1944-08-27ஆம் நாள் பிறந்த இவர் புத்தூர் மழவராயர் பரம்பரையைச் சேர்ந்தவர். தந்தையாருடன் சாவகச்சேரியில் வசித்து வந்தவர். 6ஆவது குருபீடாதிபதியான நமசிவாயம் சுவாமிகள் பரி பூரணமடைந்ததின் பின்னர் ஏழாவது குருபீடாதிபதியாகப் பணியாற்றியவர். சாவகச்சேரி யிலும் கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் கல்வி பயின்ற சுவாமிகள் சிறுபிள்ளையாகவிருக்கும் போது தந்தையாருடன் அடிக்கடி வேதாந்த மடத்திற்கு வருவதுண்டு. இளைஞனான காலத்தில் இராமலிங்க சுவாமிகளால் உருத்திராட்சம் அணிவித்து ஆசீர்வாதம் அளிக்கப்பட்டவர். நமசிவாயம் சுவாமிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி சமய வகுப்புகளிலும் பண்ணிசை மற்றும் சமயச் சொற்பொழிவு களிலும் தன்னை ஈடுபடுத்தினார். நமசிவாயம் சுவாமிகளினால் எழுதப்பட்ட மரணசாசனத் தின் பிரகாரம் வேதாந்த மடத்தின் பொறுப்புக்களைப் பொறுப்பேற்ற சுவாமிகள் முழுநேரத் துறவியானார். தன் இறுதி மூச்சிருந்தவரை மனதைக் கடந்து வாழ்ந்த ஞானிகளின் சமாதிகளுக்கு தினமும் பூசை செய்யும் பெரும் பாக்கியத்தைப் பெற்றார்.சோமஸ்கந்தவேள் சுவாமிகள் 2006-07-25 ஆம் நாள் ஆடிமாத பூச நட்சத்திரத்தன்று ஆடி அமாவாசை தினத்தன்று வில்லூன்றி தீர்த்தக் கரையில் நீராடி தனது கடமைகளை முடித்து சமாதியடைந்தார்.