1917-04-09 ஆம் நாள் யாழ். தீபகற்பம் ஊர்காவற்றுறை என்னும் ஊரில் பிறந்தவர். யாழ். மறைமாவட்ட ஆயராக மிகவும் சிரமமான காலகட்டத்தில் பணியாற்றியவர். அதிவணக்கத்துக்குரிய யாக்கோபு பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை கரம்பொன் கன்னியர் மடம், ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி ஆகியவற்றில் ஆரம்பக் கல்வியைக் கற்று இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரியிலும், உயர்கல்வியை ரோம் நகரில் உள்ள பரப்புரைக் கல்லூரியிலும் தொடர்ந்து இறையியலில் கலாநிதிப் பட்டம் பெற்றார், பின்னர் அவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பயின்று திருமறைச் சட்டத்தில் இளங்கலைப் பட்டமும், கல்வியியலுக்கான டிப்ளோமா பட்டமும் பெற்றார், 1941 டிசம்பரில் தியோகுப்பிள்ளை உரோமை நகரில் குருவாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். பின்னர் இலங்கை திரும்பி கரவெட்டியில் மதகுகுருவாகப் பணியாற்றினார். ஆசிரியராக சிலகாலம் பணியாற்றிய பின்னர் அனுராதபுரம் புனித யோசப்பு கல்லூரியில் பணிப்பாளராகப் பணியாற்றியதுடன் கரவெட்டி புனித இருதயக் கல்லூரி, இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றில் பணிப்பாளராக நியமனம் பெற்றார். 1961 இல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை இலங்கை அரசு பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து, தியோகுப்பிள்ளை பணிப்பாளர் பதவியில் இருந்து விலகி, இளவாலை பங்குத் தந்தையாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இக்காலகட்டத்தில் கத்தோலிக்க மாணவர்களுக்காகப் பல நூல்களை எழுதி வெளியிட்டார். தியோகுப்பிள்ளை 1967 மே 11 ஆம் நாள் யாழ். ஆயர் ஜெ. எமிலியானுஸ்பிள்ளையினால் திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்டத் தின் பதில் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். 1972 ஜூலை 17 இல் யாழ்ப்பாணம் ஆயர் எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையின் மறைவை அடுத்து 1973 சனவரி 9 இல் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆயராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 1991 டிசம்பர் 22 இல் தமது குருத்துவப் பொன்விழாவைக் கொண்டாடிய ஆயர் 1992 ஏப்ரல் 9 இல் இளைப்பாறினார். கண்டி தேசிய குருக்கள் மடத்தில் இருந்த தியோகுப்பிள்ளை 1983 இல் நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரத்தின் காரணமாக யாழ். மறைமாவட்ட குரு மாணவர்களுடன் யாழ்ப்பாணம் திரும்பி, அங்கு புனித சவேரியார் குருமடத்தை ஆரம்பித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் இவருக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கிக் கௌரவித்தது. இச் சிறப்புடைய பெரியார் 2003-04-25 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.