1917-04-19 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியையும், உயர் கல்வியையும் யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியில் பெற்றார். பின்னர் யாழ்ப்பாணத்தில் மூலிகைகளைக் கொண்டு தனது சுய முயற்சியினால் பல மருந்துவகைகளைத் தயாரித்து கைலாசம் பிள்ளை என்ற பெயரில் மூலிகைகளினாலான விற்பனைப் பொருள்களுக்கான வர்த்தக நிலையமொன்றினை 1940 இல் ஆரம்பித்தார். 1948 இல் மீனாட்சிப்பிள்ளை என்பவரைத் திருமணம் செய்து மூன்று புதல்வர்களையும், இரு புதல்விகளையும் பெற்றெடுத்தார். படிப்படியாக தனது அறிவினாலும். பலபெரியோர்களது ஆலோசனைகளின் பிரகாரமும் தனது மூலிகை மருந்துக் கடையினை எவராலும் நினைத்துப் பார்க்காதளவிற்கு ஆயுள்வேத மருந்துக்கடையாகத் தரமுயர்த்தினார். யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்வியலின் முக்கியமான சுகதுக்க நிகழ்வுகளுக்கான பொருள்களையும், உடலின் உபாதைகளின் நிவாரணமளிக்கும் மூலிகை வகைகளையும் பெறக்கூடிய ஒரேயொரு இடமாக இன்றும் திகழ்ந்து வருகின்றமை இவரது அயராத உழைப்பினால் தான் கைகூடியது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டு மூலிகை, நாட்டுவைத்தியம் என மூலிகையாலான பயன்படுத்தும் சரக்குவகைகளும், ஆயுள்வேத எண்ணெய் வகைகளும், சூரண வகைகள் என்பனவற்றினையும் தன்னிடமிருந்த ஆயுள்வேத ஏடுகளை ஆராய்ந்தறிந்து படித்து தயாரித்து தன்னை ஓர் ஆயுள்வேத வைத்தியராகவும் நிலைநிறுத்திய இச்சுய முயற்சியாளரான கைலாசம்பிள்ளையவர்கள் 1974-07- 14 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார். தற்பொழுது அவரது பிள்ளைகளால் அதே பெயரில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.