கடந்த இரு நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ மிஷனரிகளும் இந்து மத மறுமலர்ச்சியாளர்களும் போட்டிக்குப் பாடசாலைகளை நிறுவிய ஒரு பிரதேசமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது.
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து தமது சுகபோகங்களைத் துறந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து பாடசாலைகளை ஆரம்பித்த மிஷன் தொண்டர்கள்; ஊரூராக பிடியரிசி சேர்த்து இந்துக் கல்லூரிகளைக் கட்டிய இந்து மறுமலர்ச்சியாளர்கள்,சாதித்துவத்திலிருந்து விடுபடும் நோக்கில் பாடசாலை களை நிறுவியர்கள், ஏழைகளை கல்வியில் உயரவைக்கும் நோக்கில் பாடசாலைகளை நிறுவியவர்கள் என்ற மகத்தான முன்னுதாரணங் கள் ஈழத் தமிழர்களுக்கு உண்டு.
இலங்கையில், யாழ்ப்பாண மாவட்டதில் உடுவில் கிராமத்தில் அமைந்துள்ளது. பெண்கள் பாடசாலையான உடுவில் மகளிர் கல்லூரி யாழ்ப்பாணத்தின் பிரபலமான பாடசாலை களுள் ஒன்றாகும். 1824 ஆம் ஆண்டில் அமெரிக்க மிஷனரியினைச் சார்ந்த ஹரியற் வின்சிலோ அம்மையாரால் பெண்கள் தங்கிப் படிப்பதற்கான வதிவிட வசதியுடன் நிறுவப்பட்டது. தெற்கு ஆசியாவிலேயே பெண்கள் தங்கிப் படிப்பதற்கான வதிவிட வசதியுடன் அமைக்கப்பட்ட முதலாவது பெண்கள் கல்லூரி இதுவேயாகும். ஹரியற் வின்சிலோ அம்மையாரே இக்கல்லூரியின் முதல் அதிபராகவும் இருந்தார். அமெரிக்க மிஷனரிமாரின் முக்கிய பணிகளில் விதந்து பேசப்படவேண்டிய கல்விப்பணியில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பெண்களுக்கான உடுவில் பெண்கள் பாடசாலை முக்கியமானதொரு பணியாகும்.
திருமதி. ஹரியற் வின்சிலோ என்று அழைக்கப்படும் அமெரிக்கப் பெண், தனது 28ஆவது வயதில் உடுவில் மகளிர் கல்லூரியைத் ஆரம்பித்தார். தென்னாசியாவில் விடுதி வசதியோடு கூடிய முதலாவது பெண்கள் பள்ளி என்ற பெருமையையும் தனதாக்கியது. யாழ்ப்பாணத்தில் ஹரியற் அம்மையார் தங்கியிருந்த காலத்தில் அவருடைய ஐந்து பிள்ளைகள் தொற்று நோய்க்கு இரையானார்கள். அமெரிக்காவுக்கு படிப்புக்காக அனுப்பப்பட்ட அவருடைய ஆண்பிள்ளை கடல் பயணத்தில் இறந்து போனார். தொடர்ச்சியான தனிப்பட்ட இழப்புகளால் நொருங்கிப்போன ஹரியற் அம்மையார் தன்னுடைய 37ஆவது வயதில், இளவயதில் இறந்து போனார். அவரோடு சேர்ந்து பணிபுரிய வந்த அவருடைய இரண்டு சகோதரிகள் அவருக்குப் பின் இறந்து போனார்கள். தன் மூன்று சகோதரிகளோடு சேர்ந்து பணிபுரிவதற்கென்று அமெரிக்காவிலிருந்து வந்த மற்றொரு சகோதரி யாழ்ப்பாணத்தில் வந்து இறங்கிய பின்னர்தான் தன்னுடைய ஏனைய மூன்று சகோதரிகளும் உயிரோடு இல்லை என்பதை அறிந்து கொண்டார்.
யாழ்ப்பாணத்தின் கல்வியை கட்டியெழுப்புவதற்காக எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த வெள்ளைக்காரர்கள் இங்கு வந்து சந்நியாசிகள் போல வாழ்ந்து, தொண்டு புரிந்திருக்கிறார்கள். அவர்கள் மதம் மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவர்களுடைய செயற்பாடுகளுக்கு எதிராக இந்து மறுமலர்ச்சியாளர்களும் இந்து அறக்கட்டளைகளும் பள்ளிக்கூடங்களைக் கட்டியெழுப்பினார்கள்.
மிஷன் பள்ளிக்கூடங்களை எதிர்கொண்டு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்தில் சுதேசிகளின் பள்ளிக்கூடங்களைக் கட்டினார். அவ்வாறு பள்ளிக்கூடங்களைக் கட்டுவதற்கு அவர் பிடியரிசித் திட்டம் என்ற ஒரு சமூகப் பங்களிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கிராமங்கள் தோறும் பிடியரசி சேகரிக்கப்பட்டு, அந்த நிதியில் யாழ்.இந்துக் கல்லூரி உட்பட பல்வேறு சுதேச பள்ளிக்கூடங்களை இந்து மறுமலர்ச்சியாளர்களும் இந்து அறக்கட்டளைகளும் நிறுவினர்.
உடுவில் மகளிர் கல்லூரியில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் மருதனார் மடத்தில் இராமநாதனின் கல்லூரி நிறுவப்பட்டது. அப்பள்ளிக்கூடத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராகிய திருமதி லீலா இராமநாதன் ஒரு ஒஸ்ரேலியப் பெண். அவருடைய சேவையை வியந்து போற்றுபவர்கள் அவருடைய வெண்ணிறப் பாதங்களில் அந்த ஊரின் செம்பாட்டுச் சாயம் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டிருக்கும் என்று கூறுவார்கள்.
இவ்வாறு எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த வெள்ளைக்காரப் பெண்களும் ஆண்களும், உள்ளூரில் சைவசமய மறுமலர்ச்சியாளர்களும் கல்விச்சாலைகளைக் கட்டியெழுப்பிய போது அவர்கள் அதை அதிகபட்சம் தொண்டாகவே செய்தார்கள். கல்விப்பணி என்பது உன்னதமான ஒரு தொண்டாகக் கருதப்பட்டு,போற்றப்பட்ட காலகட்டம் அது.