1939 இல், நயினாதீவில் புத்த பிக்கு ஒருவர் வந்து, தெருவெங்கும் சுற்றித் திரிந்தார்.மரநிழலில் படுத்து உறங்குவார். ‘ஒரு நாளுக்கு ஒரு வீட்டில்’ என்று முறை வைத்துப் போய் உணவு பெற்று உண்பார். சில ஆண்டுகள் செல்ல, நயினை திரு.இளையவர் கந்தர் என்பவர் திரு.நல்லதம்பி என்பவருக்கு ஈடுவைத்து நீண்டகாலமாக மீட்காமல் விட்டிருந்த சிறு துண்டுக்காணி ஒன்றை நல்ல விலை தந்து தான் வாங்கிக்கொள்வதாக காணி உரிமையாளரிடம் (திரு.இளையவர் கந்தர்) ஒரு ரூபாவை முற்பணமாகக் கொடுத்துவிட்டு திடீரென்று ஒருநாள் அந்த பிக்கு வெளியூர் புறப்பட்டுப்போனார். சில நாட்களில் அவர் திரும்பிவந்து,கணிசமான விலைக்கு அக்காணித் துண்டைவாங்கி, சில வருடங்களில் புத்த தாதுகோபம் ஒன்றை 1944 இல் நயினாதீவில் அமைத்தார். சிங்கள யாத்திரிகர் வருகை இந்தக் கால கட்டத்திலேயே முதன்முதலாக நயினாதீவில் இடம்பெற ஆரம்பித்தது. இதற்கு முன்னர் நயினாதீவில் தமிழ்ப் புத்தர் கோவில் ஒன்று இருந்திருக்கலாம். அல்லாமலும் இருக்கலாம். நயினாதீவு அல்ல – யாழ்ப்பாணக் குடாநாடுதான் ‘மணிபல்லவம்’ எனவும் ‘நாகதீபம்’ எனவும் அழைக்கப்பட்டது என்பது நிறுவப்பட்டுள்ள நிலையில், இதனை எவரும் திட்டவட்டமாகக் கூறுவதற்கு முடியாது.1939 இல் நயினாதீவுக்கு வந்த புத்தபிக்குவால் 1944 அளவில் இங்கு ஒரு புத்த விகாரையும் தாதுகோபமும் அமைக்கப்பட்டதற்கு முன்பு, நயினாதீவில் புத்தர்கோவில் ஏதாவது எக்காலத்திலாவது இருந்திருக்குமாயின் பௌத்தர்களாயிருந்த நயினையில் வாழ்ந்த தமிழ் நாகர்கள் சைவர்களாக மதமாற்றம் பெற்றமையாலும், அதன்பின் பௌத்தர்கள் யாரும் இங்கு குடியேறாமையாலும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த அக்கோவிலும், நயினார் (அல்லது நாகம்மாள்) கோவிலைப் போன்று கி.பி.1620 அளவில் போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்டது என்று கருத இடமுண்டு. அப்படியான புத்தர் கோவில் இங்கே இருந்திருக்குமாயின் , அந்தத்தமிழ்ப் பௌத்தர் கோவில் நயினாதீவில் எந்த இடத்தில் அமைந்திருந்தது என்பது இதுவரை ஆதாரபூர்வமாக அறியபப்படவில்லை.
