Wednesday, May 29

கணபதிப்பிள்ளை, நாகலிங்கம் (சின்னமணி)

0

1936.03.30 ஆம் நாள் பருத்தித்துறை மாதனைக் கிராமத்தில் பிறந்து அச்சுவேலியில் வாழந்து வந்த இக் கலைஞன் வில்லிசைக் கலையில் உலகில் கொடிகட்டிப் பறந்தவர். சின்னமணி என்ற பெயரில் வில்லிசைத்த இவரது நாமம் இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழ்ந்து வரும் இடங்களிலெல்லாம் உச்சரிக்கப்பட்டவண்ணமுள்ளது. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழிலும் தேர்ச்சி பெற்ற கலைஞனாக விளங்கியது மட்டுமல்லாது ஈழத்து இசை நாடக வரலாற்றில் இவரது பங்களிப்பானது அளப்பரியது.

1960களின் பிற்பகுதியில் யாழ். இந்துக்கல்லூரி ஆரம்பப் பாடசாலையில் ஆசிரியராக விளங்கிய திருப்பூங்குடி ஆறுமுகம் அவர்களும் ஆர்மோனிய வித்துவான் சோமசுந்தரம் அவர்களும் சின்னமணி என்ற இக்கலைஞனையும் இணைத்து வில்லுப்பாட்டுக் கலையை ஆரம்பித்தனர். மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்த இக்குழுவினர் இலங்கையின் பல பாகங்களிலும் தமது நிகழ்ச்சியை நடத்தி வந்தனர். திருப்பூங்குடி ஆறுமுகம் ஆசிரியர் அவர்கள் இடமாற்றலாகிச் சென்ற பின்னர் இக்கலையை சின்னமணி அவர்கள் கைவிடாது நாடகக்கலைஞர் எஸ்.ரி.அரசு அவர்களையும் இணைத்து கலைவாணர் வில்லிசைக் குழு என்ற பெயரில் இக்கலையில் முன்னணி வகித்தது மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் தமது கலைத்திறமையால் புகழ் பெற்றிருந்தார்.

வில்லிசைக் கலையை ஈழத்தில் உயிராக வளர்த்தெடுத்த பெருமை இவருக்கேயுரியதாகும். தீர்க்கசுமங்கலி, வள்ளி திருமணம், காரைக்கால் அம்மையார் சரிதம், திருநீலகண்டர் சரிதம், கண்ணகி சரிதம், இராமாயணம், பட்டினத் தார் வரலாறு, அருணகிரிநாதர் வரலாறு என்னும் கருப்பொருள்களைக் கொண்ட விடயங்களில் தெய்வீகக் கதைகளை நகைச்சுவையோடு வழங்குவதில் இக்கலைஞருக்கு நிகராக இன்று எவருமே இல்லை. தமிழறிவு, சமயஅறிவு, இதிகாசபுராண அறிவு, இசையறிவு, நடன அறிவு, நடிப்பில்பயில்வு, ஆற்றுகைத்திறன், கதைசொல்லும் ஆற்றல், சமூக உளவியல் சார்ந்த அறிவு , இவரிடம் இயல்பாகவேயிருந்த நகைச்சுவையுணர்வு, கூரறிவாற்றல் என யாவும் சேர்ந்தே இவரைச் சிறந்ததொரு வில்லிசைக்கலைஞனாகவும், சமூக மற்றும் வரலாற்று நாடகக் கலைஞனாகவும், மிகப்புகழ்பெற்ற இசைநாடகக்கலைஞனாகவும் செதுக்கி எடுத்தன.

மாதனை என்ற கிராமத்தில் தனது எட்டாவது வயதில் பாலகாத்தானக நடித்து சிந்துநடைக்கூத்து மரபில் ஊறியவர். மாதனைக் கலாமன்றம் உருவாகியதனால் இவர் சிறந்த இசைநாடகக் கலைஞனாக பிரவேசித்தார். நாரதராக, நட்சத்திரத்தரகராக, அயலாத்துப் பிள்ளையாக, இயமனாக, கிருஷ்ணராக, மந்தரையாக எனப் பல பாத்திரங்களை ஏற்று நடித்தார். ரி.மகாலிங்கம், எஸ்.இராசதுரை, வி.கிருஸ்ணபிள்ளை போன்ற மாதனை இசைநாடகக் கலைஞர்களுடன் இணைந்து நடித்ததுமட்டுமல்லாமல் பட்டைதீட்டப்பட்டார் என்பதே பொருத்தமானது.  இவ்வாறு இசைநாடகத்துறையில் இயமன் என்ற பாத்திரத்திற்குரிய ஸ்பெசல் நாடக நடிகனாக முகிழ்த்தார். இயமன் சின்னமணி என்று அழைக்கப்படுமளவிற்கு அவரது நடிப்புத்திறன் உயர்ந்தது. எஸ்.ரி.அரசு அவர்களுடன் இணைந்து வண்ணைக் கலைவாணர் நாடக மன்றத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராக நின்று மேடையேற்றிய வரலாற்றுப் புராண நாடகங்களில் பிரதான பாத்திரங்களையேற்று நடித்துப் புகழ்பெற்றார். திப்புசுல்தான்,சரியா தப்பா?, சாம்ராட் அசோகன், வீரமைந்தன் போன்ற பல நாடகங்களில் இவரது நடிப்பாற்றல் பேசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பன்முகத்தன்மை கொண்ட தனது அரங்கில் அநுபவத்தினூடாக வில்லிசைக் கலையில் தடம்பதித்தார். தொல்காப்பியர் குறிப்பிட்டது போல “சுவைபட வந்தனவெல் லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக்கூறல்” என்ற அரங்க அழகியல் தத்துவத்தில் இவரும் மையங்கொண்டார். ஈழத்திற்கென்ற வில்லிசைப்பாணி இதுதான் என்று கூறக்கூடிய வகையில் அவரால் உருவாக்கப்பட்ட வில்லிசை அமைந்திருக்கின்றது. இன்று வில்லிசை செய்யும் எவரும் சின்னமணி என்ற வில்லிசை ஆளுமையிலிருந்து விலக முடியாதவர்களாக அவரின் படியோசையாக நிற்பதனைத்தான் காணமுடியும்.இவரது கலையாளுமையைக் கௌரவிக்கும் முகமாக மரபுக்கலை அரசு, சிவத்தமிழ் விருது, கலாவிநோதன், கலைக்குரிசில், கலைவாரிதி, அச்சூர்க்குரிசில், வடக்கு மாகாண ஆளுநர்விருது, வில்லிசைத்திலகம், கலாபூ~ணம் போன்ற விருதுகள் வழங்கப்பெற்ற இக்கலைஞன் 2015.04.02 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!