Friday, May 3

லோங். ரீ.எம்.எவ் (அருட்தந்தை)

0

1896.04.22 ஆம் நாள் அயர்லாந்து தேசத்தின் Patrickswell என்னும் நகரில் பிறந்தார்.தமது இளம் வயது முதலே மதகுருவாகவேண்டும் என்ற பேராவலுடன் பின்தங்கிய நாடுகளில் வாழும் ஏழைகளுக்கு உதவவேண்டும் என்ற சீரிய நோக்குடனும் வாழ்ந்த இவர் 1915 இல் அமலமரித்தியாகிகள் சபையில் இணைந்து 1920 இல் குருப்பட்டம் பெற்றார். 1921 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகைதந்து புனித பத்திரிசியார் கல்லூரியில் ஆசிரியப் பொறுப்பினையும் விளையாட்டுத்துறைப் பொறுப்பினையும் ஏற்றுக்கொண்டார். நாட்டின் உள்ளேயும் வெளியேயும் தனக்குள்ள தொடர்புகளின் மூலம் பெறக்கூடிய அத்தனை அனுகூலங்களையும் பெற்று தனது கல்லூரிக்கும் அது சார்ந்த யாழ். சமுதாயத்தினது உயர்ச்சிக்கும் பயன்படும் வண்ணம் செயற்பட்டார்.அடிகளார் உரை நிகழ்த்துகின்ற பொழுது யாழ்ப்பாண மக்களாகிய நாம், தமிழர்களாகிய நாம் என்கின்ற வார்த்தைகளைப் பிரயோகிப்பதில் இருந்து எந்தளவிற்கு அவர் யாழ்ப்பாணத்தையும் தமிழையும் நேசித்திருக்கின்றார் என்பது புரிகின்றது. யாழ். நூல் நிலையம் அமைப்பதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். அன்று யாழ். நகர பிதாவாக இருந்த சாம் ஏ.சபாபதியுடனும் வேறு சில புத்திஜீவிகளுடனும் இணைந்து யாழ் பொது நூலகக் குழு அமைத்து நிதி சேகரிப்பதற்கு முன்னின் றுழைத்தார். தமிழகத்துப் பிரபல கட்டடக்கலை வல்லுநரான கலாநிதி இராமநாதன் அவர்களது உதவியினூடாகவும் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து ஒரு தொகைப் பணத்தினைப் பெற்றுக்கொடுத்தும் உதவினார். தாழ்த்தப்பட்ட மக்களை அரவணைத்து சகல வழிகளிலும் முன்னேறவைத்தார். பதினெட்டு ஆண்டுகள் புனித சம்பத்திரிசியார் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றிய அடிகளார் மாணவர்களுக்காகவும் மக்களுக்காகவும் பல அரிய சேவைகளைச் செய்தார்.கிளிநொச்சியில் 100 ஏக்கர் நிலத்தினைக் கொள்வனவு செய்து விவசாயக் கல்லூரியினை அமைத்தார். யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையில் Battle of the Golds என்ற தலைப்பில் துடுப்பாட்டம் மற்றும் உதைபந்தாட்டப் போட்டிகளை ஆரம்பித்து நடத்தி வந்தார். அன்பு நிறைந்த மனம், உதவும் மனப்பான்மை, கருணை உள்ளம், புரிந்துணர்வு, நன்றே செய்யவேண்டும், பெருந்தன்மை, எளிமை நட்புடமை ஆகியவற்றின் இருப்பிடமாகக் கொள்ளப்பட்ட அடிகளாரின் மக்கள் சேவையினைக் கௌரவிப்பதற்காக இலங்கைத் தபால் திணைக் களம் 1990 ஆம் ஆண்டு பங்குனி மாதம் நினைவு முத்திரை ஒன்றினை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. தான் உயிர் வாழ்ந்த 64 வருடங்களில் 34 வருடங்கள் யாழ்ப்பாண மாணவர்களது நலனுக்காகவும் யாழ். சமூகத்தினது உயர்வுக்காகவும் பணியாற்றியமையை எவரும் மறுப்பதற் கில்லை. யாழ். மக்கள் பொது நூலகத்தில் அவரது நினைவுச்சிலையினை அமைத்து தமது நன்றிக்கடனையாற்றியுள்ளனர். இப் பண்புடைய பெரியார் 1961.04.30 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!