1827-08-22 ஆம் நாள் சேர் முத்து குமாரசுவாமி, எலிசபெத்பீவி (Elizabeth Clay-Beevi) என்போரின் மகனாக கொழும்பிலே பிறந்தார். தாயார் இங்கிலாந்தின் கெண்ட் என்னும் ஊரைச் சேர்ந்தவர். தாயாருடன் 1879 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்து சென்றார். இங்கிலாந்தில் வளர்ந்து லண்டன் பல்கலைக்கழகத்திலே டீளுஉ தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்தார். பின்பு அதே பல்கலைக்கழகத்தில் 1905 இல் DSc (Geology) பட்டத்தையும் பெற்றார். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும்போது அங்கு அவருடன் கல்வி பயின்ற ‘எதெல் மேரி’ (Ethel Mary) என்பாரைத் திருமணம் புரிந்து கொண்டார். ஆனந்தகுமாரசுவாமி ஆங்கிலம், டொச்சு, பிரெஞ்சு, பாரசீகம், சிங்களம், சமஸ்க்கிருதம், பாளி, இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறந்த புலமையுடையவராக விளங்கினார். மனைவியுடன் இலங்கை திரும்பிய ஆனந்த குமாரசுவாமி 1903 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1906 டிசம்பர் வரை இலங்கையின் கனிப்பொருள் ஆய்வுப் பகுதியின் தலைவராகப் பணியாற்றினார். எதெலுடனான மணவாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. சிறிது காலத்தின் பின்னர் எதெல் இங்கிலாந்து திரும்பினார். பின்னர் ஆனந்த குமாரசுவாமி அவர்கள் ரத்னாதேவி எனும் இலங்கைப் பெண்ணை மணம் புரிந்தார். சுதேசிய உணர்வால் உந்தப்பெற்று சமூக சீர்திருத்தச் சங்கத்தை 1905இல் நிறுவினார். அதன் சார்பில் Ceylon National Review என்னும் இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராகச் சேவையாற்றினார். 1906 ஆம் ஆண்டு யூன் நாலாம் நாள் முதன் முதலாக யாழ்ப்பாணம் சென்றார். அங்கு உரையாற்றும்போது “நமது கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் சிறப்பினை உலகில் வேறெங்கும் காணமுடியாது…. எம்மவர் விஞ்ஞானக் கல்வியையும் கைத்தொழிற்கல்வியையும் நாடுகின்றனர். இவை அவசியமானவையே! ஆனால் இவை எல்லாம் பண்பாடு என்னும் அடிப்படையிலிருந்து வரவேண்டும்…” எனக் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் அவருக்கு வித்தியாவிநோதன் என்னும் பட்டம் அளிக்கப்பட்டது. 1907 ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்திலும் இந்தியாவிலும் கலை முயற்சிகளில் ஈடுபட்டார். 1911 ஆம் ஆண்டில் அலகாபாத்தில் நடைபெற்ற பொருட்காட்சியின் கலைப்பகுதிக்குப் பொறுப்பு வகித்தார். இந்திய விடுதலை இயக்க ஆதரவாளராக, அதன் தலைவர்களோடு தொடர்பு கொண்டிருந்தார். இரவீந்திரநாத் தாகூர், சகோதரி நிவேதிதை முதலியோரின் நண்பராக வாழ்ந்தார். இந்தியக் கலைகளின் இறைமையை உலகிற்கு எடுத்துக்காட்டிய சிறந்த தூதுவராகக் கருதப்படுபவர். இறைவனின் ஐந்தொழிலைப் (பஞ்சகிருத் தியத்தைப்) பிரதிபலிக்கும் சிவநடனத்தை விளக்கி 1912-இல் சித்தாந்த தீபிகையில் எழுதிய ஆங்கிலக் கட்டுரை மூலம் இந்தியக் கலைகளின் சிறப்பினை உலகிற்கு அறிமுகப்படுத்திய முன்னோடியாகக் கொள்ளப்படுகிறார். சகோதரி நிவேதிதையுடன் இணைந்து பௌத்த புராணக்கதைகளையும் தொகுத்துத் தந்துள்ளார். ‘பிரபுத்த பாரதா’ என்ற இதழில் 1913,1914,1915 ஆம் ஆண்டுகளில் தாயுமானவர் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிலவற்றை எழுதினார். 1917 முதல் ஐக்கிய அமெரிக்காவில் பொஸ்டன் (பாஸ்ட்டன்) நகரில் அமைந்திருந்த நுண்கலை அருங்காட்சியகத்தில் கீழைத்தேயப் பிரிவின் பணிப்பாளராகவும், பின்பு ஆய்வாளராகவும் பணிபுரிந்தார். Medieval Sinhalese Art (1908), Arts and Craft of India and Ceylon (1913), Bronzes from Ceylon (1914), Rajput Paintings (1916), The History of Indian and Indonesian Art (1927), The Dance of Siva (1917), Hinduism and Buddhism (1943), Buddha and the Gospel of Buddha, A new Approach to the Vedas (1932), Spiritual Authority and Temporal Power போன்ற நூல்களை வெளியிட்டவர். 1947-09-09 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.