Monday, February 17

 பிரம்மஸ்ரீ வைத்தியநாதசர்மா, பீ.

0

 பிரம்மஸ்ரீ வைத்தியநாதசர்மா அவர்கள் யாழ்ப்பாணம், காரைநகர் என்னும் ஊரில் பரமசாமிக்குருக்கள், தேவநாயகி தம்பதிகளுக்கு 10.08.1923 ஆம் ஆண்டு புதல்வராகப் பிறந்தார். இவருடைய தந்தையாரும் நன்றாகப் பாடுவதிலும், பாடல்களை இயற்றுவதிலும் வல்லவர். இதனால் சர்மா அவர்களுக்கும் இயற்கையிலேயே நல்ல ஞானம் உண்டாகியதில் வியப்பில்லை இவர்கள் ஓர் இசைப் பாரம்பரியக் குடும்பம் என்டு கூறலாம். இவர் தானாகவே வயலின் கற்க வேண்டும் என விரும்பியதுடன் விருப்பத்தை தனது தந்தையாரிடம் முன் வைத்தார். மேலும் தனது ஆரம்பக்கல்வியை யாழ் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் கற்றுத் தொடர்ந்து வயலின் இசைக் கல்வியைத் தனது 14வது வயதில் மலேசியாவிலுள்ள இந்து கானசபாவில் வயலின் வித்துவான் தூத்துக்குடி பொன்னுச்சாமி ஐயங்காரிடம் கற்றார். இந்தியா சென்று மைசூர் சௌடையாவின் தம்பியாரான குருராஜப்பாவிடமும், மருங்காபுரி கோபாலகிருஷ்ணனிட மும் வயலினிசை நுட்பங்களைக் கற்று இந்தியாவிலேயே அரங்கேற்றம் செய்து அங்கேயே பல கச்சேரிகள் செய்து பெரும் புகழீட்டினார்.

சர்மா அவர்கள் 1946ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்து தனது மாமன் மகளான மனோரமா என்பவரைத் திருமணம் செய்து இனிது வாழ்ந்துவரும் காலத்தில் பல ஆண்டுகளாக இவர்களுக்கு வாரிசுகள் இல்லாத காரணத்தினால் இவரது இசை மாணவியான காரைநகர் நாகமுத்துஐயர் தம்பதிகளின் மகள் சுலோஜனா என்பவரை வாழ்க்கையில் இணைத்துக் கொண்டார். இதன் பயனாக இவர்களுக்கு பிள்ளைகள் மூவர் கிடைத்தனர். இவர் இந்தியாவிலிருந்து வருகை தந்த முதுகலைஞர்களான சித்தூர் சுப்பிரமணியம்பிள்ளை, ஏ. கல்யாணகிருஷ்ணபாகவதர், மகாராஜபுரம் சந்தானம், இசைப்புலவர் சண்முகரட்ணம், பரம்தில்லைராஜா, ஐயாக்கண்ணு தேசிகா, எஸ்.பாலசுப்பிரமணிய ஐயர், டி எஸ்.மணிபாகவதர் ஆகியோருக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்துள்ளார். அக்காலத்தில் மகாராஜபுரம் சந்தானம், இசைப்புலவர் சண்முகரட்ணம் ஆகியோர் சர்மா அவர்களுடைய வயலின் இல்லாமல் கச்சேரி ஒப்புக்கொள்ள கொஞ்சம் பின்னடிப்பார் களாம். பாடகர்கள் நல்ல ஆஜானுபாவமான தோற்றமுள்ளவர்கள் சர்மா அவர்களை பாடகர்களின் தோற்றத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது உருவில் மலையும் மடுவும் போல தோற்றம் அளிப்பார். எனினும் வயலின் வாசிப்பு மலையாகவே அமையும் நல்ல அழகும் துடிதுடிப்புமுள்ள இவர் பாடல்கள் இயற்றுவதிலும், ஐதிக்கோர்வைகள் தயாரிப்பதிலும் வல்லவர். வயலின் வாசிப்பதிலுள்ள திறமை போலவே நன்றாகப் பாடுவார். அக் காலத்தில் மார்கழித் திருவெம்பாவைக் காலத்தில் திருவெம்பாவைப் பாடல்கள் அனைத்தையும் தனித்தனி இராகங்களில் அழகாகப்பாடுவார். இவர் அதிகமாக இசைவேளாளர்களுடன் தான் நட்பு வைத்துக் கொள்ளுவார். இவரின் அபிமானத்திற்குரிய வர்களில் ஒருவர் வித்துவான் கலாசூரி என்.கே. பத்மநாதன் அவர்கள் ஆவார்.

சர்மா அவர்கள் காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் இசையாசிரியராகச் சிலகாலம் கடமை புரிந்துள்ளார். பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிலைய வயலின் வித்துவானாகவும் கடமை புரிந்துள்ளார். அந்நேரத்தில் அவர் பல பாடல்களை இயற்றி, இசையமைத்து தானே வயலின் வாசித்தும் பலரின் பாராட்டுதல்களையும் பெற்றார். இவருடைய வயலின் பேசும், பாடும், இசைக்கும் என்றால் மிகையாகாது. இவருடைய வயலின் இசை பற்றிக் குறிப்பிடும் போது மிகவும் அழுத்தமானதும், நுட்பமானதும் ரஞ்சகம் நிறைந்த பாணியை உடையதும் என்பர். மேலும் இராகவாசிப்பு ஜீவனுடையது எனலாம். இதனாலேயே இவருடைய வயலினைப் பக்கவாத்தியமாக தமக்குப் பங்களிக்க வேண்டும் எனப் பல பாடகர்கள் விரும்பினர். பாடகர்களை எந்த விதத்திலும் சோர்வுற விடாத ஒத்துழைப்பு நிறைந்த கருதி லய சுத்தமான வாசிப்பு இவருடையது எனலாம்.

இலங்கை, இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் வயலின் இசையால் புகழிட்டிய இவர் 1977இல் தனது 50ஆவது வயதில் இசைக்கு வளம் சேர்த்த மேதை கலையுலகை விட்டு நாதப் பிரம்மத்தோடு ஒன்றினார். எனினும் அமரர் வைத்தியநாதசர்மா அவர்களின் இசைக்கலையை இவருடைய பிள்ளைகள் தொடரவில்லை.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!