நல்லூரில் உள்ள இக்கோயில் ஏறத்தாழ ஆயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்னே யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த தமிழ் மன்னனாகிய சிங்கையாரியச் சக்கரவர்த்தியாலே தனது கோட்டையின் கீழைக்கோபுர வாயிலிலேதான் வெளியே போகும் போதெல்லாம் தரிசித்து வழிபாடு செய்து போவதற்காக அமைக்கப்பட்டது என்பது புராதன யாழ்ப்பாண வரலாற்று நூல்களிலிருந்து அறியப்பட்ட செய்தி ஆகும். இன்னும் எல்லைக் கடவுளாக நல்லையின் பதியிலே கிழக்குப்புற எல்லையி லே நாயன்மார்கட்டு என்னும் கிராமத்தில் சிறந்து விளங்கும் ஆலயங்களுள் ஒன்றாகச் சைவத்தமிழ் மக்களால் போற்றப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணவைபவமாலை என்ற நூலில் யாழ்ப்பாண மன்னர்கள் நல்லூரில் தலைநகரை நிறுவிய இராஜதானியின் நாற்புறமும் அமைந்தகாவற் கோவில்களிலே கிழக்கிலே அமைந்த வெயிலுகந்த விநாயகர் ஆலயமும் ஒன்றாக விளங்கியதை ஆய்வாளர் பலரும் இன்று ஏற்றுக்கொள்வர்.வெயிலுகந்த பிள்ளையார் என்னும் பெயரிற்குப் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றது. இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டதால் அந்தச் சிலையின் ஊர்ப் பெயரைச் சேர்த்து வெயிலுகந்த விநாயகர் என அழைக்கப்பட்டதெனவும் கருதப்படும்.கரிய மழை பெய்து கொண்டிருக்கும் போது கூடச் சூரியனுடைய கதிர்களில் ஒரு கற்றை இப்பிள்ளையார் மீது விழுந்து பரவிக் கொண்டிருந்தது என்ற காரணத்தினால் இப்பெயர் உருவானது எனவும் கூறுவர். சூரிய தரிசனம் எப்போதும் படக்கூடிய கிராதிக் கோயிலாக இக்கோயிலின் கருவறை அமைந்திருப்பதனால் இப்பெயர் ஏற்பட்டதெனவும் கூறப்படும். எனினும் இப்பிராந்தியத்தில் மேற்கொண்ட இடப்பெயர் பற்றிய வரிசையில் மடத்துவாசல கோட்டைவாசல், காட்டுவாசல் என்பன ஒரு தனிப் பண்பாட்டுக் குறியீடுகளாக விளங்குகின்றன. இதன் காரணமாக வாசல் உகந்தபிள்ளையார் என்று குறிக்கப்பட்டு பின்னர் அது மருவி வெயிலுகந்த பிள்ளையார் என மாறியிருக்கலாம் என்றும் கருதுவர். வருடாந்த மகோற்சவ விழா பங்குனி உத்தர நட்சத்திரத்தை தீர்த்தமாகக் கொண்டு பத்துத் தினங்கள் நடைபெறுகின்றது.