1819ஆம் ஆண்டு வின்சிலோ,ஸ்போல்டிங்,வூட்வேட்,ஸ்கடர் ஆகிய நான்கு குருமாரும் அவர்கள் மனைவியரும் 2ஆம் கட்ட அமெரிக்க மிஷன் தொண்டர்களாக “இந்துஸ்” எனும் கப்பல் மூலமாக யாழ்ப்பாணத்துக்கு பயணத்தினை மேற்கொண்டனர். 8மாதமும் 9 நாட்களும் மேற்கொண்ட கடல் பயணத்தின் இறுதியில் இவர்கள் யாழ்ப்பாணத்தில் 17.02.1820ஆம் ஆண்டில் காலடி எடுத்து ஸ்போல்டிங் தம்பதியினரும் குடும்பங்களாகி உடுவிலில் மேற்படி திகதியில் தங்களுடைய பணிகளை ஆரம்பித்தனர். உடுவிலில் போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு ஒல்லாந்தரால் பாவிக்கப்பட்டு ஆங்கிலேயர் காலம் பராமரிப்பற்றுக்கிடந்த ஆலயமும் மிகப்பெரிய ஓலையால் வேயப்பட்ட மிஷன் இல்லமும் பிரித்தானிய ஆட்சியாளர்களால் இவர்களுக்கு உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. இவைகளினைப் பொறுப்பேற்றுக்கொண்ட வின்சிலோ, ஸ்போல்டிங் தம்பதியினர் கிறிஸ்தவ நற்செய்திப்பணிகளையும் பெண்கல்வி மற்றும் அகராதி உருவாக்கப் பணிகளிலேயும் சமூக மேம்பாட்டுப் பணிகளிலேயும் அதிகமாக பாடுபட்டு உழைத்தனர். வண டீ.ஊ மெக்ஸ் ஐயா யாழ்ப்பாணம் வந்தபோது தாம் “இங்கு எழுத வாசிக்க தெரிந்த இரண்டு பெண்பிள்ளைகளை மட்டும ; அளவெட்டியிலும், உடுப்பிட்டியிலும் கண்டதாக” எழுதியிருக்கின்றார். உடுவிலில் பணிசெய்யத்தொடங்கிய மைரன் வின்சிலோ அவர்களினுடைய மனைவி திருமதி ஹரியற் வின்சிலோ அவர்கள் பெண்பிள்ளைகள் கல்வி கற்கவேண்டும் என்பதிலே அதிகம் அக்கறை கொண்டு செயற்பட்டார்.இதன் விளைவாக இவர்கள் உடுவிலிலே 1824ஆம் ஆண்டு பெண்பிள்ளைகள் தங்கியிருந்து கல்வி கற்ற ஒரு பெண்கள் விடுதிப்பாடசாலையை ஆரம்பித்தனர். இதுவே ஆசியாவில் முதன் முதல் ஆரம்பிக்கப்பட்ட விடுதிப் பெண்கள் பாடசாலையாகவும் இருந்தது. உடுவில் தேவாலயத்தில் 02.10.1820ஆம் ஆண்டில் முதலாவது திருவிருந்தினை முறைப்படி வண.வின்சிலோ வண ஸ்போல்டிங் அவர்கள் மனைவியர் மற்றும் மலையப்பர் என்னும் உடுவிலைச் சேர்ந்தவர்கள் அடங்கிய ஐவர் அனுசரித்தனர். இதுவே உடுவிலில் அனுசரிக்கப்பட்ட முதலாம் திருவிருந்தாகும். தேவாலயத்திற்கு அருகிலிருந்த பாடசாலை மாணவியர் தேவாலயப்பணிகளில் ஈடுபட்டனர். மி~ன் வீட்டில் தங்கியிருந்த மிஷன் தொண்டர்கள் பெண்கள் கல்வியை ஊக்கப்படுத்த பலவிதமான முயற்சிகளை எடுத்திருந்தனர். 1831ஆம் ஆண்டு ஏனைய சபைகள் போல உடுவில் சபையும் ஒரு தனி நிர்வாகத்தில் தனித்து இயங்க ஆரம்பித்தது. அமெரிக்கன் இலங்கை மிஷனின் கீழ் பணியாற்றிய உடுவில் ஆலயம் பின்னர் தென்னிந்திய ஐக்கிய சபாசங்கத்தின் ஆளுகைக்குள்ளும் 1947 இற்குப் பின் தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் ஆளுகைக்குள்ளும் நிர்வகிக்கப்பட்டுத் தற்போது மறுபடியும் அமெரிக்கமிஷன் திருச்சபையின் ஆலயமாக நிருவகிக்கப்படுகின்றது.