1914-09-16 ஆம் நாள் அளவெட்டி கிழக்கு அலுக்கை என்னும் இடத்தில் பிறந்தவர் நல்லாசிரியராய்த்திகழும் புலவரவர்கள் பலசெய்யுள் நூல்களுக்கு ஆசிரியராவார். மரபுவழிப் பாடல்கள், பிரபந்தங்கள் இயற்றுவதில் புகழ்பெற்றவர். இது வரையில் முப்பதிற்கு மேற்பட்ட நூல்கள் அச்சேற்றப்பட்டுள்ளன. 1992 ஆம் ஆண்டு கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடத்திய சுவாமி விபுலானந்தர் கவிதைப் போட்டியில் சுவாமி விபுலானந்தர் நான்மணிமாலை என்னும் இவரது பாடல் முதற்பரிசு பெற்றமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி 1994இல் நல்லூர் இணை மணிமாலை என்னும் நூலும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் முதற்பரிசு பெற்றுள்ளது. இவர் ஊஞ்சல், நான்மணிமாலை, மும்மணிமாலை, ஒருபாஒருபது, திருப்பள்ளியெழுச்சி, கலம்பகம், பிள்ளைத்தமிழ் வருக்கமாலை,அட்டமங்கலம் முதலான பல்வகைப் பிரபந்தங்களைப் பாடியுள்ளமை மனங்கொள்ளத் தக்கது. மரபுவழிப் பாடல்களை எல்லோருக்கும் விளங்கக்கூடிய இலகுவான மொழிநடையில் எழுதுவது இவரது தனித்துவமான திறமையாகும். அளவை கும்பளா வளைப்பிள்ளையார் நான்மணி மாலை, இணுவில் மஞ்சத்தடி கப்பனைப்பிள்ளையார் திருவூஞ்சல், அளவை வெள்ளியம்பதி மாகாளியம்மை திருவூஞ்சல், இணுவில் சிவகாமியம்மை திருவிரட்டை மணிமாலை மற்றும் திருப்பள்ளியெழுச்சி, தெல்லியூர் துர்க்கையம்மன் மும்மணிமாலை,உரும்பிராய் கருணாகரப் பிள்ளை யார் திருவிரட்டை மணிமாலை, திருவடிவேற்சுவாமிகள் ஒருபா ஒருபது, நல்லூர்க் கலம்பகம், நல்லூர் ஒருபாஒருபது, நல்லூர் இணைமணிமாலை, பெருவிளான் கதிரமலை கந்தசுவாமியார் திருவூஞ்சல், இணுவில் ஆனந்தநடராசர் திருவூஞ்சல், இலங்கைவளம், மீசாலை வெள்ளை மாவடிப் பிள்ளையார் நான்மணிமாலை, செந்தமிழ்மாலை, அருணகிரிநாத சிவசுப்பிரமணியர் போற்றிப்பத்து, சுவாமி விபுலானந்த அடிகளார் நான்மணிமாலை, சுளிபுரம் பறளாய் சிவசுப்பிரமணியர் பிள்ளைத் தமிழ், இணுவில் சிவகாமியம்மன் இடர்களைப்பதிகம், வருக்கமாலை, நாவற்குழியூர் நடராசன் புகழ்மாலை, நல்லூர் ஆதீனம் சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் அட்டமங்கலம், பண்டிதமணி கலாநிதி கணபதிப்பிள்ளை இருபாஇருபது, இயற்கையிலிறைவன், பண்டிதமணி நான்மணிமாலை முதலிய பதிகங்கள் இவரால் பாடப்பெற்று நூலாக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அருட்கவி சீ.விநாசித்தம்பி அவர்கால் முதுபெரும்புலவர் எனப்போற்றப்பட்டவர். 2002 ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் திணைக்களம் கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது. 2014-09-16 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.