குளக்கோட்டு மன்னனால் சட்டநாதர்சிவன்கோயிலின் கும்பாபிஷேகத்திற்காக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட விக்கிரகங்களை அரசனின் பணியாளர்கள் மாட்டுவண்டிலில் பருத்தித்துறையிலிருந்து எடுத்துவரும் வழியில் தற்போது கோவில் அமைந்திருக்கும் இடத்தில் விக்கிரகங்களை இறக்கிவைத்து இளைப்பாறிய பின்னர் மீண்டும் விக்கிரகங்களை வண்டிலில் ஏற்ற முற்பட்டவேளை குறித்த விநாயகர் விக்கிரகத்தினை அசைக்கமுடியாதிருந்ததினால் பணியாளர்கள் அவ்விடத்திலேயே விக்கிரகத் தினை விட்டுச்சென்றனர். மாடு மேய்க்க வந்த சிறுவர்கள் அவ்விக்கிரகத் தினைக்கண்டு அவ்வூர் குருக்கள்மாரிடம் தெரிவித்தனர். அவ்விடத்தில் இரவு நேரத்தில் வெளிச்சமும் மணியோசையும் கேட்டன. இதனையறிந்த குருக்கள்மார் ஒன்றுகூடி அவ்விடத்தில் கோவில் அமைக்கமுற்பட்டனர். அதன் பிரகாரம் பரமசாமிக்குருக்கள் என்பவர் ஒரு கொட்டிலமைத்து செவ்வாய் -வெள்ளி தினங்களில் பூசைகளைச் செய்துவந்தார். விக்கிரகம் அமைந்திருந்த இடத்தில் வெள்ளெருக்கமரமும், இலந்தை மரமும் நின்றமையால் வெள்ளெருவப் பிள்ளையார் என்றும் இலந்தையப் பிள்ளையார் என்றும் அழைக்கப்படலானார். காலப்போக்கில் ஊர் மக்களின் பங்களிப்போடு கோவில் இன்றைய வளர்ச்சியினை அடைந்ததெனலாம். ஒவ்வொரு வருடத்திலும் ஆனி மாத பூரணைக்கு முன்னதாக பத்து நாட்கள் மகோற்சவம் நடைபெற்றுவருவது வழக்கம்.
