Tuesday, May 21

சிவபாதசுந்தரம், சோமசுந்தரம்பிள்ளை

0

1912.08.27 ஆம் நாள் யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை யில் கரம்பொன், சோமு உடையார் பேரன் என்பவருக்குப் பிறந்தவர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்விகற்ற இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். ஆங்கிலம், தமிழ் மற்றும் சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சிபெற்ற இவர் கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டமும் படித்தார். 1930களில் குரும்பசிட்டி பொன்னையாவால் ஆரம்பிக்கப்பட்ட ஈழகேசரி பத்திரிகையில் ஆசிரியரானார். ஐந்தாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் 1941 ஆம் ஆண்டளவில் கொழும்பு வானொலியில் பணியில் சேர்ந்தார். 1941 ஆம் ஆண்டு லண்டன் பிபிசி நிறுவனத்தில் தமிழ் ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாவது உலக யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் ஒலிபரப்பை விரிவுபடுத்தும் நோக்குடன் பிபிசி நிறுவனம் சிவபாதசுந்தரத்தை அழைத்தது. 1947 செப்டம்பரில் இவர் அங்கு சென்று பணியில் சேர்ந்தார். 1948 இல் தமிழ் ஒலிபரப்பை ஒரு சஞ்சிகை நிகழ்ச்சியாக நடத்த முடிவு செய்யப்பட்டது. லண்டனில் இலங்கை தூதரகத்திலிருந்த குமாரசுவாமி, இந்திய தூதரகத்திலிருந்த பார்த்தசாரதி ஆகியோருடன் ஆலோசனை நடத்தி சஞ்சிகை நிகழ்ச்சியாக விரிவுபடுத்தப்பட்டது. அப்போது (1948இல்) பாரதியாரின் “தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற பாடலை வைத்து தமிழ் ஒலிபரப்புக்கு தமிழோசை என பெயர் சூட்டினார். தாயகத்தில் லீவர் பிறதர்சு நிறுவனத்தில் விளம்பர இயக்குநராக ஒன்பதாண்டுகள் பணிபுரிந்தார். பிபிசி தமிழோசை எனப்பெயரிட்டு தமிழ் நிகழ்ச்சியை பிபிசியில் ஆரம்பித்தவர்களில் இவரும் ஒருவர். பிபிசியில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு “ஒலிபரப்புக் கலை” என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் அமுத நிலயத்தாரால் 1954 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலிற்கு ராஜாஜி ஆசியுரை எழுதியிருந்தார். சென்னை வானொலி நிலையம், காமராஜர், அண்ணாதுரை போன்ற பிரமுகர்கள் காலமானபோது இறுதி ஊர்வலத்தின் நேர்முக வர்ணனையாளராக சிவபாதசுந்தரத்தை அழைத்திருந்தனர். சிட்டி பெ. கோ. சுந்தரராஜனும் சிவபாதசுந்தரமும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொடர் உரையாற்றலுக்கு அழைக்கப் பட்டனர். இவ்விருவரும் அண்ணாமலை, பாண்டிச்சேரி சென்னைப் பல்கலைக்கழகங்களில் வருகை தரும் பேராசிரியர்களாகவும் பணியாற்றினர். சிவபாதசுந்தரம், தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவராக இருந்து செயற்பட்டார். சென்னையில் 1959 ஆம் ஆண்டில் நடந்த அனைத்திந்திய எழுத்தாளர் மாநாட்டின் அமைப்பாளர்களில் ஒருவராகவும் பணியாற்றினார். 1972 இல் ராஜமய்யரின் நூற்றாண்டு விழாக்குழுவின் பொருளாளராகவும் பணியாற்றியிருந்தார். மாணிக்கவாசகர் அடிச்சுவடடில் (1947), ஒலிபரப்புக் கலை (1954), கௌதமபுத்தர் அடிச்சுவட்டில் (1960), தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் (1977), சேக்கிழார் அடிச்சுவட்டில் (1978) ஆகிய நூல்களை எழுதிய இவர் 2000.11.10 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!