Saturday, May 4

நமசிவாயதேசிகர், இராமசாமி (இலக்கணவித்தகர்)

0

1915.11.10ஆம் நாள் கட்டுவனில் பிறந்தார்.தமிழ் இலக்கணத்துறையில் அவருக்கு நிகர் அவரே என்று சான்றோரால் குறிப்பிடப்பட்டவர். ஆரம்பக்கல்வியின் பின்னர் 1932 ஆம் ஆண்டு வித்துவ சிரோன்மணி பிரம்மஸ்ரீ கணேசையரிடம் பிரவேச பண்டித வகுப்பில் சேர்ந்தார். கணேசையரவர் களுடைய பண்டித வகுப்புக்களை நடத்துகின்றளவிற்கு இவருடையபுலமை காரணமாக அமைந்தது.

கணேசையரது தொல்காப்பியப் பதிப்பு முயற்சியின்போது அவர் அருகிலிருந்து உதவியவர். வரன் முறையான இலக்கணத்தெளிவு பெற்றவர். யாழ்ப்பாணத்து கல்விப்பாரம்பரியத்தின் இலக்கணச் செம்மையைப் பலருக்கும் புகட்டியவர். திருக்குறள்,கம்பராமாயணம், வில்லிபாரதம், கந்தபுராணம், சங்கத்தொகை நூல்கள், நெடும்பாடல்கள் முதலாம் இலக்கியங்களிலும், தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களிலும், சிவஞானபோதம் முதலான சித்தாந்த சாஸ்திரங்களிலும் அவ்வவற்றின் உரைகளிலும் பிறவற்றிலும் மிகுந்த புலமையுடையவர். பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதியவர்.கும்பகர்ணன் வதைப்படலவுரை, களுத்துறை முருகன், ஹற்றன் விநாயகர், திருகோணமலை ஆலடிப்பிள்ளையார், மாங்குளம் தச்சகடம்பன் பிள்ளையார், நெல்லண்டைப் பத்திரகாளி, மயிலிட்டி கொழுவியன் கலட்டிப் பிள்ளையார், கட்டுவன் ஐயனார், முத்துமாரி அம்மன், யூனியன் கல்லூரி அம்மன், அளவெட்டி குருக்கள் கிணற்றடி முருகன், பண்ணாகம் பனிப்புலம் அம்மன் போன்ற ஆலயத்தில் வீற்றிருக்கும் தெய்வங்கள் மீது பதிகங்கள் பாடியவர். சந்நிதிக்கந்தர் சதகம், நகுலேசர் திருவந்தாதி, கட்டுவன் முத்துமாரி அம்மன் திருப்பள்ளியெழுச்சி போன்ற பாடல்களையும் பாடியவர். இவரது இலக்கிய,இலக்கணப்புலமையைப் பாராட்டி யாழ்ப்பாணம் ஆரிய திராவிட   பாஷாபிவிருத்திச்சங்கம் பிரவேச பண்டித பாலபண்டித பட்டங்களையும், மதுரைத்தமிழ்ச் சங்கத்தால் பண்டித பட்டமும், நல்லை ஆதீனத்தால் செந்தமிழ்த் திலகம் என்றபட்டமும் யாழ்ப்பாணம் ஆரிய திராவிடபாஷாபிவிருத்திச்சங்கத்தால் மகா வித்துவான் என்னும் சிறப்புப்பட்டமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் இலக்கண வித்தகர் என்ற சிறப்புப்பட்டமும், இலங்கை அரசினால் சமாதான

நீதிவான்பட்டமும், வித்துவசிரோன்மணி கணேசையரால் தேசிகர்பட்டமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பண்டிதரவர்கள் புறநானூறு கூறும் ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர். அவரது உலகம் பகுத்தறிவு உலகம், அவரது சிந்தனை தனித்துவமானது. 2000.11.09 ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!