Tuesday, October 29

சபாபதி குலேந்திரன் (பேராயர்)

0

பேராயர் சபாபதி குலேந்திரன் 1900ஆம் ஆண்டு செப்டெம்பர் 23ஆம் திகதி பிறந்தவர். இவருடைய தந்தையார் சபாபதிப்பிள்ளை வரணியைச் சேர்ந்த பிரபல நொத்தாரிசாக விளங்கியவர். இவருடையதாயார் அன்னம்மா மானிப்பாயைச் சேர்ந்தவர். பேராயர் குலேந்திரன் மூன்றாவது ஆண்பிள்ளையாகப் பிறந்தார். குலேந்திரன் அவர்கள் தன்னுடைய ஆரம்பக்கல்வியை மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலையில் பெற்றுக்கொண்டார். அக்காலம் இப்பாடசாலை கிறின் வைத்தியசாலை வளாகத்தின் கிழக்கு மூலையில் அமைந்திருந்தது. பின்னர் தன்னுடைய இடைநிலைக் கல்வியினைப் பெற்றுக் கொள்ளுவதற்காக 1913இல் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலும் 1923இல் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்லூரி அனுமதியைப் பெற்றுக் கொண்ட  இவர் 1927 ஆம் ஆண்டு பி.ஏ. பட்டதாரியானார். கடவுளுடைய பணிக்குத் தன்னை அர்ப்பணித்த இவர் 1928இல் இந்தியாவின் செரம்பூர் இறையியல் கல்லூரியில் இணைந்து 1931 ஆம் ஆண்டு “இளம் தெய்வீகயியல்” (B.D)  பட்டதாரியாக நாடு திரும்பி அச்சுவேலி, அளவெட்டி, சாவகச்சேரி, ஏழாலை வடக்குத் தெற்கு, வட்டுக்கோட்டை, அராலி ஆகிய இடங்களில் இறைபணியாற்றினார். 1947 ஆம் ஆண்டு தென்னிந்திய திருச்சபை உருவானபோது யாழ்ப்பாணப் பேராயத்தின் முதல் பேராயராக நியமிக்கப்பட்டார். இவருடைய பேராயர் அபிஷேக வழிபாடு சென்னை “சென் ஜோர்ஜ்” பேராலயத்தில் நடைபெற்றது. 1934 ஆம் ஆண்டு தன்னுடைய 34 ஆம் வயதில் செல்வி அலஸ் மதுரம்மா விஸ்வலிங்கம் அவர்களைத் திருமணம் செய்து தன்னுடைய இல்லற வாழ்வை ஆரம்பித்தார்.இவருக்கு 2 ஆண்பிள்ளைகளும் ஒரு பெண்பிள்ளையும் பிறந்தனர். 1947 – 1970 வரை தென்னிந்திய திருச்சபை, யாழ்ப்பாணப் பேராயத்தின் பேராயராக விளங்கிய இவர் “சமயங்கள்” எனும் துறையில் தலைசிறந்த ஆசிய அறிஞர்களில் ஒருவராக விளங்கினார். சமயங்கள், வரலாறு, இறையியல், மொழிகள் ஆகிய துறைகளில் அதிக ஆர்வம் கொண்டு தமிழ் ஆங்கிலம், இலக்கிய கிரேக்கம், எபிரேயம், சமஸ்கிருதம் ஆகிய ஆறு மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தார். இவர் 13க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். இவைகளில் “Grace in Cheistianity and Ainduism”, “The , essage and Silence in the American Pulpit” “தமிழ் வேதாகமத்தின் வரலாறு” என்பன மிகப் பிரபல்யமானவை. சிறந்த கல்விமானாகவும், இறையியல் வல்லுநராகவும் பத்திமானாகவும் விளங்கிய இவர் மிகவும் எளிமையான வாழ்வை வாழ்ந்து காண்பித்தார். இளைப்பாறிய பின்பும் தன்னுடைய மகளுடன் வட்டுக்கோட்டையில் வாழ்ந்து 1992 பெப்ரவரி 14ஆம் திகதி இவ்வுலக வாழ்வை நீத்து நித்திய இளைப்பாற்றுதலுக்குள்ளே பிரவேசித்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!