1930-10-09 ஆம் நாள் அளவெட்டி – நாதோலை என்னும் சிற்றூரில் பிறந்து சிறுவிளானை வாழ்விடமாகக் கொண்டிருந்தார். மகாராஜபுரம் சந்தானம் அவர்களிடம் இசை பயின்ற முதலாவது மாணவன் என்ற பெருமையைப் பெற்ற இவர் வாய்ப்பாட்டு, வயலின், ஆர்மோனியம், உடுக்கு, கெஞ்சிரா ஆகியவற்றினை நுணுக்கமாகக் கற்றுத்தேர்ந்தவர். பைரவி, முகாரி, பேகட, ரீதிகௌளி, ஆனந்தபைரவி, உசேனி, பூர்விகல்யாணி, வஸந்தா போன்ற இராகங்களை இராக ஆலாபனை செய்வதில் சிறப்பிடம் பெற்றவர். பாடலின் பொருளை உணர்ந்து பாவத்துடன் பாடும் இவரது பாடல்கள் கேட்பவரின் மனதை நெகிழச்செய்யும்.சுருதியில் மிகக்கூடிய கவனம் எடுக்கும் இவர் மாணவர்களின் கட்டிளமைப் பருவத்தில் ஏற்படும் குரல் உடைவை கவனமாகக் கையாண்டு சிறந்த குரல் வளத்தைப் பெறவைக்கும் சிறந்த ஆசிரியத்துவத்தைப் பெற்றிருந்ததுடன் சுருதிப்பெட்டி, ஹார்மோனியம் போன்ற இசைக்கருவிகளைச் சீர்செய்யவும் வீணையின் மெட்டினை ஸ்ருதி ஸ்தான சுத்தமாக உருவாக்கவும் சீர் செய்யவும் தனது அறிவின் மூலம் அறிந்திருந்தார்.
1950 இல் இலங்கை இராணுவ சேவையிலும் 1956-1958 வரையான காலத்தில் இலங்கை வானொலிக் கலைஞராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றிய பின்னர் 1959-02-02 ஆம் நாளிலிருந்து ஆசிரியர் நியமனம் பெற்றார். இத்துறையில் பல நல்ல மாணவர் பரம்பரையை உருவாக்கி கலையுலகிற்கு தன்னாலான பணியை வழங்கியுள்ளார். இவரது பணியைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதற்கு இத்துறையில் தனது வாரிசான வர்ணராமேஸ்வரனை உருவாக்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இசை, பண்ணிசை ஒலிநாடாக்களை வெளியிட்டதுடன் கோணேஸ்வரப் பெருமான் மீது கீர்த்தனைகளையும் பாடியுள்ளார்.இரண்டாவது உலக இந்து மாநாட்டில் திருமுறைகளும் பண்களின் மாற்றங்களும் என்ற ஆய்யுக்கட்டுரையினையும் தோற்றம் துடியதனில் என்ற உடுக்கைப் பற்றிய வரலாற்றுக் கட்டுரையினையும் சமர்ப்பித்தவர். சிங்கப்பூர், மலேசியா போன்ற கடல் கடந்த நாடுகளிலும் தனது இசையாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். சங்கீதரத்னம் பட்டம் பெற்ற இவரது கலைச்சேவைக்காக 1998 ஆம் ஆண்டு கலாபூஷணம் விருதும் 2005 ஆம் ஆண்டு கலாரத்னம் விருதும் வழங்கி மதிப்பழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2014-10-23 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.