தீவகத்திலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கான நுழைவாயிலாக அமைந்திருப்பது மண்கும்பான் பகுதியாகும். வெள்ளைப்புற்றடி என்னும் இவ்விடத்தில் கோவில் அமைவதற்கான மூலகாரணமாக அமைந்தவர் வைத்திலிங்கம் என்னும் செட்டியாராவார். அவர் வாழ்ந்த காலம் சரியாகத் தெரியாதுவிடினும் ஆலயத்தினுடைய தோம்புப்பதிவானது சிதைந்த நிலையிலிருக்கும் பதிவின் பிரகாரம் 1769 ஆண்டு எனவும் இன்னொரு பதிவில் 1832 ஆம் ஆண்டு எனவும் காணப்படுவதிலிருந்து இவ்வாலயமானது மிகவும் பழமையானது என்பதனை உணர்ந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது. வைத்திலிங்கம் செட்டியார் என்பவர் யாழ்ப்பாணத்தில் விநாயகர் கோவில் ஒன்றினை அமை க்கும் நோக்குடன் தனது உதவியாளருடன் விநாயகர் விக்கிரகம் ஒன்றினை இந்தியாவிலிருந்து கப்பல் மூலம் ஊர்காவற்றுறை வழியாக கொண்டு வந்திறங்கினார். கால்நடையாக யாழ்ப்பாணம் சென்று களைப்பாறுவதற்காக வெள்ளைப்புற்றடி என்னும் தற்போது கோயில் அமைந்திருக்கும் காணியில் தாம் கொண்டுவந்த விநாயகர் விக்கிரகத்தினை இறக்கி வைத்துவிட்டு இளைப்பாறி பின்னர் பயணத்தினை தொடரும் நோக்கில் விக்கிரகத்தினைத் தூக்கியபொழுது விக்கிரகத்தினை அந்த இடத்திலிருந்து இம்மியளவேனும் அசைக்க முடியாமலிருந்தமையினால் செட்டியார் அவ்வூர் மக்களை அழைத்து விநாயகருக்கு இவ்விடத்தில் கோவில் அமைத்து வழிபடுமாறு கூறி தமது பயணத்தினைத் தொடர்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள செவிவழிக்கதையிலிருந்து ஆரம்ப வரலாற்றினை அறியமுடிகின்றது. ஊர் மக்கள் சிறுகொட்டிலமைத்து வழிபட்டு வந்தனர். இவ்வூரைச்சேர்ந்த குருநாதர் சின்னத்தம்பி என்பவர் முகாமையாளராகப் பணியாற்றியிருக்கின்றார். யுத்த சூழ்நிலைகளால் கடும்பாதிப்புற்றிருந்த இவ்வாலயம் ஊர்மக்களின் ஒத்துழைப்போடு புனருத்தாரனம் செய்யப்பட்டு 2005 ஆவணி மாதம் கும்பாபிN~கம் நடைபெற்றது.