1924 ஆம் ஆண்டு வடமராட்சி- கரவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். திருஞானசுந்தரம் என்ற பெயருடைய இவர் ஓவியராக,எழுத்தாளராக,கவிஞராக, நூற்றொகுப்பாசிரியராக, சஞ்சிகை வெளியீட்டாளராக பல்துறைப் பணியாற்றியிருப்பினும் கருத்துச் சித்திரங்களை வரைந்து ஓவியக் கலையில் புதிய முறைமையில் சாதனை படைத்து சிரித்திரன் சுந்தர் என்று பெயரை நிலை நிறுத்தியவர். 1962-1995 வரை தொடர்ச்சியாக முப்பத்திரண்டு ஆண்டுகள் சிரித்திரன் என்ற நகைச் சுவை மாத இதழை வெளியிட்டதோடு அதன் ஆசிரியராகவும் பணியாற்றியவர். ரேகைச் சித்திரங்களை வரையும் ஆற்றலுடைய அவர் சித்திரகானம் என்ற கருத்தோவியத் தொடர் மூலம் பிரபல்யமான சினிமாப் படங்களை தலைப்புக்களாகக் கொண்டு சமூகக்குறைபாடுகள் பலவற்றினைச் சுட்டிக்காட்டி கருத்தோவியமான மைடியர் மச்சான் என்பதன் மூலம் விமர்சனம் செய்தார். இதேபோல மிஸ்சிஸ்டாமோடிரன் என்ற பாத்திரமும் சிரித்திரன் சஞ்சிகையில் பிரபல்யமானது. ஆங்கில மோகத்தில் வாழும் தமிழரின் வாழ்வினை நகைச்சுவையாக எள்ளிநகையாடி தமிழின் மீதான பற்றினை எடுத்தியம்பினார். சமூகச் சீர்திருத்தம்,மக்களுக்குத் தேவையானவற்றினைச் சொல்வது என்ற ஓவியப் பரிமாணங்களை வெற்றிகரமாகக் கையாண்டு நீங்காப் புகழையடைந்த இக்கலைஞன் 1969 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.