1943.06.24 ஆம் நாள் யாழ் தீபகற்பம் – தம்பாட்டி, ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவர். தனது தந்தையாரிடம் மிருதங்கக்கலையைக் கற்று காந்திஜி நாடக மன்றத்தினால் யாழ் மாவட்டத்தில் மேடையேற்றப்பட்டு பலரது பாராட்டுதல்களையும் பரிசில்களையும் பெற்ற அதியரசன் (வடமோடி), பண்டார வன்னியன் (தென்மோடி) , காத்தவராயன் (சிந்துநடை) போன்ற முழு நீள நாடகங்களுக்கு மிருதங்கம் வாசித்து அனைவரினது பாராட்டுக்களைப் பெற்றதோடு ஊர்காவற்றுறை உதவி அரசாங்கஅதிபர் பணிமனையின் கலாசாரப் பேரவையினரால் “கூத்துக் கலையரசு” கலாவித்தகர் போன்ற பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்ட தோடு, யாழ் திருமறைக் கலாமன்றத்தினாலும் கௌரவிக்கப்பட்டவர். இசைத்துறை சார்ந்த கலைஞராய் மேடை நிகழ்வுகளை அலங்கரித்த போதிலும் தனது பிரதான தொழிலாக முருகனின் நாமம் சுமந்து “ஸ்ரீ முருகன் சவுன்ஸ் சேர்விஸ்” என்ற பெயரில் ஒலி, ஒளி அமைப்பு சேவையை வழங்கி வந்தவர். இவருடைய மூத்த புதல்வனான தமிழழகன் பிரான்ஸ் நாட்டில் தபேலா, மிருதங்கம் என்பவற்றினை வாசித்து தந்தை வழியில் கலைத்தொடர்ச்சியினைப் பேணி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. 2010.03.21 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.