Thursday, January 23

உருத்திரமூர்த்தி , து (மகாகவி)

0

1927.01.09 ஆம் நாள் அளவெட்டியில் பிறந்தவர். இவர் கவிதை, நாடகம், வில்லுப்பாட்டு எனப் பல்துறை ஆற்றலுடையவர். தமிழ்க் கவிதையுலகில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துக் கொண்ட நாடறிந்த கவிஞன். பேச்சு ஓசைக்கு மிகவும் அண்மித்ததான ஒருநடைக்கு தமிழ்க் கவிதையை எளிமையாகவும், அழகாகவும் நகர்த்தியதில் இவரது பங்கு மிகமுக்கியமானது. சாதாரண மக்களிடையே கவிதையை எடுத்துச் செல்லவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர். ஈழத்திலும் தமிழகத்திலும் புகழ்பெற்ற கவிஞர். மறுமலர்ச்சிக்காலத்தில் எழுத்துலகில் புகுந்த மகாகவி 1971 ஆம் ஆண்டுவரை கவிதை,காவியம், பாநாடகம் முதலான பல்வேறு துறைகளிலும் கவிதை வடிவிலேயே தனது படைப்புக்களை யாத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகாகவி ஒரு புதிய சந்ததியை விருத்தியாக்கும் ஒரு காலகட்டத்தவராகின்றார். கோடை, புதியதொரு வீடு என்ற இவரது நாடகங்களும், கண்மணியாள்காதை என்ற வில்லுப்பாட்டும் தமிழர் வாழிடங்களெல்லாம் பல முறை மேடையேற்றம் கண்டிருக்கின்றன. தமிழில் ஒரு புதிய முயற்சியாக இவர் எழுதிய குறும்பா என்னும் வடிவம் மிகவும் பிரசித்தமானது. இவரெழுதிய சிறுகதைகளுள் ஒன்று தூக்கணாங் குருவிக்கூடு சிறப்பாகப் பேசப்பட்டது. மகாகவியின் கவிதைகள் பெருமளவில் பத்திரிகைகளிலும் இதழ்களிலும் வெளிவந்துள்ளன.1955 இல் வள்ளி, 1966 இல் குறும்பா, 1968 இல் கண்மணியாள் காதை, 1971 இல் ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் 1970 இல் கோடை, 1973 இல் வீடும்வெளியும், 1974 இல் இரண்டு காவியங்கள், 1984 இல் மகாகவி கவிதைகள், புதியதொரு வீடு, 2000 இல் மகாகவியின் ஆறு காவியங்கள் ஆகிய பத்து நூல்கள் மகாகவி வாழ்ந்த காலத்திலும் மறைந்த பின்னரும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ‘நவீன தமிழுக்குப் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியதே” இவருடைய பெருமைக்குக் காரணம் ‘தமிழ்க் கவிதைத்துறையில் மகாகவியின் தனிச் சிறப்புக்கள் இன்னும் சரியானமுறையில் பரவலாக இனங்காணப்படவில்லை. மகாகவியின் படைப்புக்கள் அனைத்தும் நூலுருப்பெறுவதும் வரலாற்று ரீதியில் புறநிலைப்பட்ட ஆய்வுமுறைக்கு அவற்றை உட்படுத்துவதும் மகாகவியைச் சரியான முறையில் இனங்காண உதவக்கூடும்” என கவிஞர் எம்.ஏ.நுஃமான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இன்னும் மகாகவி து.உருத்திரமூர்த்தியின் பெருந்தொகையான கவிதைகள் நூலுருப்பெற வேண்டியுள்ளன. எனினும் அவர் ஈழத்தின் தலைசிறந்த கவிஞர் என இதுவரை வெளிவந்த நூல்களே சான்று பகர்கின்றன. அ.ந.கந்தசாமி, அ.செ.முருகானந்தம், மகாகவி உருத்திரமூர்த்தி ஆகிய மூவரும் மகாஜனா தந்த மும்மணிகள் என்றும்,அளவெட்டி தந்த மூவர் என்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் என்றும் போற்றப்படுகின்றனர். 1971.06.20 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து இறைவனடி சேர்ந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!