1906.04.28 ஆம் நாள் அல்வாய் என்னும் ஊரில் பிறந்தவர். வியாபாரத்தினை தமது தொழிலாகக் கொண்டிருந்த சுவாமிகள் சந்நிதியான் மீதும் வல்லிபுர ஆழ்வார் மீதும் அளவிறந்த பக்தியுடைய வராய் அடிக்கடி ஆலய தரிசனம் செய்தும் இறை தியானத்திலும் ஈடுபட்டு வந்தார்கள். தருமமானவழியில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த இவர் இல்லற வாழ்வில் தமது நற்பணிகளையெல்லாம் செவ்வனே ஆற்றினார். தமது இருபத்தைந்தாவது வயதில் சந்நிதியான் காலடியில் குருநாதரான சின்னத்தம்பிச் சுவாமிகளை தரிசிக்கும் பேறுபெற்றார். தென்னிந்திய தல யாத்திரைகளை மேற்கொண்டிருந்த இவர் தனது ஆன்மீக நாட்டத்தின் பொருட்டு சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருந்த சந்நிதியான் சூழலில் வாழும் எண்ணத்தைத் தூண்டியது. தென்னிந்திய யாத்திரையை நிறைவேற்றி தலைமன்னாரிலிருந்து புகையிரதத்தில் கொடிகாமம் வந்திறங்கியபோது இவருடைய தலையில் கெருடன் வட்டமிட்டு சந்நிதியான் வரை அழைத்துச் சென்று அங்கே சின்னத்தம்பிச்சுவாமிகளின் ஆன்மீக சிந்தனையின்பால் ஈடுபட வைத்தது. அன்றிலிருந்து சின்னத்தம்பிச் சுவாமிகளின் சீடராய் குருவிற்குப் பணிவிடைகளாற்றி வந்தார். குருவின் சமாதியினைத் தொடர்ந்து அவருடைய குருபூசையினையும் நடத்திவந்த சுவாமிகள் காண்போர் எல்லோரையும் கடவுளாகவே கொண்டார். பிராணிகள், மனிதர்கள் என எல்லோரிடமும் கடவுளைப் பார்த்தார். அவர்களை நல்வழிப்படுத்தினார். அனைவரையும் கடவுள் வாரும், உணவு அருந்தும் என அன்பாக உபசரிப்பார். வியாழக்கிழமைகளில் மௌன விரதமிருப்பார். 1972 களில் மௌன விரதத்தினைக் ஆரம்பித்து இரண்டாண்டுகளின் பின்னர் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மௌன விரதத்தினைக் கடைப்பிடித்து வந்தார்கள்.1976 ஆம் ஆண்டிலிருந்து நித்திய மௌனத்தினைக் கடைப்பிடித்தார். இதனால் இவரை கடவுள் சுவாமி எனவும் மௌனகுரு சுவாமி எனவும் பக்தர்களால் அழைக்கப்படலானார். 1980-09-08 ஆம் நாள் சமாதி நிலையடைந்தார்.
