Friday, May 3

கணேசையர், சின்னையர் (வித்துவசிரோன்மணி )

0

1878-04-01 ஆம் நாள் புன்னாலைக்கட்டுவனில் பிறந்து வருத்தலைவிளான் மருதடி விநாயகர் ஆலயத்தடியில் ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்த மகான். இலங்கைத் தமிழ்ப்பாரம்பரியத்தின் கொடுமுடி உலகம் உவப்பத் தொல்காப்பியத்திற்குத் தெளிவுரை தந்த வருத்தலை விளானில் இருந்த தமிழ்க்கொட்டிலில் வித்துவசிரோன்மணி அவர்கள் தட்சணாமூர்த்தியாக இருந்து தமிழில் இலக்கணங்களைக் கற்பித்து வந்தவர். இலக்கிய, இலக்கணத்துறையில் மாபெரும் முனிவராகத் திகழ்ந்து பல பேரறிஞர்களை உருவாக்கியவர். தமது பெரிய தந்தையாராகிய மறைத்திரு கதிர்காம ஐயரவர்களின் புன்னாலைக்கட்டுவன் சைவப் பள்ளிக் கூடத்தில் எட்டாம் வகுப்புவரை சிறப்பாகக்கற்று இலக்கியம், இலக்கணம், சமயம், சரித்திரம், கணிதம் ஆகிய பாடங்களிலே முதன்மை பெற்று தேர்வில் சிறப்புச்சித்தி பெற்றார். இப்பாடசாலையில் வித்துவசிரோன்மணி பொன்னம்பலபிள்ளையவர்கள் இப்பரீட்சைக்குப் பொறுப்பாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவரிடம் வடமொழியைப் பயிலும் வாய்ப்பும் பெற்றார். 1899ஆம் ஆண்டு வண்ணை விவேகானந்த வித்தியாசாலையில் ஆசிரியப்பணியை ஆரம்பித்தவர். பின்னர் புன்னாலைக்கட்டுவன், வசாவிளான், குரும்பசிட்டி, தையிட்டி, நயினாதீவு, சுன்னாகம் பிராசீனப் பாடசாலையிலும் கற்பித்தவர். 1921-1932வரையில் யாழ்ப்பாணம் ஆரிய திராவிடபா~hபிவிருத்திச் சங்கத்தில் பிரவேசபண்டித, பாலபண்டித பண்டித வகுப்பு மாணவர்களுக்கு தொல்காப்பியம், கல்வி போதிக்கும் பேராசிரியராகவும் பணியாற்றியவர். தொல்காப்பிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், தமிழகச் செந்தமிழ், இரகுவம்சக் கட்டுரைகள், சிறுபாணாற்றுப்படை, சிந்தாமணி கம்பராமாயண ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியவர். இரகுவம்ச உரை, தொல்காப்பிய உரை விளக்கக் குறிப்பு, மருதடி விநாயகர் பிரபந்தம், குமாரசுவாமிப்புலவர் வரலாறு, குசேலர் சரித்திரம், மருதடி விநாயகர் இருபா இருபது, ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரித்திரம், மருதடி விநாயகர் அந்தாதி, கலித்துறை ஊஞ்சல் போன்ற அரிய நூல்களை வெளியிட்டவர். ஈழகேசரி, செந்தமிழ், கலாவல்லி ஆகிய பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதியவர். இவரின் கல்விப்பணியின் பெறுபேறாக நல்ல பல முத்துகள் நாட்டில் திகழ்ந்தாலும் இவரது அரும்பணிக்குச் சான்றாக அமைந்த பெரும் முத்தாக அமரர் இலக்கணவித்தகர், வித்துவசிரோன்மணி இ.நமசிவாயதேசிகர் அவர்களையும் பெரும்புலவர் பண்டிதர் ச. பொன்னுத்துரையையும் குறிப்பிடலாம். இதுவும் “ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுபதம்” என்றவகையில் அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது மாணவரான ஈழகேசரிப் பொன்னையா தமது திருமகள் அழுத்தகத்தில் தொல்காப்பிய உரைக் குறிப்புக்களைப் பதிப்பித்தவர். அந்தவகையில் 1935 இல் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியார் உரை, 1938 இல் தொல்காப்பியம் – சொல்லதிகாரம் சேனாவரையார் உரை, 1943 இல் தொல்காப்பியம் – பொருளதிகாரம் இரண்டாம் பாகம் பின்னான் இயல்களும் பேராசிரியம்,1948இல் தொல்காப்பியம் – பொருளதிகாரம் முதலாம்பாகம் முன் ஐந்து இயல்களும் நச்சினார்க்கினியம் ஆகிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டவர். மேகதூதக்காரிகை, அகநாநூறு, நாணிக்கண் புதைத்தல் என்ற ஒருதுறைக் கோரிக்கைப் புத்திரை முதலியவற்றையும் எழுதி யுள்ளார்.அத்துடன் ஈழத்துத் தமிழ்ப் புலவர் வரலாறுகளை ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர்சரிதம் என்ற தனிப்பெரும் நூலாக வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தமிழரசர் காலத்தில் எழுந்த அரசகேசரியின் இரகுவம்சத்திற்கு 1915இல் மிகவிரிவான உரை எழுதி வெளியிட்டவர். மாணவர்க்கேற்ற உரை நடை நூலாக குசேலர் சரிதம் என்ற நூலையும் 1966இல் குமாரசுவாமிப் புலவர் சரித்திரம் என்ற நூலையும் எழுதியவர். இவரது இலக்கணக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள் பல தமிழ் நாட்டு செந்தமிழ் பத்திரிகையில் வெளிவந்துள்ளன. ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுதல், சிறுவர்களுக்கான எளியநடை நூல்களை எழுதுதல்,இலக்கிய வாழ்க்கை வரலாற்று நூல்களையாத்தல், தொல்லியல் இலக்கியங்களுக்கு உரைவகுத்தல், இலக்கண நூல்களை உரைவிளக்கக் குறிப்போடு பதிப்பித்தல், செய்யுளிலக்கியம் படைத்தல் முதலான கல்வித்தொண்டில் தன்னிகரில்லாத் தமிழ்ப் பேரறிஞராக விளங்கியவர். மேலும் இவர்தம் பணிகளை நினைத்து என்றும் வணக்கத்திற்குரியவர் என்ற வகையில் புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்தி விநாயகர் ஆலய முன்றலிலும், வருத்தலை விளான் கற்பக விநாயகர் ஆலய முன்றலிலும் சிலை எழுப்பப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டுள்ள இம்மகான் 1958-11-08 ஆம்  நாள் இறைவனடி சேர்ந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!