1945.05.16 ஆம் நாள் யாழ்ப்பாணம்- மூளாய் என்னும் இ;டத்தில் பிறந்தவர். மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளிலும் நாதஸ்வரம் வாசித்துப் புகழ்பெற்றவர். நாதஸ்வரக் கலையில் மேதையான இவருடைய நாதஸ்வர வாசிப்பானது ஸ்வரசுத்தமும், லய சுத்தமும், விவகாரமும் பிரகாசங்கதிகளும் நிறைந்த சுகமுடைய வாசிப்பாக அமைந்திருக்குமென அன்பர்களாலும், ரசிகர்களாலும் வியந்து பேசப்பட்டமை கண்கூடு. கோயில் கிரியைகளிலும் சரி, இந்துக்களின் மங்கல வைபவங்களிலும் சரி இராகங்களை உரிய முறைப்படி வாசிக்கும் பழக்கமுடையவர். தவிற்கலைப்பேராசான் ஆ.வை. ஆறுமுகம் அவர்களின் புதல்வன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய கலைச்சேவைக்காக ஸ்வரநாதஜோதி, நாத கானபூபதி, நாதார்மிதக்கிரவுஞ்சம் போன்ற பல விருதுகள் வழங்கப்பெற்று கௌரவிக்கப்பெற்றவர். 1981.01.28 ஆம் நாள் கலையுலகை நீத்து நாதப்பிரம்மத்தோடு ஒன்றினார்