Sunday, October 6

ஆத்மானந்தா, பொன்னையா

0

ஆத்மானந்தா அவர்கள் யாழ்ப்பாணத்து நல்லூரில் இந்துப்பாரம்பரியச் சூழலில் வாழ்ந்த பொன்னையா செல்லம்மாதம்பதியினருக்கு மூத்த புதல்வனாக 16.02.1948 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் புத்தூர் மழவராயருடைய அன்னதான சத்திரத்தின் நிர்வாகிகளாகக் கடமை புரிந்தவர்கள். ஆத்மானந்தா அவர்களுடன் சகோதர சகோதரிகளாக ஐவர் இருந்தனர். இவர் யாழ்ப்பாணத்து இந்துக் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரம் வரைகல்வி பயின்றார். எனினும் இவருடைய ஆர்வமானது வாத்தியக்கலையாம் மிருதங்கம், தவில் போன்றவைகளில் அதிகமாகவே இருந்தது. அதனால் இவரை யாழ்ப்பாணம் நந்தி இசைமன்ற ஸ்தாபகர் மிருதங்கமணி எம். என். செல்லத்துரை அவர்களிடம் மிருதங்கம் பயிலப் பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர். இவர் இக்கலையை நல்ல ஈடுபாட்டுடன் பயின்றார். 1959ஆம் ஆண்டு ஐயாக்கண்ணு தேசிகர் அவர்களின் இசைக்கச்சேரியில் வாசித்து தம்கலையை அரங்கேற்றினார். இவரின் மிருதங்க வாசிப்பானது அரங்கேற்றம் மட்டுடன் நின்றுவிடாமல் சிறு வயதிலேயே பிரபல ஈழத்து வித்துவான்கள் பலருக்கும் பக்கவாத்தியமாகப் பயன்பட்டு அநேக பாடகர்களின் பாராட்டுக்களையும் பெற்றுக் கொள்ளுமளவிற்கு உயர்ந்தது.

 ஆத்மானந்தாவின் மிருதங்க வாசிப்பு முக்கியமாக முழுச்சாப்பு, கும்காரம், மேற் காலபரண்கள், நாதசுகம் பாட்டுக்களுக்கு வாசிக்கும் முக்கிய அம்சங்கள் நிறைந்தவையாகக் காணப்பட்டது. திரு.ஆத்மானந்தா சிறுவயதிலேயே நிறைந்தளவில் கச்சேரிகள் செய்துவந்தார். மிருதங்கத்துடன் கஞ்சிரா, கடம், முகர்சிங், தவில், தபேலாபோன்ற வாத்தியங்களையும் சிறந்த முறையில் இசையரங்குகளில் வாசித்து வந்தார். எனினும் சில தனிப்பட்ட காரணங்களினால் கர்நாடக இசைக்கச்சேரிகளுக்கு வாசிப்பதை விட வில்லுப்பாட்டு இசைக்குமிருதங்கம் வாசிப்பதற்கு முக்கியம் கொடுத்தார். சின்னமணி அவர்களது வில்லுப்பாட்டு இசையில் தொடர்ந்து மிருதங்கம் வாசித்து வருகையில் 1978ஆம் ஆண்டு சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் சென்று தனது கலையைப் புகழுடன் ஆற்றி ஈழம் திரும்பினார். இக்காலத்தில் மலேசியா, சிங்கப்பூரில் வேறு இசையரங்குகளிலும் மிருதங்கம் வாசிக்கும் வாய்ப்புப் பெற்றார்.

 திரு ஆத்மானந்தா அவர்கள் மிருதங்கம் வாசிப்பதில் இடதுகைப் பழக்கமுடையவர். எனவே இசையரங்குகளில் இவர் பாடகரது இடதுபுறமே இருந்து மிருதங்கம் வாசித்து வரலானார். இவர் மிருதங்கம் வாசிக்கின்ற இசையரங்குகளில் வயலின் வாசிப்பவர் வலதுபுறம் இருந்துவாசிக்கும் நிலை இருந்து வந்தது. இவருடைய சிஷ்யர் என்று குறிப்பிடும் போது மிருதங்க ஆரம்பக் கல்வியை பயின்ற நல்லூர் ஜெ.சண்முகானந்த சர்மா அவர்களைக் குறிப்பிடலாம்.

  இவர் 1980ஆம் ஆண்டு அராலி செட்டியார் மடத்தைச் சேர்ந்தசுப்பிரமணியம் செல்லம்மா தம்பதியினரின் மூன்றாவது புதல்வியான சரஸ்வதியைத் திருமணம் செய்துகொண்டார். இதன் பயனாகத் திரு.ஆத்மானந்தா தம்பதிகளுக்கு ஆணும் பெண்ணுமாக இரு குழந்தைகள் கிடைத்தனர்.

ஆத்மானந்தா அவர்கள் இலங்கை வானொலியின் இசைக்கலைஞனாகவும் இசைநிகழ்ச்சிகள் நிகழ்த்தியுள்ளார். தொடர்ந்துசிறந்த முறையில் மிருதங்கக் கலைத் தொண்டாற்றிய ஆத்மானந்தா அவர்கள் 1986ஆம் ஆண்டு புளியங்கூடல் மகா மாரியம்மன் கோவில்உற்சவ சம்பிரதாயக் கீர்த்தனைகளின் ஒலிப்பதிவு நாடாவில் சங்கீதபுஷணம் என்.வி.எம். நவரத்தினம் அவர்களுடைய இசைக்கு ஸ்ரீ.ஏ.என்.சோமஸ்கந்த சர்மா அவர்களுடன் சேர்ந்து மிருதங்கம் வாசித்தார். இதுவே ஆத்மானந்தா அவர்கள் மிருதங்கம் வாசித்த இறுதிநிகழ்ச்சியாகும்.

 வழமைபோல இவர் வில்லுப்பாட்டு இசையரங்கிற்கு மிருதங்கம்வாசிக்கச் சென்ற வேளையில் வழியில் துரதிஷ்டவசமாக இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி 1986-05-18ஆம் திகதி அன்று இவ்வுலகை நீத்தார். இவருடைய இழப்பு பெரிதெனினும் இவருடைய இசைநாதம் இசையுலகில் நிலைத்துநிற்கின்றது. இவருடைய இளைய சகோதரர் சுகானந்தா என்பவரும் ஒரு சிறந்த மிருதங்கக் கலைஞர் ஆவார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!