இணுவில் சிவகாமி அம்மன் ஆலயத்தின் பக்தரான சின்னத்தம்பிப்புலவருக்கு 1924 ஆம் ஆண்டு மகனாக அவதரித்தவர்தான் சச்சிதானந்த சுவாமிகள். சுவாமிகளுக்கு தந்தையாரிட்ட பெயர் பேராயிரம் உடையார் என்பதாகும். சிவகாமி அம்மனின் அருளால் அவதரித்த சுவாமிகள் சிறுவயது முதலே தெய்வீக நாட்டமுடையவராகத் திகழ்ந்தார். சிறுவயதில் வீட்டிலிருந்து வெளியேறி வேதாந்த மடத்தில் மகாதேவ சுவாமிகளிடம் சரண்புகுந்து இறைதொண்டுகளில் தன்னை ஈடுபடுத்தி மகாதேவ சுவாமிகளின் அன்பும் அரவணைப்பும் பெற்ற சுவாமிகளை மேலும் துறவறத்தில் நாட்டம் கொள்ள வைத்து முழுமையாகத்தன்னை துறவறத்தில் ஈடுபடுத்திக் கொண்டார். இணுவில் பதியிலே பிறந்து பேராயிரமுடையாரெனப் பிள்ளைத்திருநாமம் பூண்டு குருஞானோபதேச தீட்சையின் பின் சச்சிதானந் தராக தீட்சா நாமந்தரித்து கைதடியில் அத்வைத ஞானகுரு பீடத்தை ஸ்தாபித்து சமாதி நிலை மூலம் விவேக முத்தியடைந்தார். இவர் பல அத்வைத ஞானவழிப்பாடல்களையும் இயற்றியுள்ளார். குறிப்பாக இவரால் இயற்றப்பட்ட பிரார்த்தனைப் பாடற்றொகுப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
