை மரியசேவியர் அடிகள்

0

                         மரியசேவியர் அடிகள் ஒருதுருவ நட்சத்திரம்

ஈழத்தின்  கலை  இலக்கியபுலத்திலும், கத்தோலிக்க கலை இலக்கியப் பாரம்பரி யத்திலும்                  தனது  பணிகளினாலும் கலை  ஆளுமையினாலும் முதன்மைப்படுத்தப் படுபவபர். அருட்கலாநிதி நீ. மரியசேவியர் அடிகள்.  57 ஆண்டுகள் கலை இலக்கியத்துறைகளோடும் சமுகப்பணிகளோடும், ஆன்மீகப்பணிகளோடும் தன்னைக் கரைத்துக் கொண்டவர், இனம் மதம் மொழிகடந்த மனிதம் என்ற உயரிய சிந்தைனையை வாழ்வாக்கிக் கொண்டவர், திருமறைக் கலாமன்றம் என்ற கலாசார நிறுவனத்தினை உருவாக்கி அதனுடாக நாடுதழுவியும் நாடுகடந்தும் பணியாற்றியவர். அம்மன்றத் தினூடக உருவாக்கம்பெற்ற பல படைப்பாளிகள் இன்று உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஈழத்திலே யுத்தம் கொழுந்துவிட்டெரிந்த காலத்தில் தனித்து நின்று கலைசெய்து கலையினூடாக தமிழ் இனத்தின் துயரங்களை உலகறிய செய்ததுடன் துயருற்ற மக்களுக்கான கலைவழி ஆற்றுப்படுத்தலையும் செய்தவர். நாடக ஆசிரியர், நெறியாளர்,ஆய்வாளர் பன்மொழி அறிஞர், பேச்சாளன், மெயியல்துறையில் பேராசிரியர், கவிஞர்.. என பன்முக ஆளுமைகளைக் கொண்டவர். எமது மரபுவழிக் கலைகள் பேணப்படுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்திருப்பவர், ஈழத்த்pல் இன ஒற்றுமைக்காக இரண்டு தசாப்பதங்களுக்கு மேலாக கலைகளினூடான பாலம் அமைத்து, பாரிய முயற்சிகளை மேற்கொண்டவர்.

அவர் இளவாலைக் கிராமத்தில் புனித றீற்றம்மாள் பங்குத் தளத்தைச் சேர்ந்த திரு நீக்கிலாப்பிள்ளை, எமிலியாப்பிள்ளை தம்பதிகளின் மூன்றாவது பிள்ளையாக 1939 டிசம்பர் 03 ஆம் திகதி பிறந்தார். ஒரு நடுத்தரக் குடும்பத்திலே பிறந்து, தனது ஆரம்பக் கல்வியை இளவாலை உரோமன் கத்தோலிக்க ஆரம்ப பாடசாலையிலும், தொடர்ந்து புனித ஹென்றி அரசர் கல்லூரியிலும் கற்றார். மீத்திறன் மிக்க மாணவனாக இரட்டை வகுப்பேற்றங்களோடு முன்னேறி 22வயதுக்குள் குருத்துவக் கல்வி முழுவதையும் முடித்து  பாப்பரசரின் விசேட அனுமதியோடு உரோமாபுரியில் 23 வயதிலே குருவாகி திருச்சபையின் பிரமாணிக்கம்மிக்க குருவாக 58 ஆண்டுகள் வாழ்ந்து, தனது எண்பத்தியோராவது அகவையில் இறைவனுடன் கலந்திருக்கின்ற கலைத்தூது மரியசேவியர் அடிகளின் பணி, காலமெல்லாம் நின்று நிலைக்கின்ற பணியாகும். திருச்சபைக்கும் தமிழ் உலகிற்கும் அவர் ஆற்றியபணி காலத்தால் நிலைத்திருக்கும் பணியாகும். அவை ஒவ்வொன்றும் ஆய்வு செய்யப்பட வேண்டிவை.

சிறந்த பேச்சாளனும் பிரசங்கியும்

மரியசேவியர் அடிகள் இளங்குருவாக ஈழத்துக்கு வந்த ஆரம்ப காலத்தில் உதவிப் பங்குத் தந்தையாக பல பங்குகளில் பணியாற்றினார். அக்காலத்தில் குறிப்பாக அறுபதுகளின் இறுதிக் காலத்திலும் எழுபதுகளின் தொடக்க காலப்பகுதிகளிலும் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் தேவாலயத் திருவிழாக்களில் முழங்கிய பிரசங்க குரல்களில் ஒன்று மரியசேவியருடையது. அக்காலத்தின் சிறந்த பிரசங்கிகளில் ஒருவராக அடிகளார் இருந்தார். திராவிட முன்னேற்றக்கழத்தின் படைப்புகள்பால் ஈரப்புக் கொண்டிருந்த அடிகளார,; அண்ணாத்துரை  போன்ற பேச்சாளர்களின் எதுகை மோனையுடன் பேசும் பேச்சு முறையை தனக்குள் உள்வாங்கிக்கொண்டார். அந்த நுட்பத்தினை பிரசங்கங் களுக்குப் பாவித்தபோது மக்கள் அதன் பால் ஈர்க்கப்பட்டனர். அத்துடன் முற்போக்குத் தன்மையான அவரது கருத்துக்களாலும் கவரப்பட்டனர். அவரது பிரசங்கத்தினை ஒலிப்பதிவு செய்து பொது வைபவங்களில் ஒலிபரப்புச் செய்யுமளவிற்கு அவரது பிரசங்கத்தால் பலரும் கவரப்பட்டிருந்தனர். மன்னார் மடுத் திருவிழாவிலே 1972ஆம் ஆண்டு இவர் தமிழிலும் சிங்களத்திலும் நிகழ்த்திய பிரசங்கம் பலராலும் புகழப்பட்டது. எழுபதுகளில் இலங்கை கத்தோலிக்க நிகழ்ச்சிக்குப் பொறுப்பாக செயற்பட்ட அடிகளாரின் வானொலி நாடகங்களையும் வானொலிப் பேச்சுக்களையும் உரும்பிராய் மக்கள் ஒலிபெருக்கிகள் கட்டி கிராமம் முழுவதும் கேட்பதற்கு வழிசெய்தனர். பாப்பரசர் ஆறாம் சின்னப்பர் இலங்கை வந்தபோது அந்த நிகழ்வை வானொலியில் நேரடி வர்ணனை செய்த அடிகளாரின் குரலையும் பேச்சு வன்மையையும் தினபதி பத்திரிகை பாராட்டி எழுதியது. அவ்வாறே ஆயர் எமிலியானுஸ்பிள்ளை அவர்களின் இறுதி அடக்க நிகழ்வை தனது கவித்துவத்தாலும்  பேச்சுவன்மையாலும் கல்லும் கரைய  நிகழ்த்திய உரையைப் பலரும் உயர்வாகக் கூறுவார்கள்.

அவ்வாறே அவர் பல அரங்குகளில் பல மொழிகளிலும் பேச வல்ல போச்சாளனாக இங்கு மட்டுமன்றி நாடு கடந்தும் செயல்புரிந்தார். யேர்மன் பசாவு பல்கலைக்கழகம், கனடா ஒன்ராரியோ பல்கலைக்கழகம், யோக் பல்கலைக்கழகம் போன்ற பலவற்றிலும் அவரது பன்மொழியிலான பேச்சுக்கள் இடம்பெற்றன அவர் பாராட்டப்பட்டார். பல மொழிகளை அவர் அறிந்தவராக இருந்தாலும் தமிழில் பேசும்போது எந்த வேற்றுமொழியும் கலக்காது தூய தமிழில் பேசுபவராக விளங்கினார்
ஆளுமைமிக்க கலைஞன்

கலைஞர்கள் எனப்படுவோர் சமூகத்திலே அரிதானவர்கள் மரியசேவியர் அடிகள், ஒரு குருத்துவக் கலைஞனாக வாழ்ந்தார். நாடக ஆசிரியராக, நாடகநெறியாளராக, தயாரிப்பாளராக கவிஞராக, எழுத்தாளராக பலரும் வியக்கின்ற படைப்பாளியாக வாழ்ந்தவர். 50இற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியவர். நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர். எல்லாவற்றுக்கும் மேலாக ‘திருப்பாடுகளின் நாடக மரபினை’ தமிழுக்குரியதாக ஆக்கி கடந்த 56 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அதனை பல்வேறு தளங்களில் மேடையேற்றி உலகத்தரத்தில் அதனை வளர்த்துவிட்டவர். அதுமட்டுமன்றி இனம் மதங்கடந்து பல்வேறு அறிஞர்கள் கலைஞர்கள், ஒன்றிணைந்து செயலாற்றக் கூடிய ஒற்றுமையை ஏற்படுத்திய கலைஞராகவும் திகழ்ந்தார்.

திருப்பாடுகள் நாடக மரபின் சிற்பி

“பாஸ் என்றால் சவிரிமுத்து சுவாமியின்ர பாஸ்தான் உண்மையான பாஸ்” என்று ஒரு காலத்தில் மக்கள் விழிக்கின்ற படைப்பாளியாக அடிகள் விளங்கினார். 1963 ஆண்டு முதன் முதலாக மன்னார் பங்கிலே உதவிப் பங்குத்தந்தையாக இருந்த காலத்தில் அங்கிருந்த இளைஞர்களை திரட்டி முதன் முதலாக மனிதர்கள் நடிக்கின்ற பாடுகளின் நாடகத்தினை மேடையேற்றினார். அதுவே மன்னாரில் நடந்த முதல் மனிதர் நடிக்கும் பாடுகளின் நாடகம். அந்த அனுபவத்தினைக் கொண்டு அவர் செல்லுமிடங்களிலெல்லாம் பாடுகளின் நாடகங்களை மேடையேற்றினார்.  1952 ஆம் ஆண்டு முதன் முதலாக ஆங்கிலத்திலே அருட்தந்தை லோங் அடிகளால் மனிதர்கள் நடிக்கின்ற பாடுகள் நாடகத்தினை புனித பத்திரிசியார் கல்லூரியில் அறிமுகம் செய்தார். தொடர்ந்து அதன் மொழி பெயர்ப்புப் பிரதியே பலராலும் மேடையேற்றப்பட்டது. ஆனால் தமிழில் முதன் முதலாக  பாடுகளின் நாடகங்களது பிரதியை எழுதியவர் மரியசேவியர் அடிகளே. இதுவரை இருபத்தைந்துக்;கும்; மேற்பட்ட பாடுகளின் நாடகங்களை அடிகளார் எழுதியுள்ளார். பாடுகளின் நாடகங்களை அதன் பிரதி தொடக்கம் அரங்க எற்பாடுகள், நடிப்பு, காட்சி, இசை, நெறியாக்கம் என்ற அதன் கலைத்துவத்தினை உலகத்தரத்தில் உயர்த்திவிட்டுச் சென்றிருக்கின்றார். எந்தளவுக்கு பரீட்சார்த்தங்களை மேற்கொள்ள முடியுமோ அந்தளவுக்கு அவரால் பரீட்சார்த்தங்கள் இம்மரபிலே மேற்கொள்ளபட்டுள்ளன. உலகத்தரத்திற்கு அதன் கலைத்துவத்தினை உயரத்தி நிற்கின்றார் என்றால் அது மிகையல்ல. தனக்குப் பின்னரும் இம்மரபினை சிறப்பாக நிகழ்த்தவல்ல இளஞ் சமூகமொன்றினையும் அவர் உருவாக்கிச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

திருமறைக் கலாமன்றத்தின் ஸ்தாபகர்

1963 ஆம் ஆண்டு அவர் ஆரம்பித்த கலை முயற்சிகள் படிப்படியாக உருவாக்கம் பெற்று 1965 ஆம் ஆண்டு திருமறைக் கலாமன்றமாக உருவெடுத்தது. ஆயர் எமிலியானுஸ் பிள்ளை அவர்கள் வழங்கிய ஊக்கத்துடன் பல்வேறு பணிகளை மரியசேவியர் அடிகள் அந் நிறுவனத்துக்கூடாக மேற்கொண்டார். ஆரம்பத்தில் இருந்தே அவருடன் இணைந்து கொண்ட கலைஞர் குழு அவருக்குப் பக்கபலமாக மாறியது. மறைசார்ந்த நாடகங்கள் நிகழ்ச்சிகள் என்று செயற்பட்டுக்கொண்டிருந்த மன்றம், 1988ஆம் ஆண்டில் இருந்து ஒரு கலாசார மையமாக மாறியது. இனம் மதம் மொழி கடந்து செயற்படும் செயற்களமாக ஆயர்களின் அனுமதியடன் சுதந்திரமான ஆற்றுகை மையமாக மாறியது. பல நூற்றுக் கணக்கான செயற்பாடுகளை நாடு தழுவியும் நாடு கடந்தும் செயலாற்றும் அமைப்பாக மாறியது. திறந்த வெளியரங்கு, கலையரங்கு, ஓவியக் கலையகம், அழகியல் கல்லூரி, தியான மண்டபம்  என  நிரந்தரமாக அமைக்கப்;பட்ட ஐந்து கட்டடத் தொகுதிகளுடன் இவ்வமைப்பு இப்போது இயங்கி வருகின்றது. கலைவளரச்சிக்காக இத்தனை கட்டடங்களை அமைத்தவர்கள் இலங்கையில் யாரும் இல்லை எனலாம். இக்கட்டடங்கள் அனைத்தும் அவரது பகீரத முயற்சிகளால் உருவாக்கப்பட்டவை. மரியசேவியர் அடிகள் தனது செயற்பாடுகள் அனைத்துக்கும் திருமறைக் கலாமன்றத்தினை. ஒரு கருவியாகக் கொண்டே செயற்படுத்தினார். அது மட்டுமன்றி இதனை ‘திருமறைக் கலாமன்ற அறக்கொடை’ நிறுவனமாகப் பதிவுசெய்து தனக்குப் பின்னரும் சுதந்திரமாக இயங்கக் கூடிய கட்டமைப்புடன் விட்டுச் சென்றுள்ளார். அவர் ஆற்றிய பலநூறு பணிகளின் சாட்சியாக திருமறைக் கலாமன்றம் திகழுகின்றது.

பண்பாட்டு மயப்படுத்தியவர்

மரியசேவியர் அடிகளின் வாழ்வும்  செயற்பாடுகளும் அவரின் வாழ்வியல் தத்துவங் களும்  பண்பாட்டுமயப்பட்டவையாகவே இருந்தன. திருமறைக் கலாமன்றத்திற்கூடாக அவர் ஆற்றிய பணிகள் அனைத்தும் பண்பாட்டினைப் பிரதி பலித்தன. இரண்டாம் வத்திக்கான் சங்கம் அந்தந்தப் பண்பாடுகளின்  நல்ல விடயங்களை திருச்சபை பயன்படுத்த முடியும் என்ற அனுமதியை வழங்கியது. அத்தகைய செயற்பாடுகளுக்கு அடிகளார் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். முதன் முதலாக பொங்கல் ‘தமிழர்களின் திருநாள்’ எனவே கிறிஸ்தவர்களும் அதனைக் கொண்டாடவேண்டும் என்று குரல் கொடுத்தது மட்டுமன்றி எழுபதுகளில் முதன் முதலாக பொங்கிப் பூசைசெய்தவர் அவரே. அவரைத் தொடர்ந்தே இன்று தேவாலயங்கள் எங்கும் பொங்கல் நிகழ்த்தப்படுகின்றது. அதுமட்டுமன்றி பண்பாட்டுத் திருப்பலிமுறையை அறிமுகஞ் செய்ததுடன் ஒவ்வொரு பொங்கல் தினத்திலும் பண்பாட்டுப் பூசையினை நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார். பண்பாட்டின் கூறுகளை திருச்சபையின் பல்வேறு விடயங்களிலும் கொண்டுவர முயன்றார். திருவழிபாட்டில் கீழைத்தேய இசைக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டுமென்பதனை வலியுறுத்தினார். திருமகனே தாலேலோ என்ற நூலில் கிறிஸ்து பிறப்பினை ஒரு தமிழ் பண்பாட்டுக்குரியதாக தனது கவிதைகளாலும் தேம்பாவாணிக் கவிதைகளாலும் வெளிப்படுத்தியதுடன் ஓவியங்களிலும் அவ்வாறான பண்பாட்டு மயப்பட்ட காட்சிகளை வரைவித்து பதிப்புச்செய்தார்.

பன்மொழி அறிஞன்

தமிழை தாய்மொழியாகக் கொண்டாலும் ஆங்கிலம், யேர்மன், இத்தாலியம், பிரஞ்ச்,ஸ்பானியம் போன்ற மொழிகளில் எழுதவும் பேசவும் வல்லவராக இருந்தார் சிங்களம், லத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளை அறிந்தவராக இருந்தார். இத்தகைய மொழி ஆளுமை அவர் பல நாடுகளுக்கும் சென்று பல்வேறு உதவிகளைப் பெறுவதற்கு துணையாக இருந்ததுமட்டுமன்றி பல்வேறு கட்டுரைகள் நூல்களைப் படிப்பதற்கும், படைப்பதற்கும் துணையாக இருந்துள்ளது. அவர் யேர்மன் பசாவு பல்கலைக்கழகத்தில் சைவ சிந்தாந்த மெய்யிலை அடிப்படையாகக்கொண்ட கலாநிதிப்பட்ட ஆய்வினை யேர்மன் மொழியிலேயே எழுதினார். என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிருந்த எத்தனையோ பேராசிரியர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் மொழிசார்ந்த சந்தேகங்களைத் தீர்ப்பவராக அவர் இருந்தார் என்பது பலரும் அறியாத உண்மை

சைவ சித்தாந்த அறிஞர்

ஒரு கத்தோலிக்க குருவானவராக இருந்தும் சைவசித்தாந்தத்தினை கற்று யேர்மன் மொழியிலே கலாநிதிப்பட்டப் படிப்பினை மேற்கொண்டதுமட்டுமன்றி அதனை தனது பாடமாகவும் கொண்டு புனித சவேரியார் பெரிய குருமடத்த்pலே பல காலம் பேராசிரியராக பணியாற்றினார். Journal of sidanntha studies  என்ற ஆங்கில சஞ்சிகையை தொடர்ச்சியாக வெளியிட்டது மட்டுமன்றி சைவ சித்தாந்த ஆய்வு வட்டம் என்ற ஒரு கலந்துரையாடல் களத்தினையும் நடத்திவந்தார். இதனால் அவரது பணிகளை இருசாராரும் விமர்சித்தனர். கிறிஸ்தவர்களில் சிலர், ஒரு குருவானவருக்கு ஏன் சைவம் என விமர்சித்தனர், சில இந்துக்கள் சிவநாமம் ஒதாதவர் நீறு தரிக்காதவர் எவ்வாறு சைவ சித்தாந்தத்தினை போதிக்கலாம் என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் மரியசேவியர் அடிகள் அதிலே மிகவும் தெளிவாக இருந்தார். உரோமாபுரியிலே அவர் குருத்துவக் கல்வியை கற்ற காலத்தில் சீன மெய்யியல் ஒரு பாடமாக இருந்ததாகவும்  அதை கற்கின்ற சூழல் ஏற்பட்டபோதுதான் தமிழர்களின் தத்துவமாகிய சைவசித்தாந்தத்தினை ஏன் ஒரு மெய்யியலாகக்கொள்ள முடியாது என்ற கொள்கையுடன் இருந்தவரை, முன்னாள் ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகை அவர்கள்  ஊக்கப்படுத்தி  படிப்பதற்குத் தூண்டியது மட்டுமன்றி புனித சவேரியார் குருத்துவக் கல்லூரி இங்கு அமைக்கப்படுவதற்கும் அம் மெய்யியல் கற்கை ஒரு காரணமென்பதனையும் குறிப்பிட்டார.;

ஒரு சமயநெறியினை அதன் நேரடியான பக்தி மார்க்கமாகவோ, அல்லது அதன் மறையியலாகவோ, அல்லது அதன் மெய்யியலாகவோ நோக்கலாம் என்றும் தான் சைவசித்தாந்தத்தின் மெய்யியலை கையாண்டதாகவும் அது தமிழர்களின் ஆன்மீகத்தை வெளிப்படுத்துகின்றது என்றும், குறிப்பிடும் அடிகளார், சைவ சித்தாந்தம் தொடர்பான பல ஆய்வு மாநாடுகளை நடத்தியதுடன் பல கட்டுரைகளையம், நூல்களையும், இறுவட்டுக்களையும் வெளியிட்டார். இறுதியாக அவர் ஆற்றிய பணியானது சைவ சித்தாந்த அகராதி ஒன்றினை ஆக்கும் பணியாக இருந்தது. அப்பணி நிறைவேறாமாலே அவர் விடைபெற்றமை வேதனைக்குரியது.

சமாதான தூதன்

‘இருளைப் பழிப்பதைவிட ஒளியை ஏற்றிவைப்பதே சிறந்தது’ என்ற புனித கிறிஸ்தோப்பர் இயக்கத்தினரின் கொள்கையால் கவரப்பட்டு செயற்பட்டு வந்த மரிய சேவியர் அடிகள் தொண்ணூறுகளில் தீவிரமடைந்திருந்த விடுதலைப்போர் நடவடிக்கை சூழலில் யாழ்ப்பாணம் முற்றுகையிடப்பட்டிருந்த காலத்தில் தனது கலைச் செயற் பாடுகளால் ஆற்றுப்படுத்தல் பணிகளை செய்தது மட்டுமன்றி, இங்கிருந்து கலைஞர் களை கிளாலி, கொம்படி போன்ற கடினமான போக்குவரத்துப் பாதைகளினூடாக பயணம் செய்து கொண்டுசென்று கொழும்பிலே அமைதியை விரும்பும் வார்த்தைகளற்ற நாடகங்களை மேடையேற்றினார்; நேரடியாக தமிழர் பிரச்சனையைப் பேச முடியாத அக்காலத்தில் சிங்கள மக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த அசோகச் சக்கரவர்த்தியின் கதையை, அவன் யுத்த விரும்பியாக தேசங்களை யுத்தத்தால் அடிமை கொண்டு இறுதியில் கலிங்கப்போரிலே யுத்தம் விளைவித்த அழிவுகளை கண்டு மனம் மாறி, புத்த தர்மத்தினை ஏற்றுக்கொண்டு சமாதான தூதுவனாகிய வரலாற்றினை நாடகமாக்கி அதற்குள் யுத்த அழிவுகளையும் அமைதிக்கான அவசியத்தினையும் வலியுறுத்தினார். அவ்வாறே சிங்கள நவீன நாடகரும் பேராசிரியரான எதிரிவீர சரச்சந்திராவின் குழுவினருடன் இணைந்து ‘தர்சனா’ என்ற நாடகத்தினை துட்டகைமுனு, எல்லாளன் வரலாற்றினை தென்னிலங்கை அரசியல் வாதிகள் இராணுவத்தினர் அனைவரையும் அழைத்து பார்வையிடச் செய்தது மடடுமன்றி சமாதானத்தின் அவசியத்தினை வலியுறுத்தினார். அவற்றின் தொடர்ச்சியாக பத்துப் பிராந்தியங்களில் திருமறைக் கலாமன்றத்தின் கிளைகளை உருவாக்கி அவர்களுக்கூடாக இன ஒற்றுமைக்கான பாரிய முயற்சிகளை மேற்கொண்டார். சமாதான காலத்தில் தென்பகுதியில் இருந்து கலைஞர்களை முதன் முதலாக யாழ்;பாணத்துக்கு அழைத்து வந்து இங்கிருந்த யுத்த அவலங்களை அவர்கள் காணச்செய்தவர் அவரே. அதுமட்டுமன்றி யாழ்ப்பாணம் கொழும்பு திருகோணமலை ஆகிய இடங்களில் இருமொழிசார்ந்த படைப்பாளர்களையும் ஒன்றிணைத்த மாபெரும் எழுத்தாளர் மாநாடுகளை நடத்தி சமாதானத்துக்கான விழிப்புணர்வுகளை தோற்றுவித்தார், அரசியல் சமயம் அனைத்துமே மனிதர்களைப் பிரிக்கும் பண்பினைக் கொண்டவை கலை மட்டுமே மனிதர்களை ஒன்றுபடுத்தக்கூடியது என்ற கொள்கையைக் கொண்ட அடிகளார் கலைக்கூடாக அமைதிக்கான பல முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டார். இங்கு அமைதிக்கான முயற்சிகளை மேற்கொண்டது மட்டுமன்றி தமிழர்கள் பாதிக்கப்பட்ட போதும் நெருக்குவாரத்திற்குள்ளாக்கப்பட்ட போதும் தகவல்களை வெளி நாடுகளில் இருந்த நலன் விரும்பிகளுக்கு தெரிவித்துக் கொண்டும் இருந்துள்ளார். இதனை அண்மையில் இரங்கல் உரை நிகழ்த்திய லண்டன் மன்செஸ்ரர் பல்கலைக்கழக பேராசிரியர் யேம்ஸ் தொம்சன், மற்றும் கிளெடியா போன்ற ஐரோப்பியர்களின் உரைகளில் அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.

இலக்கிய வாதி

சிறந்த மொழியறிவும் கல்வியறிவும் பெற்றிருந்த அடிகளார் சிறந்த இலக்கிவாதியா கவும் இருந்தார் அறுபதுகளில் இருந்து அவர் எழுதிய பாடல்கள் கவிதைகள் சிறந்த இலக்கி கருவூலங்களாக இன்றும் விளங்குகின்றன. நாற்பதுக்கும் மேற்பட்ட அவரது நாடகங்களைவிட்டு கிறிஸ்தவ நாடக இலக்கியம் பற்றி யாரும் பேச முடியாது. கிறிஸ்தவ நாடக இலக்கியத்திலே ஒரு திருப்புமுனையை அடிகளார் ஏற்படுத்தினார். அவரது இருபதுக்கும் மேற்பட்ட மறைபொருள் நாடகங்கள் ஒவ்வொன்றும் விவிலியத்தின் பல்வேறு உண்மைகளையும் புதிய பாணியில் எடுத்துச் சொல்பவை. அதுமட்டுமன்றி மறைந்த பாப்பரசர் புனித யோண் போல் அவர்கள் எழுதிய The Jeweler’s Shop என்ற நாடகத்தினை தமிழில் மொழிபெயர்த்து ‘நகையகம்’ என்ற பெயரில் வெளியிட்டார். ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர் எழுதிய கட்டுரைகள் ஐம்பதுக்கும் அதிகமானவை.

மரபுக்கலைகளின் காவலன்

எமது மரபுவழிக்கலைகள் பேணப்படவும் தொடரந்து பயிலப்படவேண்டும் என்ற பேரவாவுடன் பல பணிகளை ஆற்றினார். பல நாட்டுக்கூத்துக்களை மேடையேற்றிய துடன் பல கூத்து நூல்களும் அவரால் பதிப்புச்செய்யப்பட்டன. நாட்டுக்கூத்துவிழா, இசை நாடக விழா, கிராமியக்கலை விழா என பல விழாக்களை நடத்தி எழுச்சியை ஏற்படுத்தினார். நாட்டுக்கூத்துப் போட்டிகளை நடத்தி பரிசில்களை வழங்கினார். இளைய சமூகம் மரபுக் கலைகளை பயில்வதற்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்துக் கொடுத்தார்.  மரபில் இருந்து நவீனத்துவத்தினை நோக்கிய முயற்சிகளையும் ஊக்கப்படுத்தினார். திருமறைக் கலாமன்றத்தினால் 50இற்;கும் மேற்பட்ட அண்ணாவி மார்கள் காலந்தோறும் கௌரவப்படுத்தப்பட்டனர். இங்கிருந்து புலம்பெயர்ந்த எம்மவர்களிடையே அருட்டுணர்வலைகளைத் தோற்றுவிக்க கலைப் பயணங்கள் மூலமாக வழிசமைத்தார்.

இளைங்கலைஞர்களை உருவாக்கிய சிற்பி

கலைகள் காலங்கடந்தும் வாழ வேண்டுமாக இருந்தால் இளையோர் அதனைப் பயிலும் சூழல் ஏற்படவேண்டுமென்ற பேரவாவினால் ‘கவின் கலைகள் பயிலகம்’ ஒன்றினை 1989 ஆம் ஆண்டு ஆரம்பித்து இன்று வரை அதனை நடத்திவந்தார். கலைத்தூது அழகியல் கல்லூரியாக அது வளர்ச்சி பெற்றது. அவ்வாறே நாடகப்பயிலகம், சிறுவர் கலைக்கூடம, போன்ற பயிற்சிப் பிரிவுகளை உருவாக்கி; நூற்றுக் கணக்கான இளையோர் பயிற்சி பெறக்களமைத்தார். இன்று திருமறைக் கலாமன்றத்தினை இயக்குபவர்கள் மட்டுமன்றி  உலகம் முழுவதும் அரங்கத் துறையிலும் கலை இலக்கியத்துறையிலும் அவரது உருவாக்கங்கள் செயல் புரிந்து வருகின்றார்கள்.

நீ.மரியசேவியர்  அடிகளினால்  எழுதப்பட்டு வெளிவந்த  நூல்கள்

 1. கன்னி பெற்ற கடவுள் (1968) (நாடகம்)
 2. ஒரு துளி (1969) (நாடகம்)
 3. அன்பில் மலர்ந்த அமர காவியம் (1970)  (திருப்பாடுகளின் நாடகம்)
 4. சுவைத் தேன் (1970 ) (கவிதைகள் )
 5. பலிக்களம் (1973) முதற்பதிப்பு (திருப்பாடுகளின் நாடகம்)
 6. THE  LIFE  AND  TIMES  OF  ORAZIO  BETTACCHINI (1980)  (ஆங்கில மொழியிலே அமைந்த ஆய்வு நூல்)
 7. கலைமுகம் (1981)   (அரங்க கட்டுரைகள்)
 8. Die Metaphysik des Shaiva- Siddhanta Systems  (1984) (யேர்மன் மொழியிலே அமைந்த ஆய்வுநூல்)
 9. சாவை வென்ற சத்தியன் (1984) (உயிர்ப்பு நாடகம்)
 10. சிலுவை உலா (1991) (திருப்பாடுகளின் நாடகம்)
 11. கல்வாரிப் பரணி (1992) (திருப்பாடுகளின் நாடகம்)
 12. கல்வாரிக் கலம்பகம் (1993) (திருப்பாடுகளின் நாடகம்)
 13. Siddhanta Traditions, Philosopher-Sages (1993)(ஆங்கில மொழியிலே அமைந்த கட்டுரைகள்)
 14. பலிக்களம் (1993) இரண்டாம் பதிப்பு (திருப்பாடுகளின் நாடகம்)
 15. A CATHOLIC-HINDU ENCOUNTER (1994) (ஆங்கில மொழியிலே; அமைந்த ஆய்வுநூல்)
 16. JAFFNA – The land of  the Lute (1994)    (ஆங்கில கட்டுரைகள்)
 17. பலிக்களம் (1996) மூன்றாம் பதிப்பு (திருப்பாடுகளின் நாடகம்)
 18. சுவைத் தேன் (1996) இரண்டாம் பதிப்பு (கவிதைகள்)
 19. களங்கம் (1996)  (நாடகம்)
 20. காவிய நாயகன் (2004) (திருப்பாடுகளின் நாடகம்)
 21. நகையகம் (2007) ( பாப்பரசர் இரண்டாம் சின்னப்பரின் மொழி பெயர்ப்பு நாடகம்)
 22. வேள்வித் திருமகன் (2012) (திருப்பாடுகளின் நாடகம்)
 23. சிங்க குலச் செங்கோல் (2015) (கூத்துக்கள்)
 24. ESSAYS ON SAIVA SIDDHANTHAA (2016) (ஆங்கில கட்டுரைகள்)
 25. வாகைச் சுடர் (2015)  (கட்டுரைகள்)
 26. காலத்தின் தடங்கள் (2019) (கலைமுகம் ஆசிரியர் தலையங்கங்கள்)
 27. மறைபொருள் நாடகங்கள் (2019) (நாடகத் தொகுதி)
 28. அரங்க வலைகள் (பதிப்பில்) (நாடக கட்டுரைகள்)

மரியசேவியர் அடிகள் ஆசிரியராக இருந்து வெளியிட்ட சஞ்சிகைகள்

 1. சிலுவை
 2. கலைமுகம்
 3. Journal of Siddhananthta Studies (ஆங்கிலம்)

மரியசேவியர் அடிகளின் மேற்பார்வையில் வெளிவந்த நூல்கள்

 1. ‘ஆற்றுகை’ நாடக அரங்கியலுக்கான சஞ்சிகை
 2. திருமறை நாடக நூல் வரிசை
 3. கூத்து நூல் வரிசை

மரியசேவியர் அடிகள் எழுதிய நாடகங்கள்

மறைபொருள் நாடகங்கள்

 1. உயிர் கொடுத்த உத்தமர்கள் (1963) –  (வரலாறு)
 2. கோவில் கண்ட கொலை (1964) –  (வரலாறு)
 3. ஒருதுளி (1965- 1970)
 4. காட்டிக்கொடுத்தவன் (1965- 1970)
 5. அமைதியின் அண்ணல் (1965) (கிறிஸ்து பிறப்பு)
 6. எழுதிய கரம் (1965- 1970)
 7. கன்னி பெற்ற கடவுள் (1965- 1970) (கிறிஸ்து பிறப்பு)
 8. கபட மனக்காவலன் (1965- 1970) (கிறிஸ்து பிறப்பு) வானொலி
 9. வா மகனே வா (1965- 1970)
 10. கவலையின் எல்லை (1965- 1970) (வானொலி)
 11. இன்றிரவு (1965- 1970) (வானொலி)
 12. சோதனைக் களம் (1965- 1970) (வானொலி)
 13. கலக்கம் தீர்த்த கலிலேயர்கள் (1965- 1970)
 14. அளவுகோல் (1975)
 15. செந்தணல் (1965- 1970)
 16. குவலயம் பெற்ற குழந்தை (1965- 1970) (கிறிஸ்து பிறப்பு)
 17. அமலன் காட்டிய வழி (1965- 1970) (வானொலி)
 18. கனவு கண்ட மனைவி (1989)

திருப்பாடுகளின் நாடகங்கள்

 1. திருப்பாடுகளின் காட்சி (1964)
 2. கல்வாரியில் கடவுள் (1967)
 3. கடவுள் வடித்த கண்ணீர் (1968)
 4. சாவை வென்ற சத்தியன் (1968) (உயிர்ப்பு நாடகம்)
 5. அன்பில் மலர்ந்த அமர காவியம் (1969)
 6. களங்கம் (1969) (பாடுகள் தொடர்பான நவீனம்)
 7. பலிக்களம் (1972)
 8. மலையில் விழுந்த துளிகள் (1989)
 9. சிலுவை உலா (1991) (சிற்றிலக்கிய வரிசை)
 10. கல்வாரிப்பரணி (1992) (சிற்றிலக்கிய வரிசை)
 11. கல்வாரிக்கலம்பகம் (1993) (சிற்றிலக்கிய வரிசை)
 12. சிலுவைச்சுவடுகள் (1998)
 13. காவிய நாயகன் (2000)
 14. வேள்வித்திருமகன் (2010)

இலக்கிய நாடகங்கள்

 1. கதையும் காவியமும்      (1973)
 2. மங்கையர்க்கரசி (1974)
 3. சிந்தாமணி (1993)
 4. குண்டலகேசி (1993)
 5. வளையாபதி (1994)

நாட்டுக் கூத்துக்கள்

 1. மூவேந்தர் (1967)
 2. சிங்ககுலச் செங்கோல்      (1968)

நடன நாடகங்கள்

 1. அருளும் இருளும் (1971)
 2. சிறை மீட்ட இறை (1992)
 3. இயேசு பிள்ளைத் தமிழ் (2010 )
 4. வானோர் விடு தூது       (2011)
 5. இயற்கை ஆடுகளம்      (2015)
 6. காலதூரிகை (2015)
 7. மெய்யியல் துளிகள்       (2015)

வார்த்தைகளற்ற நாடகங்கள்

 1. புறம் 231/232      (1992)
 2. அசோகா (1992)
 3. திருச்செல்வர் காவியம் (1992)
 4. தர்சனா      (1994)
 5. சமயத்தூது (1995)
 6. கி.மு.200 (1993)
 7. புயலான பூ (2013)
 8. ஒனிரோ
 9. ஒமேகா(13.7+p=0)          (2018)

மரியசேவியர் அடிகளுக்கு வழங்கப்பட்ட கௌரவங்கள்

 1. கலைத்தூது- 1997 ஆம் ஆண்டு யேர்மன் ஆன்மீகப்பணியகம் கலைத்தூது என்ற விருதினை வழங்கியது.
 2. கலைஞான வாரிதி – 2000ஆம் ஆண்டில் கனடா இந்துமாமன்றம் இவ்விருதினை வழங்கியது.
 3. கலைமதி- 2000ஆம் ஆண்டில் கனடா எழுத்தாளர் ஒன்றியம் இவ்விருதினை வழங்கியது.
 4. கத்தோலிக்க ஊடக விருது- 2004ஆம் ஆண்டில் UNDA நிறுவனம் இவ்விருதினை வழங்கியது.
 5. பாரம்பரியக் கலைக்காவலன் – 2002ஆம் ஆண்டில் உரும்பிராய் பங்கு மக்களால் வழங்கப்பட்டது
 6. கலைஞான வித்தகர் – 2005 ஆம் ஆண்டில் லண்டன் திருமறைக் கலா மன்றம் இவ்விருதினை வழங்கியது.
 7. கலைச்சுடர் – 2006 ஆம் ஆண்டில் வலிகாமம் வடக்கு பிரதேசச் செயலம் இவ்விருதினை வழங்கியது.
 8. ஆளுநர் விருது – 2007ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இந்த விருதினை வழங்கியது.
 9. கிறிஸ்தவ சாகித்திய விருது – 2008ஆம் ஆண்டில் இலங்கை கிறிஸ்தவ கலாசார விவகார அமைச்சினால் இந்த விருது வழங்கப்பெற்றது.
 10. கலைக்காவலன் – 2008ஆம் ஆண்டில் நீர்கொழும்பு இந்துமாமன்றம் இந்த விருதினை வழங்கியது.
 11. கௌரவ கலாநிதிப் பட்டம் – 2010 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் பட்டமளிப்பு விழாவில் வாழ்நாள் கலை இலக்கிய சேவைக்காக இக் கலாநிதிப் பட்டத்தினை வழங்கி கௌரவித்தது.
 12. யாழ் விருது – 2016 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மாநகர சபையின் சைவவிகார குழுவினால் இந்த விருது வழங்கப்பெற்றது.
 13. சமாதானத்துக்கான உயர் விருது – 2016ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அவர்களால் சமாதானத்துக்கும் நல் இணக்கத்துக்குமான விருது வழங்கப்பட்டது.
 14. கம்ப கலாநிதி இராதாகிருஸ்ணன் விருது. 2017ஆம் ஆண்டில் அகில இலங்கை கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழாவில் மேற்படி விருது வழங்கப்பட்டது.
 15. அரங்கத்துறையின் உயர் கொளரவம்- யாழ்;ப்பாண பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறையின,; ‘நாடகமும் அரங்கலைகள் பீடமானது’ நடத்திய நாடகவிழாவில் ஈழத்தின் அரங்கத்துறையில் ஆற்றிய வாழ்நாள் சாதனைக்காக மரியசேவியர் அடிகளாருக்கு உயர் கௌரவத்தினை வழங்கியது.
 16. சாதனைத்தமிழன் – 2019 ஆண்டு டான் தொலைக்காட்சிக் குழுமம் மேற்படி விருதினை மிகுந்த கௌரவத்துடன் யாழ் முற்றவெளியில் வழங்கியது.
 17. நாடகக் கீர்த்தி – 2020ஆம் ஆண்டில் இலங்கை கலாசார அமைச்சு நாடகக் கலைஞர்களுக்கு வழங்கும் உயர் விருதான இவ்விருதினை மரியசேவியர் அடிகளுக்கு வழங்கியது.                                                        

                                                       கட்டுரையாளருக்கு நன்றி

யோ.யோண்சன் ராஜ்குமார்;     (காவலூர் யோவான்)

பிரதி இயக்குநர்,

திருமறைக் கலாமன்றம்.

 

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!