Sunday, May 5

எலியேசர், கிரிஸ்டி ஜெயரத்தினம் (பேராசிரியர் )

0

பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரட்ணம் எலியேசர் அவர்கள் 12.01.1918இல் தென்மராட்சியில் உள்ள வரணி எனும் இடத்தில் பிறந்தார். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் தன்னுடைய உயர்நிலைக் கல்வியினைக் கொழும்பு பல்கலைக்கழத்தில் பெற்றுக்கொண்டார். பின்னர் தன்னுடைய கலாநிதிப் பட்டத்தை லண்டன், கேம்பிறிட்ச் பல்கலைக் கழகத்தில் கணிதத்துறையிலும் 1949 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் போல்டிராக் (Paul Dirac – 1902 – 1984) அவர்களின் வழி காட்டலில் இன்னுமொரு கலாநிதிப் பட்டத்தை விஞ்ஞானத் துறையிலும் (Doctor of Science – S.S) பெற்றுக் கொண்டார். தாய் நாடு திரும்பிய இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணிதத்துறைப் பேராசிரியராகவும் அறிவியல் பீடத்தின் தலைவராகவும் கடமையாற்றினார். அவ்வேளையில் ஜெனீவா, வியன்னா, மும்பாய் ஆகிய நகரங்களில் “அமைதிக்கான அணுசக்தி” என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தால் அழைக்கப்பட்டார். 1955ஆம் ஆண்டில் மாபெரும் விஞ்ஞானியான அல்பேட் ஜன்ஸ்ரினுடன் (Albert Einstiein) ) விஞ்ஞான ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இவர் 1959இல் மலேய நாட்டுப் பலைகலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியரானார். மலேசியாவின் கோலாலம்பூரில் 1966ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது உலகத் தமிழாராய்சி மாநாட்டில் “சுழியம்” என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையொன்றினை இவர் சமர்ப்பித்துப் பலருடைய பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டார். 1968 இல் அவுஸ்திரேலியா தேசத்தின் பேர்ண் நகரில் குடியேறிய இவர் அங்குள்ள “லாட்ரோப்” (La Trabe) பல்கலைக்கழகத்தில் பன்முகக் கணிதவியலில் பேராசிரியராகப் பணியாற்றினார். அங்கு இவர் இயற்பியல் பீடத்தின் தலைவராகவும் அப்பல்கலைக் கழகத்தின் மேலதிகத் துணைவேந்தராகவும் (Aditional Vice – Chancellor) பணிபுரிந்தார். 1983இல் அங்கிருந்து இளைப்பாறினார். இவர் 1948ஆம் ஆண்டு கண்டுபிடித்து வெளியிட்ட “எலியேச தேற்றம்” (Eliezer Theory) இன்றும் உலகம் முழுவதிலும் கணிதத்துறையில் பயன்பட்டு வருகின்றது. இவர் தமிழையும் தமிழ் மக்களையும் அதிகமாக நேசித்தவர். கிறிஸ்தவ விசுவாசத்தில் அதிகம் பற்றுள்ளவர் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் இவர் செய்த பணிகள் அளப் பெரியது. 1978ஆம் ஆண்டில் விக்டோரியா மாநிலத்தில் உருவான “இலங்கைத் தமிழர் சங்கத்தின்” முதல் தலைவராகப் பதவியேற்ற இவர், அங்கு குடியேறும் தமிழ் மக்களின் நலனுக்காக அதிகம் பாடுபட்டு உழைத்தார். 1983ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தின்போது துன்புற்ற தமிழ் மக்களின் விடிவுக்காக அரும்பாடுபட்டு உழைத்தார். 1984ஆம் ஆண்டு “அவுஸ்திரேலிய தமிழ் சங்கங்களின் சம்மேளனம்” உருவானபோது அதன் முதலாவது தலைவராகவும் இவரே பதவியேற்றார். இவர் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் மக்களுக்கு ஆற்றிய சேவைக்காகவும் உலகளாவிய ரீதியில் கணிதத்துறைக்கு ஆற்றிய சேவைக்காகவும் அவரைப் பாராட்டி அவுஸ்திரேலிய அரசின் உயர் விருதான “Order of Australia” விருது 1996 இல் வழங்கப்பட்டது. எமக்குப் பெருமை சேர்த்த  இப் பெரியார் அவுஸ்திரேலியாவில் மெல்போர்ண் நகரில் 2001.03.10 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம்  சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!