Saturday, May 4

முருகேசனார் , கந்தப்பர் (தமிழ்த் தாத்தா)

0

1902-04-27 ஆம் நாள் பருத்தித்துறை தென்புலோலி என்னும் இடத்தில் பிறந்தவர். தமிழகம் எனத் தமது இல்லத்திற்குப் பெயர் சூட்டி திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்தி பலரை கல்விமான் களாக்கியவர். பத்திரிகைகளில் கட்டுரைகளும், கண்டனங்களும் எழுதியவர். ஆரம்பக் கல்வியை தட்டாதெரு மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையிலும் உயர் கல்வியை புலோலி ஆண்கள் ஆங்கிலப் பாடசாலையிலும் கற்றார். வறுமை காரணமாக கல்வியை இடையில் நிறுத்தி பெற்றோருக் குத் துணையாக விவசாயத்தில் ஈடுபட்டார். கல்வியில் நாட்டங்கொண்டதனால் தனக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தமிழ் அறிஞரான கார்த்திகேசு வாத்தியார் என்று அழைக்கப்பட்ட க.முருகேசபிள்ளை என்பவரிடம் சென்று கல்வியைத் தொடர்ந்தார். தமிழ்இலக் கணம், புராண பாடல்களிற்கு விளக்க உரை கற்றுத்தேர்ந்தார். தமிழ் சிற்றிலக்கியம், பெரும்காப்பியம் என்பவற் றைத் தேடியறிந்து கற்றுக்கொண்டதுடன் நன்னூல், தொல்காப்பியம், திருக்குறள், வீரசோழியம் முதலான நூல்களைக் கசடறக் கற்றார். அத்துடன் தர்க்கரீதியான தத்துவக் கட்டுரைகளையும் தேடிவாசித்ததுடன், இந்தியாவிலிருந்தும் பல சஞ்சிகைகளைத் தருவித்து வாசித்தார். தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கு வழங்கவிரும்பி வராத்துப்பளை சாரதாபீட வித்தியாசாலையில் (இக்காலத்தில் புற்றளை மகா வித்தியாலயம் எனப்படும்) கல்வி கற்பித்து வந்தார். ஆயினும் சுகவீனமுற்று இரண்டு கால்களும் வலுவிழந்து போக தனது தமிழகம் என்னும் திண்ணை வீட்டினை பள்ளிக்கூடமாக்கி ஒதுக்கப்பட்ட சமூக மாணவர்களையும் சமமாக இருத்தி கல்வி கற்பித்து வந்தார். இவரது கற்பித்தல் முறையில் கேட்டல், சிந்தித்தல், தெளிவடைதல் என்ற எண்ணக்கரு காணப்பட்டது. கேட்டலைவிட சிந்தித்தல் நூறு மடங்காகவும் தெளிதல் ஆயிரம் மடங்காகவும் இருக்கவேண்டும் என வலியுறுத்துவார். இவர் ஆறுமுகநாவலரின் பெருமைகளைச் செய்யுளாகப் பாடியுள்ளார். அத்துடன் ஈழமணி என்னும் பத்திரிகையில் ஆக்கங்கள் எழுதி வெளிவந்தன. மேலும் தமிழர் “மணமுறை” “விதிகன்மம்” ஆராய்ச்சிக்கட்டுரைகளை எழுதியுள்ளார். இக்கட்டுரைகள் செந்தமிழ்ச்செல்வி சமூக முன்னேற்றம் என்னும் சஞ்சிகையில் அக்காலத்தில் வெளிவந்தன. சமதர்மவாதி, சீர்திருத்தவாதி, பகுத்தறிவாளன், கிரேக்கதத்துவ ஞானிகளின் சிந்தனைகளையும் பொதுவுடமை தத்துவஞானிகளின் சிந்தனைகளையும் உள்வாங்கினார். இதனால் சைவசமய பற்றிலிருந்து நீங்கி பொதுவுடமைத் தத்துவத்தின் மீதுநாட்டம் கொண்டார். சமூகத்தில் புரையோடிப்போயுள்ள அறியாமை மூடநம்பிக்கைக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். தீண்டாமையை ஒழிப்பதற்கு பெரும்பங்காற்றினார். ஈ.வே.இராமசாமி பெரியாரின் பகுத்தறிவுப் போராட்டத்தின் ஈழப்பிரதிநிதியாக விளங்கினார். தமிழகத்தில் மறைமலை அடிகளால் ஆரம்பிக்கப்பட்ட தனித் தமிழ் இயக்கத்திற்கு இங்கிருந்து ஆதரவு கொடுத்தவர். அண்ணாவின் குரல் ரீ.கே.சீனிவாசனின் “ஈழத்தில் ஈரேழு நாட்கள்”என்னும் பயணக் கட்டுரையில் இவரது பெருமைகளைப் புகழ்ந்து கூறியுள்ளார். இவர் தமிழ் உலகிற்கு ஆற்றிய பணிக்காக திராவிடக் கழகத்தின் கொடி இவரது பூதவுடல் மீது போர்த்தப்பட்டது. 1965-06-14 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!