1933 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் குருநகர் என்ற இடத்தில் அல்போன்சஸ் வெரோனிக்கா தம்பதியரின் புதல்வனாகப் பிறந்தவர். 1939 – 1952 காலப்பகுதியில் தனது ஆரம்பக் கல்வியினையும் உயர் கல்வியினையும் யாழ்ப்பாணம் புனித சாள்ஸ் பாடசாலையிலும், புனித சம்பத்திரிசியார் கல்லூரியிலும் கற்றுப் பின்னர் 1950 – 1952 காலத்தில் ஓவியர் எஸ். பெனடிக்ற்றிடம் ஓவியப் பயிற்சி பெற்றார். 1953 – 1957 காலத்தில் கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் கற்று தனது ஓவியப்புலமையை மேலும் மெருகூட்டினார். 1957 – 1976 இல் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றினார். 1976 –1991 வரை, கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி ஆசிரிய சேவையிலிருந்து ஒய்வு பெற்றார்.
நவீன ஓவியக் கலையில் தனக்கென்றதான ஒரு பாணியினை ஏற்படுத்திக் கொண்டவர். 1958 ஆம் ஆண்டிலிருந்து விடுமுறைக் கால ஓவியப்பள்ளி என்ற அமைப்பினூடாக ஓவிய மாணவர் பரம்பரையினை உருவாக்கியவர். மாற்குவின் கூடம் என அழைக்கும் வகையில் புலமைசார் ஓவியப்பணி ஒன்றினை உருவாக்கியுள்ளார் .மரபுவழிசார் தராதர அளவுகோல்களை நிராகரித்து காலவேகத்தின் போக்கிற்கேற்ப நவீன ஓவியங்கள் மிகவும் அவசியமானது என்ற கருத்தாக்கத்தினை தனது படைப்புக்கள் மூலம் வெளிப் படுத்தினார். 1957 ஆம் ஆண்டு அரசினர் கலைக்கல்லூரியில் பயிற்சி பெற்று மங்கல் வருண ஓவியங்கள் அல்லது கழுவுதற்பாணி சித்தரிப்புகளை வெளிக்கொணருவதில் ஆற்றலுடையவராக விளங்கினார். கொழுந்தெடுத் தல், தாயும்சேயும் தாய்மை, அலங்காரம், சகுந்தலை, இராப்போசனம் என்ற இவரது படைப்புகள் தனிப்பாணியையுடையனவாக காணப்படுகின்றன. மேலும் இரேகைச் சித்திரங்களின் பாணிகளும் இவரது படைப்புக்களில் மேலோங்கி நிற்பதும் சிறப்பிற்குரியதாகும். ஓவியக் கலையில் தமிழ் மக்களின் ஈடுபாடு அல்லது கலாரசனையின்மை என்ற மனவேதனையை சுமந்து வெளிப்படுத்திய இக்கலைஞன் 2000. 09. 26 ஆம் நாள் கலையுலக வாழ்வை நீத்து நிலையுலகம் சென்றார்
ஓவியர் மாற்கு அவர்களது ஓவியப்பணிகள் வருமாறு
1957 ஐப்பசி. கொழும்பு கலாபவனத்தில் நடைபெற்ற, இலங்கைக் கலைக் கழகத்தின் வருடாந்தக் கலைக் கண்காட்சியில், இரண்டாவது இடத்துக்கான பரிசு பெற்றார்.
1958 – 1967 விடுமுறைகால ஓவியர் கழகச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது.
1966 ஆவணி. யாழ்ப்பாணம், பிரதேச கலைமன்றத்தின் கலைவிழாவில், பெண்சிற்பத்துக்காக முதலாம் பரிசினையும் வெளிப்பாட்டு வரைதல்களுக் காகவும் முதலாம் பரிசினையும் பெற்றார்.
1982 ஓவியரும் சிற்பியுமான செ. சிவப்பிரகாசத்துடன் இணைந்து ஓவிய வகுப்புகளை நடத்தி வரலானார்.
1986 தனது மாணவியரான நிர்மலா, சுகுணா, அருந்ததி ஆகியோரின் ‘ஓவிய அரங்கேற்றம்’ கண்காட்சியை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலாசாரக் குழுவின் ஆதரவில் நடத்தினார்.
1986 யாழ்ப்பாணம் புனித சம்பத்திரிசியார் கல்லூரியில் நடைபெற்ற, ‘எம் மக்களின் எதிர்காலத்தை நோக்கி’ என்னும் பல்துறைக் கண்காட்சியில் – தனது 80 ஓவியங்களைத் தனி அறையில் காட்சிப்படுத்தல் ; இன்னொரு அறையில், தனது மாணவரின் ஓவியங்களைக் காட்சிப்படுத்தியமை.
1987 ஆவணி. மாற்குவைச் சிறப்பிக்குமுகமாக ‘தேடலும் படைப்புலகமும்’ நூல் வெளியீடு செய்யப்பட்டதும், தனது வீட்டில் இலவச ஓவிய வகுப்புகளை ஆரம்பித்தமை.
1990 . 03. 17- 18 வரை, யாழ். இந்துக்கல்லூரியில், ‘இன்னொரு முகம்’ ஓவிய – சிற்பக்கண்காட்சியும் கலந்துரையாடலும் நடத்தப்பட்டமை.
யாழ். ஸ்ரான்லி கல்லூரியில் கண்காட்சி நடத்தப்பட்டமை. 1994‘மாற்குவின் வர்ணங்கள்’ கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டமை.
1995 – 1997 வலிகாம இடப்பெயர்வின்போது, கிளாலியிலும் மாங்குளத்திலும் இடம்பெயர்ந்த நிலையிலும் மாங்குளத்தில் ஓவிய வகுப்புகளைத் தொடர்தல்.
1998 நரம்பு பாதிப்புற்ற கைகளுக்குப் பயிற்சி கொடுத்து, மெல்ல மெல்ல மீண்டும் ஓவியங்களை வரைய ஆரம்பித்தார். இறக்கும் வரை சுமார் 27௦ ஓவியங்களை வரைந்தார். இலவச ஓவிய வகுப்புகளையும் தொடர்ந்தார்.
1998 திருக்கோணமலையில் – வடக்குக் கிழக்கு மாகாண சபையின் கலைவிழாவில், ஆளுநர் விருதுக் கௌரவமும் ஓவியக் கண்காட்சியும் இடம்பெற்றது.
மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலை மண்டபத்தில் ஓவியக் கண்காட்சி நடத்தப்பட்டமை.
- கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில், வடக்கு – கிழக்கின் ஐந்து ஓவியர்களின் ‘ஓவியக் கண்காட்சியில், மாற்குவின் ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
- மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்ற மூன்று ஓவியர்களின் ஓவியக் கண்காட்சியில், மாற்குவின் ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
மாற்கு அவர்கள் இறந்த பின்னர்
- 10. 10 கனடா – ரொறொன்ரோவில் அஞ்சலிக்கூட்ட நிகழ்வில், பல ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
- 11.04 இலண்டன் அஞ்சலிக் கூட்டத்தில், பல ஓவியங்கள் காட்சிப்படுத்தப் பட்டன.
- 03. 30 யாழ்ப்பாணத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்டிருந்த ஓவியங்களின் கண்காட்சி, திருமறைக் கலாமன்ற கலாமுற்றத்தில் காட்சிப்படுத்தப் பட்டது.
மண்ணின் மாகலைஞன்!
நேற்றிருந்தார் மாற்கு
இன்றில்லை ; ஆனாலும்
அவர்கையில்
வீற்றிருந்த தூரிகை,
தோற்றுப் போகாத மண்ணின்
வாழ்வெழுதிய வண்ணங்கள்,
உள்ளன எங்கள் வசம்.
கால், கைகள் முடங்கிப் போகும்
காலம் வந்த போதும்
தோற்றுத்தான் போனாரா மாற்கு!
வீழ்ந்த கை உயர்த்தி
தூரிகை எடுத்து முயன்று
முயன்று
புதிது படைத்தார்.
நாலெட்டுத் திக்குகளிலும்
மாற்கு வளர்த்தெடுத்த
மாணவர், மாணவியர்
உள்ளார்கள் மண்ணின்
வாழ்வை மறுபடியும்
மறுபடியும் படைப்பதற்கு.
தேடலும் படைப்புலகும்
இருக்கும் வரை
மாற்குவின் பெயர் அழியாது
ஏனெனில் அவன் மாகலைஞன் ;
எங்கள் மண்ணின் மாகலைஞன்!
- சு. வில்வரத்தினம்
- 09. 2000
மாற்கு மாஸ்ரரின் பதிவுகள்