Wednesday, May 29

இலங்கை வானொலி நாடகத்தின் பிதாமகர்  லண்டன் கந்தையா புகழ் சானா சண்முகநாதன்.

1

எனது அப்பா – பலராலும் அவரது இயற்பெயர் சண்முகநாதன் என்பதை விட சானா என்றே அறியப்பட்டவர் – அப்பா தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் தொழில் நிமித்தம் காரணமாக கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டு வாழ்ந்தவர்.  செல்லத்துரை சிவகங்கை தம்பதிகளுக்கு மகனாக 1913 ஆம் ஆண்டு தை மாதம் 11ஆம் நாள் பிறந்தார். அவரைப்பற்றி நினைக்கும் போதே அவரது சகலதுறைத் திறமையும் அவர் கைவைத்த துறைகளில் எல்லாம் அவரது ஆளுமையும் தான் எமது கண்முன்னே வந்துபோகின்றன.

இலங்கை வானொலி நாடகத் தந்தை, பிதாமகர் என்றெல்லாம் பலர் அவரைப் பெருமை பேசும்போதும், நாடகம் மட்டுமல்லாமல் ஓவியம், கேலிச்சித்திரம், ஒட்டுச்சித்திரம் (கொலாஜ்), கன்வஸ் துணியில் வரைதல், கதாப்பிரசங்கம், கர்னாடக சங்கீதம், நாட்டிய நாடகம் போன்றவற்றிலும் ஈடுபாடு கொண்டவராக விளங்கினார்.

இவை அத்தனையிலும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டவராக விளங்கிய அப்பா, பலரைப்போல வீடு, காணி சேர்க்க வேண்டும், காசு பணம் பார்க்க வேண்டும் என்றில்லாமல் கலைக்காக வாழ்ந்து மடிந்தவர் என்று நாம் இப்போதும் பெருமை கொள்கின்றோம். அம்மா வீட்டுச் சுமைகளைச் சுமக்க, அப்பா கலைப்பணியைத் திறம்படச் செய்யக்கூடியதாக இருந்தது.

கிட்டத்தட்ட ஒரு வெள்ளி விழாக் காலப்பகுதியில் (1950 – 1973) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அப்பா  ஒரு நாடகத் தயாரிப்பாளராக – காலஞ்சென்ற பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் சொற்களில் இலங்கை வானொலியின் பொற்காலத்தில், இலங்கை நாடக வரலாற்றில் மிக முக்கியமான கலைஞன் சானா. மேடை நாடகத்துக்கே பழக்கமான சூழலில் இருந்த தமிழ் மக்களை வானொலிக்கு ஊடுகடத்திய பெரும் பங்கை வழங்கி இருந்தார்.

அப்பா வீட்டில் எங்களோடு கழித்த நேரத்தை விட இலங்கை வானொலியில் நாடகங்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்ட கலையகங்களில் அவர் கழித்த நேரமே அதிகம். நாடகம், தொழில் என்று வரும்போது அவர் மிகக் கண்டிப்பான ஒருவர். நேரந்தவறாமையும் ஒழுக்கமும் அவரது மிக முக்கியமான விடயங்கள். நாடக ஒத்திகைக்கு அனைவரும் நேரத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். இல்லாவிட்டால் தண்டனை தான். எத்தனை பெரிய கலைஞராக இருந்தாலும் நாடகத்தில் இருந்து நீக்கிவிடுவார். இதே கட்டுப்பாடு, கண்டிப்பு மற்றும் பண்பாட்டுடன் தான் எம்மையும் வளர்த்தார்.

தினமும் காலை ஏழு மணிக்கே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு (அப்போது இலங்கை வானொலி) சென்று விடுவார். வீட்டில் இருக்கும் நேரங்களிலும் எதையாவது வாசித்துக்கொண்டோ வரைந்துகொண்டோ இருப்பார். எழுத்தாளரிடமிருந்து வரும் நாடகப் பிரதிகளை வாசித்து, திருத்தி, சேர்க்கவேண்டியவற்றை சேர்த்து, நீக்க வேண்டியவற்றை நீக்கி, கையில் கடிகாரம் ஒன்றோடு நேரம் சரிபார்த்து கணித்து செம்மையாக்குவார். அதை அப்பா ஒரு தவம் போல செய்வார்.

அந்தக்கால இலங்கை வானொலியில் 15 நிமிட நாடகம், 30 நிமிட நாடகம், தொடர் நாடகம், வர்த்தக சேவையில் ஒலிபரப்பான விளம்பர நாடகம், இவை தவிர மாதமொருமுறை ஒரு மணித்தியால இலக்கிய, சரித்திர நாடகங்கள், கூத்துப்பாணி நாடகங்கள் என்று ஒலிபரப்பாகின. இவை அனைத்துமே தரத்தில் மேம்பட்டவையாக, செம்மையான வையாக இருக்கவேண்டும் என்று தந்தையார் உறுதிப்படுத்திக்கொள்வார்.

அத்தோடு, மாதமொருமுறை ‘மத்தாப்பு” என்னும் நகைச்சுவைக் கதம்ப நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் ஆறாம் இலக்கக் கலையகத்தில் (தற்போதைய குமாரதுங்க கலையகம்) இடம்பெறுவதுண்டு. அதேபோல தமிழர் பண்டிகை நாள்களான தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற நாள்களில் றோயல் கல்லூரி மண்டபத்தில் கலைவிழா நடைபெறும.; இங்கு ஓரிரு நாடகங்கள் மேடையேற்றப்படும். அவற்றுக்கான ஒத்திகைகளை சனி, ஞாயிறு தினங்களில் எங்கள் வீட்டிலேயே வைப்பார். ஒத்திகை நேர சாப்பாடு மற்றும் இதர செலவுகள் அவரது கையாலேயே மேற்கொள்ளப்படும்.

இதை நான் இங்கே பதிவதற்கான காரணம், சானா என்ற கலைஞன் தனியே ஒரு சம்பளம் வாங்கிய அரச ஊழியனாக இல்லாமல் தனது குடும்பத்தை விட அதிகமாக அர்ப்பணிப்புடன் தான் செய்த கலையை நேசித்தவன் என்பதை எனது அப்பா பற்றி அறியாதோருக்கு ஞாபகப்படுத்தவே. அவர் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இம்மூன்றையும் தன்னுடைய வாழ்வில் கடைப்பிடித்து நடந்தார். இப்போது போலல்லாமல், அப்போது நாடகங்கள் நேரடியாகவே ஒலிபரப்புச் செய்யப்பட்டது.   முதல் நாள் ஒத்திகை இடம்பெறும்,  அடுத்த நாள் நேரடி ஒலிபரப்பு நடைபெறும்.

இலங்கை வானொலியின் நாடகத் தந்தை (பிதா மகர்) என்று பலராலும் பெருமை பேசப்படும் என் தந்தையாரின் காலத்தை வென்று நிற்கவேண்டிய படைப்புகளோ, அவரது முன்னைய நாடகங்களோ, நிகழ்ச்சிகளோ இப்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒலிக்களஞ்சியத்தில்இல்லை என்று கூறுகின்றார்கள். என்ன நடந்தது அவற்றுக்கு ?

முன்னைய எல்லாக் கலைஞரின் படைப்புகளும் இவ்வாறு தான் கவனிப்பாரற்றும் அக்கறையற்றும் அழிக்கப்பட்டோ சிதைக்கப்பட்டோ விடப்படுகின்றனவா? யாரிடம் கேட்பது ? பொறுப்பற்ற பதில்களே வந்தன.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பவள விழாக் கொண்டாட்டங்களில் இலங்கை வானொலிக்காகவே தன்னை அர்ப்பணித்த என் தந்தையின் பெயர் மறக்கப்பட்டது. பவள விழா மலரிலே தந்தையாரின் பெயர் எங்கேயுமே இருக்கவில்லை.

என்றாலும் மிகப்பெரிய ஆத்ம திருப்தி இன்றும் அப்பாவின் சிஸ்யர்கள் நன்றி மறவாமல் அவர் பெயரை நன்றியுடனும் பெருமையுடனும் சொல்வது தான். எழுத்து வடிவிலும் அவர்களது பதிவுகளின் வடிவிலும் காலாகாலம் அது நிலைக்கும்.

என் அப்பாவின் பாசறையில் இருந்து வளர்ந்து இன்று மாபெரும் ஊடகவியலாளர் களாகப் பரிணமித்தவர்களாக பின்வருவோரைக் குறிப்படலாம்.

எஸ்.எம்.எஸ்.ஜபார்

ரொசாசாரியோ  பீரிஸ்

பிலோமினா சொலமன்

லடிஸ் வீரமணி

ஏ.ரி.பொன்னுத்துரை

எஸ்.எஸ்.கணேசபிள்ளை

தாசன் பெர்னாண்டோ

ஆர்.விக்டர்

எஸ்.கே.தர்மலிங்கம்

கே.மார்க்கண்டு

என்.தர்மலிங்கம்

கே.எஸ்.பாலச்சந்திரன்

வசந்தா அப்புத்துரை

ம.மக்கீன்

பரிமளாதேவி விவேகானந்தன்

மங்களேஸ்வரி சோமசேகரம்

சரசாம்பிகை சுப்பிரமணியம்

ராஜேஸ்வரி சண்முகம்

விசாலாட்சி ஹமீட்

கோகிலவர்த்தனி சிவராஜா

சுப்புலக்சுமி காசிநாதன்;

சற்சொரூபவதி நாதன்

எஸ்.ராம்தாஸ்

எஸ்.ஜேசுரட்ணம்

சந்திரப்பிரபா மாதவன்

மகேஸ்வரி ரட்ணம்

எம்.கே.ரகுநாதன்

நெய்ரகீம் சஹிட்

பிரியா சாந்தி

ஹெலன்குமாரி

எஸ்.எஸ்.அச்சுதம்பிள்ளை

பாலு மகேந்திரா

ரீ.ராஜேஸ்வரன்

பரமேஸ்வரி பொன்னுச்சாமி

ராஜம் லக்ஸ்மன்

அப்துல் ஹமீட்

எஸ்.செல்வசேகரன்

கே.சந்திரசேகரன்

கே.அருள்பிரகாசம்

யோகா தில்லைநாதன்

விமல் சொக்கநாதன்

கே.சிவதாசன்

என்.திருநாவுக்கரசு

ஆனந்தி சூரியப்பிரகாசம்

எஸ்.சரவணமுத்து

எம்.ஏ.ஹமீட்

பஞ்சவரணம் லக்ஸ்மன்

கே.எஸ்.நடராஜா

சோமு

கலாநிதி கே.சிவத்தம்பி

ஆர்.பத்மநாதன்

செல்வம பெர்னான்டோ

மணிமேகலை ராமநாதன்

வி.சுந்தரலிங்கம்

சில்வெஸ்டர் பாலசுப்பிரமணியம்

நவரட்ணம் மாஸ்ரர்

இப்பெயர்ப்பட்டியலில் எனக்கு ஞாபகமிருந்தவர்களது பெயர்களை இணைத்துள்ளேன்.

வெளிநாடுகளில் இருக்கும் எனது சகோதரர்கள் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் இடையிடையே அப்பாவின் வழியில் தங்களால் முடிந்த கலைப்பயணத்தை ஆற்றிக்கொண்டிருக்கும் போதும், இலங்கையில் இருக்கும் நான் என்னால் முடிந்த சிறு பங்களிப்புகளை ஆற்றிவருகிறேன்.

எனது அம்மா இரத்தினம் அவர்கள் என்னுடன் இருந்த காலங்களில் அவரது ஒத்துழைப்பு காரணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் பங்கெடுத்ததோடு உற்சாகமாக ஒலி, ஒளி, இலக்கியம் என்று மூன்று துறைகளிலும், என்னுடைய அப்போதைய தொழிற்றுறைக்கு மேலதிகமாக ஈடுபட முடிந்தது. அப்பாவுக்கு மட்டுமல்லாமல் எனக்கும், ஏன் எனது பிள்ளைகளுக்கும் கலைத்துறையில் ஒரு மிகப்பெரும் பக்கபலமாக இருந்தவர் எனது அம்மா. இப்போது எனது மூன்று பிள்ளைகளுமே என் தந்தையின் வழியில் ஒலிபரப்பு, கலை, ஊடகம் என்று ஈடுபடுகின்றனர். இலங்கை வானொலி லண்டன் கந்தையா என்னும் நீங்காப் பெயர் பெற்ற கலை ஆளுமை 1979 மே ஆறாம் நாள் கலையுலக வாழ்விலிருந்து நிலையுலக வாழ்விற்குச் சென்றார்.

கட்டுரையாளர் திருமதி சுமதி   இரகுபதிபாலஸ்ரீதரன் (சானா அவர்களின் மகள்) அவர்களுக்கு நன்றி.

                                                           சானாவினால் வரையப்பட்ட பேனாச் சித்திரம்

                                                     சானாவினால் வரையப்பட்ட ஒட்டுச் சித்திரம்                             அப்போதைய பிரதமரை ஒட்டுச்சித்திரத்தில் வரைந்து அவரிடம் கையளித்த காட்சி                                                                             கலாஜோதிபட்டமளிப்பவிழா

 

இவர் ஓவியராக, நாடக நடிகராக, நாடகத்தயாரிப்பாளராக உரைநடைச்சித்திரங்கள் வரைபவராகப் புகழ்பெற்றவர். சென்னை அரசினர் கலைக் கல்லூரியின் பாராட்டினைப் பெற்றுக் கொண்ட சானா அவர்கள் கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்றவர். ஈழகேசரி பத்திரிகையின் ஓவியராகவும், உதவி ஆசிரியராகவும் பணியாற் றிய காலத்தில் ரேகைச் சித்திரங்களையும்,கேலிச்சித்திரங்களையும் வரைந்து ஓவியக்கலை மீதானதனது படைப்பாற்றலை வெளிப்படுத்தினார். இந்தியப் பத்திரிகையான ஆனந்த விகடனில் வெளிவருகின்ற மாலியைப்போலவேசானா அவர்களும் நாளாந்த வாழ்க்கையில் நடமாடும் பாத்திரங்களை ரேகைச்சித்திரத்தின் மூலம் அமைக்கும் ஆற்றலினால் யாழ்ப்பாணத்து மாலி என வாசகர்களால் அழைக்கப்பட்டார். ஈழகேசரியில் ஈடில்லா வாழ்வு என்ற சிறுகதையினையும், நத்தை என்ற உரைநடைச்சித்திரத்தினையும் எழுதியுள்ளார். 1951 ஆம் ஆண்டிலிருந்து வானொலியின் தமிழ் நாடகத் தயாரிப்பாளராகப் பணியாற்றிய காலத்தில் இலண்டன் கந்தையா என்ற வானொலி நாடகத்தின் மூலம் தனது நாடகப் படைப்பாற்றலை வெளிப்படுத்தினார். பரியாரி பரமர் என்ற நூலினையும் வெளியிட்டதுடன்,  கலையரசு சொர்ணலிங்கமவர்களை நாடகக் குருவாகக் கொண்டு நாடகங்களில் ஈடுபட்டு வந்தார். இந்திய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சுகுமார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த தேவதாசி என்ற திரைப்படத்தில் சிறுபாத்திரமொன்றில் தோன்றியதுடன் இத்திரைப் படத்தின் ஆர்ட் நெறியாளராகவும் பணியாற்றினார்.1940 ஆம் ஆண்டின் ஈழகேசரி மலரின் அட்டைப்படம் இவரால் வரையப்பட்டதாகும்.

Share.

1 Comment

  1. சுமதி மச்சாள்
    இப்பவும் அருமையாக உண்மையை எழுதி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் பவள விழா மலரில் அவரது பெயர் இடம்பெறாதது மிகுந்த கவலை அளிக்கின்றது எவர் எவர் அதற்கு காரணமாக இருந்தார்களோ
    அவர்களை சானா மாமாவின் திறமையை அறிந்த எவரும்
    மன்னிக்க மாட்டார்கள்.

    மதிதயன் அந்தோனிப்பிள்ளை.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!