அறிமுகம்.
மயில்வாகனம் சண்முகலிங்கம் அவர்கள் 1950இல் இருந்து அரங்க முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர் ஈழத்து நாடக வரலாற்றில் “சண்முகலிங்கத்தின் அரங்கு” என்ற ஒன்றால் நிலை நிறுத்தப்பெற்றவர். ‘மைய அரங்கின்’ முக்கியஸ்தர்களுள் ஒருவர். கிட்டத்தட்ட 85 நாடகங்கள் வரை எழுதியவர். க.பொ.த.(உயர்தரம்) ‘நாடகமும் அரங்கியலும்’ கற்கை நெறிக்கான அநேக பாடவிதானக் குறிப்புகளை தயாரித்தவர். மேலும் பல்கலைக்கழகத்தில் ‘நாடகமும் அரங்கக் கலைகளும்’ பாடவிதானத்திற்கான அநேக குறிப்புகளைத் தயாரித்தவர். சில நாடக இலக்கியங்களை மொழிபெயர்த்தவர். ஈழத்தின் இதயத்தை நாடக ஓவியங்களாக வரைந்தவர். தகுதிக்கு ஏற்ற அந்தஸ்தும், தரத்திற்கு ஏற்ற பட்டமும், விருதும் பெறப்படாது, நடைமுறைச் செயல்முனைப்புகளுடன் ஓரங்கட்டப்பட்டவர். இன்றும் இப்போதும் இயங்குபவர். பல நாடகக்காரர்கள் உருவாகக் காலாய் இருந்தவர்.
1931.11.15 இல் திருநெல்வேலியில்; மயில்வாகனம் தம்பதிகளுக்கு கடைசி மகனாகப் பிறந்தார். அங்கிருந்து மூன்று மாதம் அளவில் தந்தையார் வேலைபார்த்த நீர்கொழும்பு எஸ்டேட்டுக்குச் சென்றார். அக்குழந்தை தனது ஒன்பது வயதுப்பராயம் வரை அங்கு வளர்ந்தது. இன்று அவரது ஆளுமையின் முக்கியபண்புகளாகக் கருதப்படும் யாவற்றுக்குமான அடித்தளங்கள் அவரது தந்தையாரின் வாழ்க்கை முறையில் இருந்து எடுக்கப்பட்டுக் கட்டமைக்கப்பட்டவையாகவே தோன்றுகின்றன. கட்டமைக்கப்பட்டவை என்பதிலும் பரம்பரையாக வந்தவை என்பதே பொருத்தமானதாகும். தந்தையாரும் தாயாரும் இவர் கடைசி மகன் என்பதால் இவரிடத்தில் வாரப்பாடு அதிகம் கொண்டவர்களாக இருந்தனர். தாயார் சிறுவயதில் இவரைக் ‘குழந்தை’ என்று அழைத்து வந்தார். தந்தையாரும் அப்பெயர் சொல்லியே அழைத்தனர். (இப்பெயரே இவரின் பெயருக்கு முன்னால் இன்றும் அடைமொழியாக, அடையாளமாக இருந்து அவர்களின் வாரப்பாட்டின் தொடர்ச்சியாக நிலைபெற்று நிற்கிறது போலும்) தந்தையார் அமைதியான சுபாவம் கொண்டவர். மற்றவர்களோடு கலகலப்பாகக் கதைக்கும் இயல்பும் அவரிடத்தில் இருந்தது. வேலையில் நேர்மையானவர், கண்டிப்பானவர், ஒழுங்கினைப் பின்பற்றுபவர் மற்றைய நேரங்களில் சிக்கனமாக வாழ்க்கை நடத்தியவர். வேண்டிய வேளைகளில் மற்றவர்களுக்கு உதவிபுரிபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். ஏறக்குறைய இத்தகைய சுபாவம் அனைத்தும் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களிடம் வெளிப்பட்டு நிற்பதைக் காணமுடியும். ‘தாதைதன் செய்கை மைந்தன் செய்வது தக்கதன்றோ’என்கிறது கந்தபுராணம். இத்தகைய பண்புக்கூறுகள் பரம்பரையாகவே தோற்றம் பெற்றிருப்பினும், அதனைக் கடைசிவரை ஒழுங்கான நெறியில் பேணி, தனது இருப்போடு அவற்றைப் பின்னிப் பிணைத்து எந்த நிலையிலும் அதனில் இருந்து சறுக்காது நிற்கும் அவர்தம் இயல்பே.
தனது ஒன்பதாவது வயதின் பின்னர் மீள யாழ்ப்பாணம் வந்து இந்துக்கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். அக்காலங் களில் ‘கால்நடையாகவே’ பாடசாலைக்குச் சென்று வந்துள்ளார். (அக்காலங்களில் ஏற்பட்ட அனுபவத்தை அடிப்படையாக வைத்தே தனது முதலாவது நாடகமான ‘அருமை நண்பன்’ என்பதை 1958 இல் எழுதியதாகத் தனது நேர்காணல்களில் குழந்தை அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அங்கு உயர்ளதரம் வரை படித்தார்.
‘1944 ஆம் ஆண்டு, தை மாதம், ஆறாம் வகுப்புக்குச் சென்று உயர்தரம் வரை கற்றுப் பின்னர் 1953 சித்திரை மாதத்தில் இருந்து 1957 சித்திரை மாதம் வரை இந்தியாவில் தனது பட்டப்படிப்பை மேற்கொண்டு நாடு திரும்பிய குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களுக்கு அதே ஆண்டில்; கார்த்திகை மாதம் செங்குந்தா இந்துக்கல்லூரியில் ஆசிரியராக நியமனம் கிடைத்தது. அங்கு ஆறாம் வகுப்பில் இருந்து க.பொ.த சாதாரண தர வகுப்புகள் வரை சமயம், தமிழ்,குடியியல், ஆங்கிலம் போன்ற பாடங்களைக் கற்பித்தார். இவர் ஆசிரிய நியமனம் பெற்ற 1957 ஆம் ஆண்டினைப் பொறுத்தவரையில் அது இலங்கை சுதந்திரம் பெற்றதற்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களை எதிர்கொள்ளும் நிலைமாறு காலத்தின் ஆரம்ப காலமாக இருந்தமையால் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் ஆங்கிலமொழியில் நடைபெற்ற கற்றல் செயற்பாடுகள் தாய்மொழியில், தமிழ்மொழியில் மேற்கொள்ளப்படத் தொடங்கிச் சிலவருடங்கள் கடந்த ஒரு காலப் பகுதியாக அது இருந்தது. எனவே இக்காலத்தில் ஆங்கிலத்தைத் தமிழில் விளங்கப் படுத்திப் படிப்பிக்க வேண்டிய தேவை இவருக்கு எழுந்தது. அப்பொழுது ஆங்கில இலக்கியப் பாடத்திட்டத்தில் இருந்த ஜேன் ஒஸ்ரினின் (Jane Austin) ‘Pride and Prejudice’என்ற நாவலை ‘தற்பெருமையும் மூடநம்பிக்கையும்’ எனத் தமிழ்ப்படுத்திக் கற்பித்தார். இதனோடு இன்னும் சில ஆங்கில நூல்களும் இவரால் தமிழ்ப்படுத்திக் கற்பிக்கப்பட்டன. இச்செயற்பாடுகள் பாடசாலையின் வகுப்பறைகளிலேயே நிகழ்கின்றது. பின்னர் அதே பாடசாலையில் 1963 அளவில் க.பொ.த உயர்தரவகுப்புகளுக்கு அரசியல் பாடத்தினைக் கற்பிக்கின்ற பணி இவருக்கு வழங்கப்பட்டது. இக்காலத்தில் அரசியல் சார்ந்த தமிழ் நூல்கள் இன்மையால் அரசியல்சார்ந்த பாடங்களை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்து மாணவர் களுக்குப் படிப்பிக்கும் தேவை இவருக்கு ஏற்பட்டது. அதனை இவர் செவ்வனே செய்தார். குறிப்பாக அரசியல் பாடத்தின் பாடத்திட்டத்தில் இருந்த டொனமூர் யாப்பினை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து வகுப்பிலேயே மாணவர்களை எழுதுவித்துக் கற்றுக்கொடுத்தார். 15 வருடங்களாக அக்கல்லூரியில் இக்கற்பித்தல் செயற்பாடுகளுடன் கூடிய மொழிபெயர்ப்பு நடைபெறு;றது.
1972 இல் பளை மகாவித்தியாலயத்திற்கு மாற்றலாகிப்போயும் இந்நிலைமையே – இக்கற்பித்தல் முறைமையே இவரிடத்தில் தொடர்ந்தது. இக்காலப்பகுதியில் 1976 ஆம் ஆண்டில் நண்பர்களின் வற்புறுத்தலால் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நாடக டிப்ளோமாக்கற்கைக்குச் சென்றார். சிங்கள மொழியில் எழுதி நடிக்கப்பட்ட சிறுவர் நாடகங்கள், ஹென்றி ஜெயசேனாவின் நெறியாள்கையில் இடம்பெற்ற ‘ஹ{னுவட்டயே க(த்)தாவ’Caucasian Chalk Circle,)தர்மசிறி பண்டாரநாயக்காவின் ‘மகறரா(க்)கயா’ (The Dregon) போன்ற நாடகங்களைப் பார்த்து ரசிக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டது. அக்காலங்களில் பாலேந்திரா, பராக்கிரம நிரியெல்ல என்ற இன்றைய நாடக ஆளுமைகளும் ‘ஹ{னுவட்டயே க(த்)தாவ’ (Caucasian Chalk Circle) என்ற நாடகத்தைப் பார்த்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்;. பாலேந்திரா அவர்கள் இதனை அடியொற்றியே தன்னுடைய நாடகப்பாதையை வளர்த்துச்செல்கின்றார். (யுகதர்மம்: நாடகமும் பதிவுகளும், பக்கம்-07). குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களும் தனது நாடக டிப்ளோமாவை முடித்து மீள வந்து, தொடர்ந்தும் பளை மகாவித்தியாலயத்தில் கற்பித்தலை மேற்கொண்டபடி நாடக டிப்ளோமாவாலும் அங்கு பார்த்து வியந்த நாடகங்களாலும் தூண்டப்பட்டு நாடகம் ஒரு படிப்பு என்பதை வலியுறுத்த நாடக அரங்கக் கல்லூரியை 1978.01.23 இல் ஸ்தாபித்து நாடகச் செயற்பாடுகளை முன்னெடுத்தார். கொழும்பில் German Institute ல் ‘சத்துங்கே புஞ்சி கெதற’ (மிருகங்களின் சின்ன வீடு) என்ற சிங்களச் சிறுவர் நாடகத்தைப் பார்த்தமையால் ஏற்பட்ட தாக்கத்தின் அடிப்படையில் ‘கூடிவிளையாடு பாப்பா’ என்ற சிறுவர் நாடகத்தை 1978 இல் அதன் தழுவலாக எழுதினார். இதற்கு முன்னர் இவர் ‘அருமை நண்பன்’, ‘வையத்துள் தெய்வம்’, ‘கண்ணிலான்’, ‘அன்னத்துக்கு அரோகரா’ என்ற நான்கு நாடகங்களை எழுதியிருப்பினும் இந்நாடகத்தில் (கூடிவிளையாடு பாப்பாவில்) இருந்தேஇவரது நாடக எழுத்துருவின் வடிவமாற்றம் நிகழ்கின்றது எனக்கொள்ளலாம். இதற்கு இவரது நாடக்கல்வியும் பார்த்த சிங்கள மொழி நாடகங்களும் காரணமாக இருந்துள்ளன. இதனைத் தொடர்ந்து சொந்த எழுத்துருக்களைப் படைப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தார். பளை மகாவித்தியாலயத் தில் இருந்து 1981 ஆம் ஆண்டு மீளச் செங்குத்தா இந்துக்கல்லூரிக்கு மாற்றலாகி 1986 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் பல்கலைக்கழகத்திற்கு நாடகக் கற்பித்தல் செயற்பாட்டில் இணையும் வரை சொந்த ஆக்கங்களை எழுதுவதையும் பாடசாலைத் தேவைகருதிய மொழிபெயர்ப்புச் செயற்பாடு களையுமே மேற்கொண்டிருந்தார். இக்காலங்களில் மொழிபெயர்ப்பென்பது கற்பித்தல் செயற்பாட்டின் ஓர் அம்சமாகவே இவரால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
1987 ஆம் ஆண்டில் தைமாதம் 05 ஆம் திகதி முழுநேரமாகப் பல்கலைக்கழகத்தில் நாடகக் கற்பித்தலில் ஈடுபடுவதற்காக பாடசாலையின் கற்பித்தல் செயற்பாட்டில் இருந்து (1987.01.04) ஓய்வு பெற்று பல்கலைக் கழகத்தின் நாடகக் கற்பித்தல் செயற்பாட்டில் தன்னை இணைத்துக்கொண்டார். அங்கு உலகநாடகங்களைப் கற்பிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. அக்காலத்தில் (1987ல்) பல்கலைக் கழகத்திலும் 1957 இல் இருந்த பாடசாலைக் கற்பித்தல் காலப்பகுதி போலவே நாடகம் பாடமாகத் தொடங்கப்பட்ட ஆரம்ப காலமாக இருந்தமையாலும் படிக்கும் மாணவர்களின் தேவை கருதியும் தனது தேவைகருதியும் ஆங்கிலத்தில் இருந்து நாடகங்களையும் நாடகம்சார் குறிப்புகளையும் தமிழ்ப்படுத்திக் கற்பிக்கத் தொடங்கினார். நாடகம் சார்ந்த ஓர் ஆங்கிலப் புத்தகத்தை இரண்டு வாரங்களில் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தனது கையெழுத்தில் எழுதிப் (போட்டோக்கொப்பி இல்லாத காலம்) பிரதி எடுத்த சம்பவமும் Play Directio பற்றிக்கூறுகின்ற ஒரு ஆங்கிலப் புத்தகத்தை முழுமையாக மொழிபெயர்ப் புச் செய்த சம்பவமும் நிகழ்ந்தது. இங்கும் சூழ்நிலைமையும் தேவையுமே இவரது மொழிபெயர்ப்பிற்கான காரணமாக முன்நின்றாலும் நாடக டிப்ளோமாவினால் பெற்ற அனுபவங்களும் நாடகம் சார்ந்த எழுத்துருவாக்க ஆர்வமும் இணையத் தொடங்கு கின்றன. இதன் காரணமாக நாடகங்களைப் புதிது புதிதாகக் கற்கும் கற்பிக்கும் ஆர்வம் மேற்கிளம்புகின்றது. இது பல்கலைக்கழகத்தில் இருந்து விலகும் 2004 ஆம் ஆண்டு வரை தொடர்;ந்தது. பல்கலைக் கழகத்தில் கற்பிக்கத் தொடங்கிய காலத்தில் ரஷ்ய நாடகங்களை உள்ளடக்கிய ஒரு தொகுதி (புத்தகம்) இவரிற்குக் கிடைத்தது. அதில் இவர் முன்னர் ரசித்துப் பார்த்த மகறரா(க்)கயா Play Directio நாடகமும் இதில் இருந்தது. பார்த்து ரசித்த விருப்பம் உள்ளிருந்து உந்தித்தள்ள 1987 இல் வேதாளம் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்படுகின்றது. இந்த நாடகம் பின்னர்,2002ஆம் ஆண்டளவில் க.ரதிதரன் அவர்களால் சுருக்கப்பட்டு அவரது நெறியாள்கையில் மேடையேற்றப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சிறுவயதில் நீர்கொழும்பில் இருக்கும் காலங்களில் யாராவது பிறநபர்கள் இவரது வீட்டுக்குவந்தால் இவர் ஓடி ஒளித்துவிடும் இயல்பு கொண்டவராக இருந்துள்ளார். படிக்கும் காலங்களிலும் நண்பர்களைப் பெற்றிருக்கவில்லை. குறிப்பிட்ட வயதுகளில் வீட்டில் தனது உறவுகளோடு விளையாட்டில் ஈடுபடும் தன்மை இருந்தாலும் பெரும்பாலும் தானும் தன்பாடும் எனவே இயங்கி வந்துள்ளார். வீட்டில் தனிமையில் பொழுது போக்குவதை விரும்பாத தாயார், பொம்பிளைப் பிள்ளைகளைப் போல வீட்டுக்குள்ளேயே கிடக்கிறான். இவனை எங்காவது வெளியில் கூட்டிப்போகுமாறு உறவினர் வேலாயுதத் திடம் சொல்ல அவர் இவரை திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கத்திற்கு அழைத்துச் சென்றார். ஆரம்பகாலங்களிலேயே தனிமையை விரும்பும் இவ்வியல்பு ஒரு நடத்தையாக இவரிடத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய, தனிமையை இயல்பாகவே விரும்புகின்ற, நாடுகின்ற தன்மை இவரது படைப்புகளின் உருவாக்கத்திற்கும் ஒரு முக்கியமான அடிப்படையாக இருந்து வருகின்றது எனக் கருதத்தோன்றுகின்றது. பட்டம் பெற்று வந்து ஆசிரியப்பணியில் ஈடுபடும் பொழுதுகளில் வீட்டிலிருந்த தனிமையைப் பயன்படுத்தி ‘அருமை நண்பன்’ உருவாக்கம் பெறுகிறது. பின்னர் 1961 இல் திருமணம் செய்து தனது மனைவியாரின் உடுவில் இல்லத்தில் இருக்கும் போது (அக்காலங்களில் இவர் நாடகத்துறையில் பிரபல்யமாக வில்லை) வேலையும் இந்து வாலிபர் சங்கமும் நாடகமும் கலையரசரின் தொடர்பும் என குறிப்பிட்ட நேரங்களில் வெளிமுகமாக இயங்கினாலும் வீடுதிரும்பியதும் பெரும் பகுதியை இவரது இயல்புக்கேற்ப தனிமையிலேயே கழிக்க வேண்டியிருந்தது. அங்கிருக்கும் தனிமையைப் போக்க வள்ளுவரை மையப்படுத்தி ‘வையத்துள் தெய்வம்’ மகாபாரதத்தை அடியொற்றி ‘கண்ணிலான்’ போன்ற படைப்புகளைப் படைகின்றார். மீள 1972 இல் திருநெல்வேலி வந்தும் இவ்வகையிலேயே 1975 வரை இயங்கி வந்தார். இந்நிலையில் 1973 இல், 12 வருடம் கழித்தே தான் எழுதிய ‘வையத்துள் தெய்வம்’ நாடகத்தை பயத்தோடு வெளிப்படுத்த அது நண்பர்களால் சிலாகிக்கப்பட்டு மேடை ஏறுகின்றது.
காலப்போக்கில் நாடகத்துறையில் நன்கு அறியப்பட்டு தொடர்ச்சியான நாடகப்பயிற்சி பட்டறைகளும் நாடக மேடையேற்றங்களும் சொந்த நாடக எழுத்துருக்களை உருவாக்குவதும் படிப்பிப்பதும் எனப் பல்வேறு வெளிமுகநோக்குகள் உருவாகுகின்றன. அவை உள்ளத் தனிமையைத் திருப்திப்படுத்தும் நிவாரணங்களாக அமைந்து விடுகின்றன. இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டமையானது தந்தையின் இயல்புக் கேற்ப இவரிடம் காணப்பட்ட தனிமையில் இருத்தல் மற்றவர்களோடு கலகலப்பாக இருத்தல் என்ற இருவித இயல்பு நிலைகளையும் இவரில் வளர்த்து விடுகின்றன. இவரின் இந்த இருநிலைகளையும் இவரோடு நெருங்கிப்பழகுபவர்கள் அறிவர். இந்த வழிநின்று வேதாள மொழிபெயர்ப்பு நிகழ்ந்த 1987ச் சூழலை நோக்கினால் அது இந்தியராணுவத் தின் ஆட்சி அதிகாரத்தால் குழப்பமுறுகின்ற ஒரு காலமாக இருப்பதைக் கண்டுகொள்ள லாம். ஊரடங்குச்சட்டங்களும் யுத்தங்களும் என அக்கால நிலைமை மாறுகின்றது. வெளிமுகச் செயற்பாடுகள் குறைந்து உள்ளே முடங்கவேண்டிய சூழ்நிலைமையில் மனம் உள்முகம் கொள்கிறது 1978 களின் பின்னர் தொடர்ச்சியாக எழுதிய பழக்கமும் அதில் ஏற்பட்ட விருப்பமும் தனிமையில் உள்முகம் கொள்ள உள் மன ஆழத்தில் மறைந்திருந்த ‘வேதாளம்’ முதலாவது நாடக மொழிபெயர்ப்பாக வெளிவந்தது.
இவரது 50 வருடகால எழுத்துருவாக்கப் பின்புலம் குழந்தை ம.சண்முகலிங்கத்தின் நாடக பாடங்களினது பின்னல் முறைமைகளினூடாக வெளிப்படுத்தி நிற்கும் கால ஓட்ட அடிப்படையில் மூன்று கால கட்டங்களாக வகுக்க முடியும்.
- 1957 – 1977 – ஆரம்ப காலம் – இக்காலத்தில் ஏற்கனவே நிலவிய அரங்க முறைப்பாங்கு செல்வாக்குச் செலுத்தியது அதாவது எழுத்து நடையின் அடிப்படையில் அண்ணாத்துரை முறைமை காணப்பட்டது.
- 1977 – 1990 – இடைக்காலம் – பட்டப்படிப்பின் படிப்பு கற்கை நெறியும், அரங்கு பற்றிய புதிய அநுபவங்களும் எழுத்துருவாக்க உருவ, உள்ளடக்கங்களை மாற்றியது.
- 1990 பின் – தற்காலம் இக்காலகட்டத்தில் அரங்கின் பல்பரிமாணத் தேடல் காரணமாகப் புதிய ஆக்கங்கள் வெளிவந்தன. குறிப்பாய் 41வருடத்தேடலில் ‘வேள்வித் தீ’ எனும் நாடக பாடம் உருப்பெற்றது. தமிழ் அரங்கிற்கான அநேக பண்புகள் இந்நாடகத்தில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
இவர் தனது நாடகங்களைப் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களிற்காகப் படைப்பாக்கம் செய்துள்ளார். பாடசாலை/பல்கலைக்கழகம்/மன்றங்கள் (T.V/M.H.A) இலக்கிய நிறுவனங்கள் (கம்பன் கழகம்) – போன்றவற்றை உதாரணங்களாகக் குறிப்பிடலாம் ‘எந்தையும் தாயும்’ என்ற நாடகம் வெளிநாட்டில் வசிக்கும் தனது மகனின் வேண்டுதலின் பேரிலேயே முதலில் எழுதப்பட்டது. அத்தோடு நாடக பாடங்களை எழுதும் முறையிலும் இவரிடம் மூன்று வகையான தன்மைகள் காணப்படுகின்றன.
- தனியே எழுதுதல் – ‘வையத்துள் தெய்வம்’ (நாடகம்)
- இருவர் கலந்துரையாடித்தான் எழுதுதல் – வைத்திய கலாநிதி சா. சிவயோகனுடன் கலந்துரையாடி ‘காட்டாதன எல்லாம் காட்டி’ என்ற ஒராளரங்க நாடகத்தை எழுதினார்.
- குழு கலந்துரையாடலின் பின் தான் எழுதுதல் – இங்கு ஒரு விவாதவகை ‘Foramtheatre’ (விவாதக்கள அரங்கு) முறை கையாளப்படும் எனலாம். பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மாணவர்களுடன் கலந்துரையாடி முதியோர் பிரச்சினைகளை ‘நீ செய்த நாடகமே’ என்ற நாடகமாக வடிவமைத்தார். அதே போல் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடி ‘உள்நின்று ஒளிரும் சக்தி’ என்ற நாடகத்தை வடிவமைத்தார்.
குழந்தை ம.சண்முகலிங்கத்தின் நாடக பாடங்கள் ஒவ்வொன்றினதும் பிரத்தியேக தன்மைகளின் அடிப்படையில் கீழ்வருமாறு வகைப்படுத்தலிற்குட்படுத்தி நோக்க முடியும். குறிப்பாக பத்துப் (10) பிரிவுகளாக அவதானிக்கலாம்.
- அண்ணாத்துரை வடிவம் சார் நாடகம் (தமிழ் நாட்டு தி.மு.க.வின் பாணி இதில் செல்வாக்குச் செலுத்துவதை அதன் மொழி நடையூடாக அவதானிக்கலாம். ‘அருமைநண்பன்’ (1957) என்ற நாடகத்தில் வரும் உரையாடல்.
‘ஆனந்தன் : நான் யார் உன்னை ஏற்பதற்கு நீ எனக்கு ஒரு குற்றமும் செய்யவில்லை: ஆனால் உன் தந்தைக்கு மாபெரும் குற்றம் செய்து விட்டாய். ரவி … சிந்தித்துப்பார் …. உன் வாழ்க்கையின் ஏடுகளைப் புரட்டிப்பார். சின்னஞ் சிறுவயது தொடக்கம் செல்லம் தந்து வளர்த்த உன் தந்தையைப் பார்’ – இம்மொழி நடையில் அண்ணாத்துரையின் பங்குண்டு:-
- வரலாற்று வடிவ நாடகம்: அரச நாடகங்களில் கையாளப்படும் செந்தமிழ் மொழி இங்கு கையாளப்பட்டிருக்கும். திருவள்ளுவரை மையமாகக்; கொண்டு எழுதப்பெற்ற ‘வையத்துள் தெய்வம்’ (1961)
- கதையோட்ட நாடகம்: இங்கு கதை படிப்படியாக நகர்ந்து சற்று உச்சம் எய்தி முடிவுறும் – “உறவுகள்” (1982) ‘உறவுகள்’ நாடகத்தின் இறுதி மேடைக்குறிப்பு வருமாறு: ‘கௌரி தன் வீடு நோக்கி நிதானமாகச் செல்கிறாள். வேலுப்பிள்ளை திடீரென எழுந்து நின்று அவள் செல்லும் திசையை பெருமையோடு பார்த்து நிற்கிறார்.’
- உரைஞர் முறை நாடகம் இதில் அநேகம் உரைஞரது முதன்மையே மேலோங்கி இருக்கும். அதாவது நாடகத்தின் நகர்வு உரைஞர்களது கருத்துரைப்புகளோடு அசையும். இவர் எழுதிய நாடகங்களில் அநேகமானவை உரைநடையை முதன்மைப்படுதியதாக இருக்கும். – ‘நெடும் பயணம்’ – 1979 ‘மண்சுமந்த மேனியர்’ – 1985 என்பவை உதாரணங்களாகும்.
- குறியீட்டு நாடகம்: குறியீடு என்பது ஒன்று இன்னொன்றாக ஆக்கும் முறைமையாகும். இவரது நாடகங்களில் குறியீட்டுக் கையாட்சி மிக அதிகம். எனினும் முழுப்பெறுமானமும் குறியீடாக இருக்கும் நாடகங்களையே இதனுள் அடக்கிக் கொள்ள முடியும். ‘வாற் பேத்தைகள்” – 1996 ‘தாயுமாய் நாயுமானார்.’ – 1986 போன்ற நாடகங்கள் இதற்கு உதாரணங்களாகக் கொள்ளலாம். ‘தாயுமாய் நாயுமானார்’ நாடகத்தல் ஒரு பெண்ணை பாறைபோல் புரட்டல், நாய்க்குட்டி பற்றிய உரையாடல், முட்கம்பி வேலி என்பன குறியீட்டை வெளிப்படுத்தி நி;ற்கின்றன.
- பத்திரவுருவாக்க நாடகம் குறிப்பாக ஒவ்வோர் பாத்திரங்களும் வெவ்வேறான குணாம்சங்களைப் படிப்படியாக வெளிப்படுத்தி நிற்கும் தன்மை இதனைக்காட்டும். இடைக்காலப்பகுதியில் இவரிடம் அதிகம் செல்வாக்குச் செலுத்திய துண்டுதுண்டான சம்பவங்களின் இணைப்பு மூலம் உருவான நாடக முறை மாறி கதையையும் அதனுடன் கூடிய பாத்திர உருவாக்கத்தையும் கொண்டுள்ள நாடகங்கள் குறித்த காலத்தின்பின் தோன்றியது. அவ்வகையில் “எந்தையும் தாயும்” – 1992, “உள்ளக் கமலமடி” – 1992, “ஆரொடு நோகேன்” – 1994 போன்றவற்றைக் குறிப்பிடலாம். ‘எந்தையும்தாயும்’ நாடகத்தில் வரும் பெரியையா பாத்திரமும்: ‘ஆரொடுநோகேன்’ என்பதில் வரும் பல்வகைக்குணம் கொண்ட பிள்ளைகளும் பெற்றோரும்: ‘நீ செய்த நாடகமே’யில் வரும் வெவ்வேறு பண்புகள் கொண்ட பல விதமான முதியோரும் – பாத்திரம் பற்றி பிரக்ஞை பூர்வமான ஒரு வெளிப்பாடு தோன்றி இருந்ததைக் காட்டும்.
- உளச்சிகிச்சை நாடகம். நாடகம் மனிதர்களது மனோவியலில் ஏற்படும் உணர்ச்சிகளின் இடர்ப்பாடுகளை வெளிப்படுத்த அல்லது இனங்காண உதவுகிறது. இதற்கான ஆரம்பக்களன் அரிஸ்ரோற்றல் குறிப்பிடும் கதாசிஸ் (Catharsis) மூலமே கால்வைத்து விரிய ஆரம்பித்தது எனலாம். அதேபோற் பரதரின் நாட்டிய சாஸ்திரம் கூறும் ரசம் எனபதும் கதாசிஸ் போன்றதொன்றே.: எவ்வாறாயினும் காரணம் புரியாது உள்ளடங்கிப்போய் இருக்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு உத்தி முறையாகவே “அன்னை இட்ட தீ” (1991) என்ற நாடகம் ஆக்கப்பட்டது. யுத்த விளைவுகட்குட்பட்ட மக்களின் உள்ளத்தை அந்த நாடகம் காட்டியது. தங்களுடைய தாக்கங்களைத் தாங்களே இனங்கண்டனர். இது உடனடியான உளவளச் சிகிச்சையாகவும் அமைந்து விடுகிறது.
- சிறுவர் நாடகங்கள்: மூன்று வகையான பண்புகள் இவரது நாடகங்களில் காணப்படுகின்றன.
- சிறியோர்க்காக பெரியோர் நடித்தல் – “கூடி விளையாடு பாப்பா” (1978)
- சிறியோர்க்காக சிறியோர் நடித்தல் – “முயலார் முயலுகிறார்”
- சிறியோர்க்கு ஆக சிறியோரும் பெரியோரும் கலந்து நடித்தல் –“இடுக்கண் வருங்கால்”–1998
இவரது சிறுவர் நாடகங்கள் சிறுவர்க்கான நிறைந்த பொழிப்புகளை தரவல்லன. சிறுவர் நடகங்களில் – ஒரு சிறுவர், கதை பாடல்ஃஆடல் / மிருகங்களும் மனிதரும் / பகிடிகள் / சிறுவர் மனதில் ஆழமாக வேண்டிய சிந்தனைகள்ஃ ஒன்றுபடுவதான முடிவு – போன்ற விடயங்கள் பொதிந்து காணப்படும். சிறுவருக்கு ஏற்றளவான உளவியற் பண்பைக் கவனத்தில் எடுத்து, சிறுவர் நாடகத்தி;கான சரியான வடிவத்தை ஈழத்துத் தமிழ் நாடக மரபிற்கு வழங்கியமையும் முக்கியமானதொரு குறிப்பாகும்.
மொழிபெயர்ப்பு நாடகம்: இவரது மொழி பெயர்ப்பில் இருக்கும் சிறப்பு யாதெனில் ஆங்கிலம் அச்சொட்டான தமிழ் வடிவமாதலாகும். இதனால் ஆங்கில நாடாக இலக்கிய நுகர்ச்சியில் ஏற்படும் அதே உணர்வு நிலை, தமிழிலும் வாசிக்கும் போது ஏற்படுவது கவனத்திற் கொள்ளத்தகுந்தது. அதே வேளை ஆற்றுகையிற் சில நடைமுறை இடர்களை எதிர்நோக்க வேண்டி இருந்தது. “வேதாளம்” – 1987” “மன்னன் ஈடிப்பஸ்” – 1996 “ஒரு பாவையின் வீடு” – 1997 – போன்றன மொழி பெயர்ப்பு நாடகங்களிற்கு உதாரணங்களா கும். “மன்னன் ஈடிப்பஸ், “ஒரு பாவையின் வீடு” என்பன க.பொ.த. (உயர்தரம்) நாடகமும் அரங்கியலும் கற்கைநெறி மாணவர்களின் விதந்துரைக்கப்பட்ட பாடநூலாக இருந்துள்ளமையும் குறிப்பிடத்தகுந்தது. அதேவேளை இவ்விரு மொழிப்பெயர்ப்புப் படைப்புகளும் மேடையில் ஆற்றுகையாகப் பரிணாமம் பெற்றலும் கவனத்திற்கு கொள்ளத்தகுந்ததாகும்.
- 40வருட அரங்க அனுபவத்தின் பெறுபேறாய் அமைந்த ஈழத்துத் தமிழ் நாடகத்திற்கான மாதிரி வடிவத்தின் வருகை: “வேள்வித் தீ” – 1994
இவரது படைப்புகள் யாவற்றிலும் ‘வேள்வித் தீ’ நாடகத்திற்கு ஒரு தனிச்சிறப்புண்டு: இவர் முன்பு எழுதி ஆற்றுகை செய்த நாடகங்களின் உத்திகளினதும் நுட்பங்களினதும் கூட்டுச்சேர்வாக இது அமைந்துள்ளது. இக்கூட்டுச்சேர்விற்கான நாடக நீட்சிகள் சிலவற்றைக் கீழே குறிப்பிட முடியும்.
இவ்வாறான படைப்புலகப் பின்புலத்தினடிப்படையில் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களின் எழுத்துருக்களைப் பின்வருமாறு பட்டியலிட முடியும். குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களது எழுத்துருக்கள் பற்றிய ஒழுங்குமுறை சாராத பட்டியல் இதுவாகும். (2019 –கார்த்திகைவரையான இப்பட்டியல் முழுமையானது அல்ல.)
குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் எழுதிய ஓராள் அரங்கப் படைப்புகள்.
சுகானுபவம்
பதியெழு அறியாப் பழங்குடி
காட்டாதன எல்லாம் காட்டி
சகுனம் சரியில்லை
ஒட்டகம்
இனந்தெரியாதவர்
மாந்தோப்பு மயானம்
அம்பலத்தார்
சந்தனம் மெத்தினால்
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
அலகில் சோதி
சித்தம் அழகியார்
வானமும் வையமும்
வானுறையும் தெய்வம்
கட்டிளமை
முதுநிலை நூலகங்கள்
நான் பிரம்மம்
மூத்தகனவு
குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் எழுதிய நாடகங்கள்
அகம் பிரம்ம்
அன்னத்திற்கு அரோகரா
அரக்கு மாளிகை
அன்னையிட்ட தீ
அம்மையே அப்பா
அருமை நண்பன்
ஆரொடு நோகேன்
இப்போதைக்கேது வழி
ஈடில்லா வாழ்வு
உறவுகள்
உள்ளக்கமலமடி
உள்நின்ற ஒளிரும் சக்தி
எங்கள் தவப்பயன்
எந்தையும் தாயும்
எரிகின்ற தேசம்
எனக்குத் தெரியும்
ஐந்தொகை அல்லது இருப்பெடுப்பு
ஓட்டாண்டிகள்
ஓளிவளர் விளக்கே
கனவு மெய்ப்பட வேண்டும்
கண்ணிலான்
குருவே சரணம்
ஞாயிறு போற்றுதும்
ஞானாக்கினி
சகலகலாவல்லியே
சத்திய சோதனை
சிந்திப்பவர் தம் சிந்தைக்கு
சிலம்பொலி
சிலையின் சீற்றம்
சூடக்கொடுத்த சுடர்க்கொடி
புள்ளி எழுந்திடுவீர்
பராதீனர்கள்
பாரதியின் பாஞ்சாலி சபதம்
பிறை தழுவிய பௌர்ணமி
புகலிடம் பிறிதொன்றில்லை
புனித ஒளி
புழுவாய் மரமாகி
புஷ்பாஞ்சலி
பெண்சாதி
மனத்தவம்
மண்சுமந்த மேனியர் – 1
மண்சுமந்த மேனியர் – 2
மனவிலங்கு
மாதொருபாகம்
மானுடம் வெல்லும் வரை
மெய்ஞானபோதம் அல்லது அவஞானபோதம்
தண்டாயுத பாணிகள்
தாயுமாய் நாயுமானார்
திரிசங்கு சொர்க்கம்
திருப்பள்ளி எழுச்சி
தியாகத் திருமணம்
திக்குவிஜயம்
நரகொடு சுவர்க்கம்
நமக்கெது வேண்டும்
நரகத்தில் இடர்படோம்
நாம்பேசும் வழி
நாட்டுப் பரியாரி நல்ல கதை சொல்லவில்லை
நெடும்பயணம்
நேயத்தே நின்ற நிமலம்
நேரகாலம்
வர்க்கமூலம்
வையத்துள் தெய்வம்
வேள்வித் தீ
வீதி நாடகம் பாதயாத்திரை
யார்க்கெடுத்துரைப்பேன்
குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் எழுதிய சிறுவர் நாடகங்கள்
அன்னத்தடாகம்
அன்னையும் பிதாவும்
ஆச்சி சுட்ட வடை
ஆத்துக் கட்டை
இடுக்கண் வருங்கால்
ஏங்கள் காவல்
ஓற்றுமையின் சின்னம்
ஒரு பூனையின் விலை என்ன?
கண்டறியாத கதை
கண்மணிக் குட்டியார்
காட்டு ராஜா சிங்கம்
குழந்தை பாவனை செய்யும்
குளத்து மீன்கள்
சுpட்டுக் குருவி
கூடி விளையாடு பாப்பா
கூடிவாழ்வோம்
செல்லும் செல்லாததுக்குச் செட்டியார்
பஞ்சவர்ண நரியார்
பந்தயக் குதிரையார்
பண்பும் பயனும்
பாலுக்குப் பாலகன்
பொய்கெட்டு மெய்யானார்
மந்திரத்தால் மழை
தாய் சொல்லைக் கேட்போம்
தீராத விளையாட்டுப்பிள்ளை
வால் பேத்தைகள்
வேட்டைக்காரன்
வாய்மையின் வெற்றி
முயலார் முயல்கிறார்
நட்பு
குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் எழுதி வெளிவந்த நூல்கள்
முயலார் முனைகிறார்
எதிர்கொள்ளக் காத்திருத்தல்
பஞ்சவர்ண நரியார்
கண்டறியாத கதை
எந்தையும் தாயும்
ஆர்கொலோ சதுரர்
மண்சுமந்த மேனியர்
அன்னையிட்ட தீ
நாடக வழக்கு
அன்டிகனி
ஆரொடு நோகேன்
ஒரு பாவையின் வீடு
வெண்கட்டி வட்டம்
ஐராங்கனி
மன்னன் ஈடிப்பஸ்
குழந்தை ம.சண்முகலிங்கத்தின் ஐந்து நாடகங்கள்
குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் எழுதிய கூத்து
எதிர்கொள்ளக் காத்திருத்தல்
நல்ல மேய்ப்பர்
உன் அயலவன் யார்
உள்ளவனுக்குக் கொடுக்கப்படும்
வெள்ளி நாணயம்
திருந்தித் திரும்பிய மைந்தன்
தந்தையே இவர்களை மன்னியுங்கள்
குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் எழுதிய இசை நாடகம்
கண்டனன் சீதையை (இராம நாடகம்)
குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் எழுதிய நாட்டிய நாடகங்கள்
அளப்பருங்கருணை
ஆர்கொலோசதுரர்
ஆடிக்கொண்டார்
குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களது மொழிபெயர்ப்பு நாடகங்கள்
துறவி
வசந்தகாலச்;சக்கரம்
மன்னன் ஈடிப்பஸ்
கொலொனொஸில் ஈடிப்பஸ்
அன்டிகனி
கட்டுண்டபுறொமீதியஸ்
அகமெம்னன்
படையல் பானம் ஏந்திச் செல்வோர்
ஒருபாவையின் வீடு
செரிப்பழத் தோட்டம்
அந்திமாலைப் பாடல் ஒன்று
தான் விரும்பாத் தியாகி ஒருவர்
திருமணம்
பட்டிக்காட்டான்
இந்திரன் தீர்;ப்பு
மடொன்னாடயநோறா
வெவ்வேறுவழிகளில் அமைதி
அன்பமுதூறும் அயலார்
உலைவைப்போர்
வீரத்தாயும் அவளது பிள்ளைகளும்
கோக்கேசிய வெண்கட்டி வட்டம்
இரவலன் அல்லது இறந்து போன நாய்
முடிவாட்டம்
வர்த்தைகளற்ற நடிப்பு
கொடோவுக்காகக் காத்திருத்தல்.
வெண்கட்டி வட்டம். (சீனநாடகம்)
பிரித்தெடுப்பு
மேற்கின் அரசமாதா (சியோபோ)
கனெஹிரா
செக்கிடெராவில் கொமாச்சி அல்லது (செக்கிடெராகொமாச்சி)
செமிமறு
ஷோ(க்)குன்
நக்கமிட்சு(மஞ்சு)
புசு
துயரத்தின் பறவைகள்
சிவப்புவிளக்கு
ஐராங்கனி
ஒருவிற்பனையாளனின் மரணம்
சுணைக்கேடு
வேதாளம்
இருளார்ந்தயுகம்
முன்னம் சிறப்புறவாழ்ந்தார்கள்
கடலருகே இரு சிறுமுயல்களும் கழுதையொன்றும்
வீதிகள்!பாதைகள்! வழிகள்! தெருக்கள்!
பறத்தல் மறந்த பறவைகள்
அந்திமாலைமுதல் புலர்காலைவரை
மன்னன் லியர் (மொழிபெயர்ப்பில்)
ஹ(ப்)போவும் அவரது மகள் சுஜியும்
திங்கள் இரண்டின் ஞாபகம் ஒன்று
குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் எழுதிய ஏனைய பிரதிகள்
ஆண்டு நூறு வாழ்ந்த பாரதி – வில்லுப்பாட்டு
உன்கையில் பிள்ளை – உரையிடைப்பட்ட பாட்டு
ஒப்படைப்பு – உரையிடப்பட்ட பாட்டு
பரவெளிக்காதல் – உரையிடப்பட்ட பாட்டு
யாதும் ஊரே – வானொலி நாடகம்
வேலும் மயிலும் – வானொலி நாடகம்
நாய்பாடாப்பாடு – தொலைக்காட்சி சலனசித்திர எழுத்துரு
புஷ்பாஞ்சலி – தொலைக்காட்சி சலனசித்திர எழுத்துரு
Hospitality –ஆங்கில நாடகம்
Whome to be blamed –ஆங்கில நாடகம்
The Strange Shoe –ஆங்கில நாடகம்
Mr.Rabbitis is Trying –ஆங்கில நாடகம்
குழந்தை ம.சண்முகலிங்கம் நாடகங்களில் செய்து காட்டல், கதை கூறல், கதையோட்டம், பண்பாட்டுத் தன்மைகள், குறியீட்டுக் கையாட்சி, உரைஞர் பயன்பாடு பாத்திரவுருவாக்கம், நடனம், தீர்வைவிடப் பிரச்சனையைப் போடுதல் – போன்ற பண்புகள் இருப்பதனாலேயே புதிய தமிழ் நாடகத்தின் தோற்றுவாயாக இவரைக்;கொள்ள முடிகிறது.
குறிப்பு : இக்கட்டுரையானது சுன்னாகம் அவைக்காற்றுகைக்குழுவினால் 1999இல் வெளியிடப்பட்ட கல்யாணி என்னும் நாடக அரங்கியலுக்கான காலாண்டுச் சஞ்சிகையின் முதலாவது இதழில் க.ரதிதரன் அவர்களால் எழுதப்பட்ட ஈழத்து, தமிழ் அரங்கின் தோற்;றுவாய் குழந்தை ம. சண்முகலிங்கம் என்னும் கட்டுரையிலிருந்தும், 2019 மார்கழி ஜீவநதி, குழந்தை ம.சண்முகலிங்கம் சிறப்பிதழுக்காக திரு நா.நவறாஜ் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையிலிருந்தும் பகுதிகள்;; பெறப்பட்டு இருவரினதும் அனுமதியோடு இக்கட்டுரை மா.அருள்சந்திரனால் தொகுக்கப்பட்டுப் பதிவிடப்பட்டுள்ளது. மேற்படி கட்டுரையாளர்கள் இருவருக்கும் தொகுப்பாளராகிய எனது மனமார்ந்த நன்றி.
க.ரதிதரன், கல்யாணி நாடக அரங்கியலுக்கான சஞ்சிகை, சுன்னாகம் அவைக்காற்றுகைக்குழு,1999
நா.நவராஜ், உளவளத்துணையாளர்;, ஜீவநதி, குழந்தை ம.சண்முகலிங்கம் சிறப்பிதழ், 2019 மார்கழி.